
சாதி தற்பெருமை தற்குறிகளுக்கும், ஆணவப் படுகொலைகளுக்கும் ஓங்கி ஒரு குட்டு வைத்திருக்கிறது கோபி – சுதாகர் குழுவின் ‘சொசைட்டி பரிதாபங்கள்’ வீடியோ.
இன்ஸ்டாகிராமிலும், யூடிப்பிலும் வியூவ்ஸ்க்காக வெறும் பொழுதுபோக்கு ஒன்றையே குறியாக வைத்து வீடியோக்களை அரங்கேற்றி வருவோருக்கு மத்தியில் சமூக அக்கறையுடன் ‘சொசைட்டி பரிதாபங்கள்’ வீடியோவை வெளியிட்ட கோபி -சுகாதகருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் பல குருபூஜைகள் நடக்கின்றன. ஒவ்வொரு குருபூஜைக்கும் பல ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப் படுகின்றனர். அந்த அளவுக்கு அந்த சமூகத்தின் இளைஞர்கள் அந்த நாளில் அட்ராசிட்டியில் ஈடுபடுகிறார்கள்.

அண்மையில் சேலம், நாமக்கல், ஈரோட்டில் நடு ரோட்டில் இளைஞர்கள் செய்த அட்ராசிட்டி வீடியோக்கள் வைரலாகி, சமூகம் எங்கே போய்க்கொண்டிருக்கிறது? என்கிற கவலையை ஏற்படுத்தி வருகிறது.
திருச்செங்கோடு ஆணவப்படுகொலையால் கைதானவரின் ஆதரவாளர்கள் நடுரோட்டில் போட்ட ஆட்டத்தால் பலரும் கவலை தெரிவித்து வருகின்றனர்.
இது மாதிரி சாதி பெருமை பேசி சீரழியும் இளைஞர்களை தோலுரிக்கும் விதமாகத்தான் அமைந்திருக்கிறது ‘சொசைட்டி பரிதாபங்கள்’ வீடியோ. அவர்களை தோலுரிப்பதோடு அல்லாமல் அவர்கள் தாங்கள் செய்யும் தவறை உணர்ந்து திருந்தி வாழ வேண்டும் என்பதாகத்தான் அந்த வீடியோவில் சொல்லப்பட்டிருக்கிறது.

’’இந்த உலகம் ரொம்ப பெருசு. அதில் பார்த்து ரசிக்க வேண்டிய நாடுகள் எத்தனையோ இருக்குது. நல்லா சம்பாதிச்சு அந்த நாட்டுக்கு எல்லாம் போய் சுற்றிப்பாருங்க. அரிவாளை தூக்கிக்கொண்டு நாலு சுவற்றுக்குள்ளேயே வாழ்க்கையை முடக்கிக்கொள்ளாதீர்கள்’’ என்று இளைஞர்களுக்கு அறிவுறுத்துகிறார்கள் கோபியும் சுதாகரும்.
ஆணவப்படுகொலை நடக்கும் போதெல்லாம், அவற்றை தடுக்க சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும் என்கிற கோரிக்கை எழும். நெல்லை கவின் ஆணவ படுகொலையில் இந்த கோரிக்கை வலுத்து வருகிறது. இதில் உயிரை இழந்த கவினுக்கு இரக்கம் காட்டுவதைக் காட்டிலும் கொலை செய்த சுர்ஜித்துக்கு ஆதரவாகவே சிலர் பேசி வருகிறார்கள்.

விளையாட்டில் சாதிக்க வேண்டிய சுர்ஜித் கைது செய்யப்பட்டிருப்பது கவலை அளிப்பதாகவே நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி சாட்டை துரைமுருகன் உள்ளிட்ட பலரும் பேசி வருவது அதிர்ச்சி அளிக்கிறது. பாதிக்கப்பட்டவர்கள் பக்கம் நின்று பேசுவதுதானே நியாயம்? அதை செய்திருக்கிறார்கள் கோபியும் சுதாகரும். ‘’இவண் வாழ்க்கையும் முடுஞ்சு போச்சு, அவன் வாழ்க்கையும் முடிஞ்சு போச்சு. இவுங்க ரெண்டு பேரையும் ஏத்தி விட்டானுங்க பாருங்க..அவுங்க நல்லா இருக்காங்க’’ என்று சொல்கிறர்கள்.
’’தப்பு பண்ணிட்டா, ‘அவசரப்பட்டுட்டான்’ன்னு யாராவது சொல்லுறாங்களா? அவன் மேலயும் ஒரு நியாயம் இருக்குல்லன்னு சொல்லுறாங்க.
என்னங்க நியாயப்படுத்திக்கிட்டு இருக்காங்க. சமுதாயம் எங்க போய்க்கிட்டு இருக்கு இப்ப?’’ என்று கேட்பதோடு அல்லாமல், ’’எவ்வளவோ நல்லது பண்ணலாம். போய் அதப்பாருங்க. தேவையில்லாம ஏன் உயிரைப்போட்டு வாங்குறீங்க? ’’ என்று பொட்டில் அடித்தது மாதிரி சொல்கிறார்கள் கோபியும் சுதாகரும்.
அதனால்தான், ’’பாதிக்கப்பட்டவன் பக்கம் நின்னு பேசுறதுக்கே ஒரு துணிச்சல் வேணும்னா. கோபி சுதாகர் அண்ணா உங்க சமூக அக்கறைக்கு வாழ்த்துக்கள்’’ என்று கொண்டாடுகிறார்கள் நெட்டிசன்கள்.

சாதி வெறியர்களால் இளைஞர்கள் எப்படி எல்லாம் தூண்டப்பட்டு அவர்களின் வாழ்க்கை சீரழிவதோடு அல்லாமல் சமூகமும் எப்படி சீரழிகிறது என்கிற சீரியசான விசயத்தை நையாண்டியாகச் சொல்லி சாடி இருக்கிறது சொசைட்டி பரிதாபங்கள்.
பெரும்பாலும் பொழுதுபோக்கு, YOUTUBE PAY – OUT என்பதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு இயங்கும் சமூக வலைத்தளங்கள் மத்தியில், எப்படி சமூக பொறுப்புணர்வோடும், துணிச்சலோடும் ஒரு கன்டென்ட் கிரியேட்டர் நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கு ஒரு பெஞ்ச் மார்க் செட் செய்த Parithabangal குழுவின் கோபி -சுதாகர் மற்றும் எடிட்டர், ஸ்கிரிப்ட் ரைட்டர் உள்ளிட்ட குழுவின் அனைத்து பிரிவுகளின் டெக்னீஷியன்கள் உள்ளிட்ட அனைவருக்கும் ‘SPARK MEDIA’ குழுமத்தின் சார்பில் ஒரு பூங்கொத்து.