2026 தேர்தலில் களத்தில் இருப்பவர்களைத்தான் எதிர்ப்போம். களத்தில் இல்லாதவர்களையும், களத்திற்கும் அவர்களுக்கும் சம்பந்தம் இல்லாதவர்களையும் எதிர்ப்பதற்கான எந்த ஐடியாவும் இல்லை என்று ஈரோடு மக்கள் சந்திப்பில் பேசினார் தவெக தலைவர் விஜய்.
நேற்று முன் தினம் மலேசியாவில் ஜனநாயகன் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசியபோது, வலுவான எதிரிகளைத்தான் எதிர்க்கணும். சும்மா போறவுங்க வர்றவுங்கள எல்லாம் எதிர்க்க முடியாது என்று பேசினார் விஜய்.
மலேசியாவில் விஜய் பேசியது ‘பராசக்தி’ சிவகார்த்திகேயனைத்தான் என்று விஜய் ரசிகர்களே எடுத்துக்கொண்டார்கள். அதனால்தான் சிவகார்த்திகேயனுக்கு எதிராக அப்போது முழக்கம் எழுப்பினர்.

களத்தில் இல்லாதவர்கள் என்ற விஜய் பேச்சு சீமானைத்தான் குறிக்கிறது என்று சொல்ல, நான் எல்லா தேர்தல்களிலும் போட்டியிடுகிறேன். எல்லா களத்திலும் நிற்கிறேன். விஜய்தான் களத்தில் இல்லாதவர். தைரியம் இருந்தால் நாடாளுமன்றத் தேர்தலிலும் ஈரோடு இடைத்தேர்தலிலும் நின்றிருக்க வேண்டியதுதான் என்று ஆவேசப்பட்டார் சீமான்.
களத்தில் இல்லாதவர்கள் என்ற பேச்சு அதிமுகவை குறிக்கிறது என்று விமர்சனம் எழ, அதற்கு அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர்ராஜூ காட்டமாக பதிலளித்திருக்கிறார்.

அவர், ’’களத்தில் உள்ள கட்சியைத்தான் மக்கள் முடிவு செய்வார்கள். நாங்கள் களத்தில் இருக்கிறோமா, இல்லையா என்பதை மக்கள் முடிவு செய்வார்கள். மக்கள்தான் எஜமானர்கள். நேற்று வந்த விஜய்க்கு எல்லாம் நான் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை. கூட்டம் கூடுகிறது என்பதற்காக பேசுவதா? இவரைக்காட்டிலும் வடிவேலுவை , நயன் தாராவை கூட்டிட்டு போங்க. கூட்டம் கூடத்தான் செய்யும். நடிகர் என்றால் கூட்டம் கூடத்தான் செய்யும். எல்லோரும் பார்க்கத்தான் செய்வார்கள். நான் சினிமாவில் தொடரணுமா? வேண்டாமா? என்று மலேசியா விழாவில் அவரே கேட்கிறார். ரசிகர்கள் தொடரணும் என்கிறார்கள். எல்லோரும் எம்.ஜி.ஆர். ஆக முடியாது. வானத்தில் ஒரு சந்திரன், பூமியில் ஒரு ராமச்சந்திரன் தான்.

தொடர்ந்து அதே இடத்திற்கு மூன்று முறை சென்றால் விஜய்க்கு இப்போது இருக்கும் கூடுமா என்ன?
இவருக்கு வேண்டுமானால் கூடுதலாக ரசிகர்கள் இருக்கிறார்கள். கூட்டத்தை கணக்கு போட்டு கட்சி ஆரம்பித்த நடிகர்கள் எலலாரு காணாமல் போய்விட்டார்கள். விஜய் அதீத நம்பிக்கை வைத்திருக்கிறார்’’என்று கூறி இருக்கிறார்.
