அன்புமணியால் ஏற்பட்ட அதிருப்தியினால் பாமகவின் நிறுவனர் பொறுப்புடன், ஜி.கே.மணியிடம் இருந்து வாங்கி அன்புமணிக்கு கொடுத்திருந்த தலைவர் பொறுப்பையும் எடுத்துக்கொண்டார் ராமதாஸ்.
அன்புமணியின் தலைவர் பதவிக்காலம் முடிந்துவிட்டது என்று சொல்லித்தான் செயற்குழுவை கூட்டி தன்னை தலைவராக தேர்ந்தெடுத்துக் கொண்டார் ராமதாஸ். ஆனால், அன்புமணியோ தனது பதவிக்காலம் இன்னும் முடியவில்லை என்று சொல்லி வருகிறார். ராமதாஸ் – அன்புமணி இருவருமே பாமகவின் தலைவர் என்று சொல்லிக்கொள்வதால், அதிகாரப்பூர்வ பாமக எது? எழுகிறது. தேர்தல் நெருக்கத்தில் யாரிடம் கூட்டணி பேசுவது என்ற குழப்பம் உள்ளது.
இதற்கிடையில் அன்புமணி தேர்தல் ஆணையத்தில் ஆவணங்களை சமர்ப்பித்து பாமகவின் தலைவர் தான் தான் என்பதை உறுதிப்படுத்தி விட்டார்.

இதனால், போலி ஆவணம் கொடுத்து பாமகவை அபகரித்துவிட்டார் அன்புமணி. போலியான ஆவணங்களை கொடுத்தே தன்னை கட்சித்தலைவர் என அன்புமணி கூறி வருகிறார் என அன்புமணிக்கு எதிராக டெல்லி உயர்நீதிமன்றத்தில் ராமதாஸ் வழக்கு தொடர்ந்தார்.
அதாவது, 2022ல் தேர்ந்தெடுக்கப்பட்ட அன்புமணியின் பதவிக்காலம் 2025ல் முடிந்துவிட்டது. ஆனால், அன்புமணி, 2023ல் தான் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும், 2026ல்தான் பதவிக்காலம் முடிவதாகவும் போலி ஆவணத்தை கொடுத்து தலைவர் என்று சொல்வதாக குற்றம்சாட்டி, அதற்குரிய ஆவணங்களுடன் ராமதாஸ் நீதிமன்றத்தில் சமப்பித்ததால், எங்களிடம் உள்ள ஆவணங்களின் அடிப்படையில் அன்புமணியை தலைவராக ஏற்றோம். அதை வாபஸ் பெற்றுக்கொள்கிறோம் என்று பதிலளித்துவிட்டது தேர்தல் ஆணையம். அன்புமணிக்கு வழங்கப்பட்டிருந்த மாம்பழம் சின்னத்தையும் திரும்ப பெற்றுவிட்டது.
இதனால், ’’பாமக தலைவர் என்று அன்புமணி இனி சொல்ல முடியாது. இது எங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி’’ என்கிறார் ராமதாஸ் தரப்பு ஜி.கே.மணி.

இந்த பிரச்சனையில் தேர்தல் ஆணையம் ஒருதலைபட்சமாக நடந்துகொள்வதாகவும், அன்புமணிக்கு ஆதரவாக செயல்பட்டு ’’கட்சி திருட்டு” செய்வதாக ராமதாஸ் தரப்பு குற்றம்சாட்டி வருவதற்கு, கட்சியின் தலைவர் யார்? என்பதில் பிரச்சனை இருக்கிறது என்றால் ராமதாஸ் உரிமையியல் நீதிமன்றத்தை நாடலாம் என்றும் தெரிவித்துள்ளது டெல்லி உயர்நீதிமன்றம்.
அதே நேரம், கட்சியினர் இடையே நிலவும் பிரச்சனையில் தேர்தல் ஆணையத்தை யாரும் குறை கூற முடியாது எனவும் கூறி இருக்கிறது டெல்லி உயர்நீதிமன்றம்.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் தேர்தல் நடந்தால் பாமகவில் யார் அங்கீகரிக்கும் வேட்பாளரை தேர்தல் ஆணையம் ஏற்கும்? என்று நீதிமன்றம் எழுப்பிய கேள்விக்கு, ராமதாஸ், அன்புமணி இடையே பிரச்சனை தொடர்ந்தால் படிவ-ஏ, படிவம் – பி ஆகியவற்றில் இருதரப்பு கையெழுத்து போடுவதை தேர்தல் ஆணையம் ஏற்காது. பிரச்சனை தொடர்ந்தால் பாமகவின் சின்னம் முடக்கி வைக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

அங்கீகரிக்கப்படாத கட்சியின் உள் விவகாரங்களில் தேர்தல் ஆணையம் தலையிட முடியாது என்று சொல்லி, ராமதாஸ் தொடர்ந்த வழக்கை முடித்து வைத்துவிட்டது டெல்லி உயர்நீதிமன்றம்.
ஆனால் அன்புமணியோ, ‘’நான் தான் பாமக தலைவர். மாம்பழ சின்னமும் என்னிடம் தான் உள்ளது’’ என்கிறார். இதனால் அதிகாரப்பூர்வ பாமக எது? என்ற குழப்பம் நீடிக்கிறது. இதே நிலை தொடர்ந்தால் அடுத்து உரிமையியல் நீதிமன்றத்தை ராமதாஸ் நாடவும் வாய்ப்பிருக்கிறது.
