இந்திய அரசமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், அதன் மீது நாடாளுமன்றத்தில் நடந்த விவாதத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, நமது அரசமைப்புச் சட்டத்தின் மாண்புகள் குறித்து பேசியதைவிட, காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் நடந்தவை குறித்து கடுமையாகப் பேசுவதில்தான் அதிக அக்கறை காட்டினார். பா.ஜ.க. தொடர்ச்சியாக ஆட்சி செய்து வரும் நிலையில், தனது சாதனைகளைவிட காங்கிரஸ் ஆட்சி மீதான விமர்சனத்தைத்தான் தொடர்ந்து வைத்து வருகிறது என்பது பலருக்கும் தெரியும். குறிப்பாக, இந்தியாவின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேரு மீது பழி போடுவதில் பிரதமர் தொடங்கி அமைச்சர்கள் வரை வேகமாக இருப்பது வழக்கம்.
அரசமைப்புச் சட்டம் குறித்த விவாதத்தின்போதும் நேருவின் மீது தாக்குதல் தொடுத்தார் மோடி. அம்பேத்கர் உருவாக்கிய அரசியல் சட்டத்தை நேரு திருத்தியது என்பது அரசமைப்புச் சட்டத்தின் மாண்பைக் குலைத்த செயல் என்பதாக பிரதமரின் குற்றச்சாட்டு அமைந்தது. அரசியல் சட்டம் என்பது மக்களின் நலன் கருதியும் காலத்திற்கேற்ற வகையிலும் திருத்தங்களுக்கு உட்படக்கூடிய ஒன்றுதான். உலகின் பல நாடுகளிலும் இது கடைப்பிடிக்கப்பட்டே வருகிறது. பா.ஜ.க. அரசும் பல திருத்தங்களை செய்துள்ளது.
அரசியல் சட்டம் திருத்தப்படாமல் இருந்திருந்தால் தமிழ்நாட்டில் இன்றுள்ள 69% இடஒதுக்கீடு என்பது நடைமுறைக்கு வந்திருக்க முடியாது. பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர், பட்டியல் இன, பழங்குடி மக்கள் தங்களுக்கான கல்வி-வேலை வாய்ப்புகளைப் பெற்றிருக்க முடியாது. இந்திய அரசமைப்புச் சட்டத்தின் மகத்தான அந்தத் திருத்தத்திற்கு காரணமானப் போராட்டத்தை பெரியார் முன்னெடுத்தார். அண்ணா வழிநடத்தினார். காமராஜர் வலியுறுத்தினார். நேரு செயல்படுத்தினார். அம்பேத்கரும் இருந்தார். பிரதமர் மோடி தனது பேச்சில் நேருவை குற்றம்சாட்டுவதாக நினைத்து, அம்பேத்கர்-காமராஜர் உள்ளிட்டோரின் முயற்சிகளையும், தமிழ்நாட்டு மக்களின் உணர்வையும் சேர்த்தே சிறுமைப்படுத்த நினைக்கிறார் என்று குற்றம்சாட்ட முடியும்.
அரசியல் சட்டத்தை உருவாக்கும் குழுவுக்கு தலைமை வகித்த டாக்டர் அம்பேத்கரே பல முடிவுகளில் தனது அதிருப்தியை வெளிப்படுத்தி இருக்கிறார். மக்களின் முன்னேற்றம் கருதி கொண்டு வரப்படும் சட்டத் திருத்தங்களை நிறைவேற்ற முடியாத நிலையில், அரசியல் சட்டத்தை எரிக்க வேண்டியிருக்கும் என்றும் அவர் கூறியிருக்கிறார். சட்டங்களை நிறைவேற்ற முடியாத சூழலில் அமைச்சர் பதவியையும் அவர் ராஜினாமா செய்திருக்கிறார் என்கிற வரலாற்று உண்மையை மறந்து பிரதமர் பேசியிருப்பது காங்கிரஸ் மீதான அவரது காழ்ப்புணர்வு தவிர வேறில்லை.
அரசமைப்பு சட்ட விவாதத்தின் மீது பேசிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்தி, பா.ஜ.க. தனது முன்னோடித் தலைவராக ஏற்றுக்கொண்டுள்ள சாவர்க்கர் நமது சட்டம் பற்றி என்ன கருத்து கொண்டிருந்தார் என்பதை அவையில் எடுத்துரைத்து, பா.ஜ.க.வின் அரசமைப்பு மீதான அக்கறையின் போலித்தன்மையை அம்பலப்படுத்திவிட்டார். பிரிட்டிஷ் அரசாங்கத்தின் 1935ஆம் ஆண்டு அரசமைப்புச் சட்டத்தை மேம்படுத்தி உருவாக்கப்பட்ட இந்திய அரசமைப்புச் சட்டத்திற்குப் பதில், மனுஸ்மிருதியைத்தான் நமக்குரிய சட்டமாக வைத்திருக்க வேண்டும் என்பதுதான் சாவர்க்கரின் கருத்து. மனுஸ்மிருதி என்பது பிறப்பின் அடிப்படையில் மனிதர்களை வேறுபடுத்துவது. அரசமைப்புச் சட்டம் என்பது அனைத்து மனிதர்களுக்குமான உரிமைகளை வழங்குவது.
இதைத்தான் தி.மு.க.வின் எம்.பியான ஆ.ராசா அவையில் எடுத்துரைத்தார். பிரதமர் மோடி உள்ளிட்ட பா.ஜ.க.வினர், நெருக்கடி நிலை எனும் எமர்ஜென்சியை நடைமுறைப்படுத்தி அரசமைப்புச் சட்டத்தை தகர்த்தவர் இந்திரா காந்தி என்று நேருவைத் தொடர்ந்து இந்திரா மீதும் குற்றம்சாட்டினார். எமர்ஜென்சி என்பது இந்திய அரசமைப்புச் சட்டத்தின் மீதும், நாடாளுமன்ற ஜனநாயகம் மீதும் நடத்தப்பட்ட தாக்குதல் என்பது எல்லாருக்கும் தெரியும். ஒரு கட்டத்தில் இந்திராகாந்தியே அதை உணர்ந்து தனது வருத்தத்தை சென்னை கடற்கரையில் நடந்த கூட்டத்தில் தெரிவித்தார்.
எமர்ஜென்சி காலத்தின் அவலங்களை ஆ.ராசாவும் தனது உரையில் குறிப்பிட்டதுடன், அதில் சிறைப்பட்ட இன்றைய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது தந்தையான முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியிடம் என்ன சொன்னார் என்பதை நினைவுபடுத்தி, “எங்களுக்கு யாரும் பாடம் எடுக்கவேண்டாம்” என்றார். மேலும், எமர்ஜென்சி காலத்தில் ஜனநாயகத்திற்கு மட்டுமே ஆபத்து இருந்தது. தற்போது அரசமைப்புச் சட்டத்தின அடிப்படைக் கோட்பாடுகளான மதச்சார்பின்மை, சோஷலிசம் உள்ளிட்ட 6 கூறுகள் மீதும் தாக்குதல் நடத்தப்படுகிறது. இதுதான் மிகவும் ஆபத்தானது என்று ஆ.ராசா குறிப்பிட்டதை ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை உள்ள எம்.பிக்கள் அனைவருமே வழிமொழிந்தனர். மக்களவையில் ஆளுங்கட்சித் தரப்பிடம் பதில்கள் இல்லை. கூச்சல்தான் வெளிப்பட்டது.
அரசமைப்புச் சட்டத்தில் திருத்தங்கள் செய்யலாம். அடித்தளத்தைத்தான் அசைக்கக்கூடாது. பா.ஜ.க செய்வ விரும்புவது, கூடாத வேலையைத்தான்.