
சினிமா பிரபலங்களில் வாழ்க்கையில் நடக்கும் சாதாரண நிகழ்வுகளும் சிலாகித்துப் பேசப்பட்டும், சர்ச்சையாக்கப்பட்டும் வருவது வழக்கமான ஒன்றாகவே இருந்து வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் கெனீஷா பிரான்சிஸ் என்பவரைப் பற்றிய பேச்சுக்கள் சமூக வலைத்தளத்தில் வலம் வந்ததைப் பார்த்திருப்பீர்கள். யார் இந்த கெனீஷா பிரான்சிஸ்? என்பதைப் பற்றித்தான் பார்க்க இருக்கிறோம்.
இவரது பெயரைக் கேட்டதும் இவர் ஏதோ வெளிநாட்டைச் சேர்ந்தவர் என நினைக்கலாம். ஆனால், தான் ஒரு தமிழர் என அவரே ஒரு நேர்காணலில் கூறியுள்ளார். இவரின் அப்பா ஒரு தமிழர், அம்மா ஆப்ரிக்கர். இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளனர். கென்யாவில் பிறந்து வளர்ந்த இவர், பிறகு பெங்களூருவில் குடியேறியுள்ளனர்.
இவரது தாய் தந்தை இருவரும் பாடகர்கள் என்ற நிலையில், இயல்பிலேயே இவருக்கும் பாடும் பயிற்சி கிடைத்துள்ளது. இவரது தாய் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துடன் சேர்ந்து பாடியுள்ளதாக கெனீஷா ஒரு நேர்காணலில் தெரிவித்துள்ளார். மேலும் அவர்களது குடும்பம் இசைப் பின்னணியைக் கொண்டதினால், இயற்கையிலேயே தனக்கும் இசை ஆர்வம் வந்துவிட்டதாகக் கூறுகிறார்.

மேடைகளில் பாடுவது, ஆல்பம் வெளியிடுவது எனத் தனது பாடல் திறமையை பல்வேறு தளங்களின் மூலம் வெளிப்படுத்தியுள்ளார். அப்படி சில மாதங்களுக்கு முன்னர் ’இதை யார் சொல்வாரோ’ என்ற பாடலை பாடியுள்ளார்.
பாடல் மட்டுமின்றி நடனத்திலும் ஆர்வம் கொண்டு லத்தின் நடனத்தையும் கற்றுக் கொண்டுள்ளார். அப்படி 8 வகையான நடனம் பயின்றுள்ளார். பிறகு பாடும் போது ஆடிக்கொண்டே பாடத் தொடங்கியுள்ளார். தமிழ் மட்டுமின்றி ஆங்கிலம், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என ஆறு மொழிகளில் பாடல் பாடி வருகிறார்.
இதையெல்லாம் மீறி தன்னை ஒரு Spiritual Therapist என இன்ஸ்டாகிராம் பயோவில் குறிப்பிட்டுள்ளார். உளவியல் படித்த இவர் தன்னிடம் சிகிச்சை பெற வருபவர்களிடம் பேசுகையில் ஏதோ ஒரு வெறுமை தோன்றியதாகவும் , பிறகு அது என்ன என்பது பற்றித் தேடிய போது ஆன்மீகம் எனத் தெரிய வந்ததாகவும் கூறுகிறார். இதனைத் தொடர்ந்து வாஸ்து, ஜோதிடம், ஹுமாரா, லாமா எனப் பலவற்றைக் கற்றுக்கொண்டுள்ளார். இத்துடன் நிறுத்தாமல் ஹீலிங் தெரப்பியும் கற்றுள்ளதாகக் கூறுகிறார். இப்படிப் பல விஷயங்களை கெனீஷா பிரான்சிஸ் தன்வசம் வைத்துள்ளார்.