ஆளே இல்லாத கடையில் யாருக்கு டீ ஆற்றுகிறீர்கள்? அதுவும் ஏன் 170 டீ ஆற்றுகிறீர்கள்? என்று எடப்பாடி மீது என்.டி.ஏ. கடும் விமர்சனத்தை முன்வைத்திருக்கிறது.
ஜெயலலிதா காலத்தில் அதிமுகவில் 26 ஆயிரத்திற்கும் அதிகமான விருப்ப மனுக்கள் பெறப்பட்டு வந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி காலத்தில் அது 7 ஆயிரத்திற்கு சரிவைக் கண்டிருக்கிறது.
2016 சட்டமன்ற தேர்தலில் 26000க்கும் அதிகமான விருப்பமனுக்கள் அதிமுகவில் பெறப்பட்ட நிலையில் 2021 தேர்தலில் 9 ஆயிரத்துக்கும் அதிகமான விருப்பமனுக்கள் பெறப்பட்டுள்ளன. 2026 தேர்தலுக்கான விருப்பமனுக்களின் எண்ணிக்கையை பொறுத்தவரையில் 22.12.2025 வரையிலும் 7085 மனுக்களே விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதில் சுமார் 1500 மனுக்கள் எடப்பாடி பழனிச்சாமிக்காகவே கட்டப்பட்டுள்ளது. ஆரணி தெற்கு ஒன்றிய அதிமுக செயலாளர் ஜி.வி.கஜேந்திரன், ஒரு மனுவுக்கு ரூ.15 ஆயிரம் வீதம் 120 தொகுதிகளுக்கும் ரூ.18 லட்சம் செலுத்தி விருப்ப மனு கொடுத்திருக்கிறார். விருப்ப மனுக்களின் எண்ணிக்கையை கூட்டி காட்டிவதற்காக எடப்பாடியின் தந்திரம் இது என்கின்றனர்.

தொடர்ந்து 11 தேர்தலில்களில் தோல்வியைச் சந்தித்து வரும் பழனிசாமியின் மீது நிர்வாகிகளும் தொண்டர்களும் நம்பிக்கையை இழந்தது ஒரு பக்கம் இருக்க, வலுவான கூட்டணியை அமைக்கிறேன் என்று சொல்லிவிட்டு இதுவரையிலும் வலுவான கூட்டணியை அமைக்காததாலும் தொண்டர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
அதனால்தான் 26 ஆயிரத்தில் இருந்த அதிமுகவின் விருப்ப மனுக்கள் இன்றைக்கு 7 ஆயிரத்திற்கு சரிந்திருக்கிறது.
நிலைமையை சமாளிக்கவே, அதாவது விருப்ப மனுக்களை அதிகரித்து காட்டுவதற்காகவே விருப்ப மனு கால அவகாசத்தை எடப்பாடி நீட்டித்திருக்கிறார் என்கிறார்கள்.
தமிழ் நாடு, புதுச்சேரி மற்றும் கேரள மாநில சட்டமன்றப் பொதுத் தேர்தல்கள் -2026 விருப்ப மனுக்கள் பெறுவதற்கான கால அவகாசம் நீட்டித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார் எடப்பாடி.

தமிழ் நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல்; புதுச்சேரி மற்றும் கேரள மாநில சட்டமன்றப் பொதுத் தேர்தல்கள் விரைவில் நடைபெற உள்ளதை முன்னிட்டு, அதிமுக சார்பில் வேட்பாளர்களாகப் போட்டியிட விரும்புகின்ற கழக உடன்பிறப்புகள், தங்களுடைய விருப்ப மனுக்களை தலைமைக் கழகத்தில் 15.12.2025 முதல் 23.12.2025 வரை வழங்கி இருக்கும் நிலையில், கழகத்தின் சார்பில் விருப்ப மனுக்கள் பெறுவதற்கான கால அவகாசத்தை நீட்டித்துத் தருமாறு கழக நிர்வாகிகளும், கழக உடன்பிறப்புகளும் தொடர்ந்து விடுத்து வரும் வேண்டுகோளினை ஏற்று, 28.12.2025 – ஞாயிற்றுக் கிழமை முதல் 31.12.2025 – புதன் கிழமை வரை நீட்டித்துள்ளதாக சப்பைக்கட்டு கட்டுகிறார் எடப்பாடி என்கிறார்கள்.

இது ஒருபுறம் இருக்க, தாங்கள் கேட்ட 75 தொகுதிகளை தராமல், அதிமுக 170 தொகுதிகளில் போட்டியிட்டே தீரும் என்று எடப்பாடி பிடிவாதம் செய்வதால், ஆளே இல்லாத கடையில் யாருக்கு டீ ஆற்றுகிறீர்கள்? அதுவும் ஏன் 170 டீ ஆற்றுகிறீர்கள்? என்று என்.டி.ஏ. தரப்பில் இருந்து எடப்பாடி மீது கடும் விமர்சனங்கள் எழுகின்றன.
