
பாமகவின் தலைவர் ராமதாசா? அன்புமணியா? பாமக தலைமை அலுவலகம் தைலாபுரமா? தி.நகர் திலக் தெருவா?மறுபடியும் முதலில் இருந்து துவங்குகிறது இந்த சர்ச்சை.
கடந்த மே மாதம் 28ஆம் தேதியுடன் அன்புமணியின் தலைவர் பதவிக்காலம் முடிந்துவிட்டது என்பதால், பாமகவின் சட்ட விதிகளின்படி மறுநாள் 29ஆம் தேதி அன்று பாமக தலைவராக ராமதாஸ் தன்னை அறிவித்துக்கொண்டார். அன்புமணி செயல் தலைவர்தானே தவிர, தலைவர் இல்லை என்று சொல்லி வந்தார் ராமதாஸ்.

இதனால், தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கு ஏ பார்ம், பி பார்ம் விண்ணப்பத்தில் கையெழுத்திடும் அதிகாரம் தலைவராகிய தனக்குத்தான் உள்ளது என்பதை இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திடம் நிரூபிக்க அன்புமணி டெல்லி சென்றார்.
இதை தெரிந்துகொண்ட ராமதாஸ், அன்புமணி டெல்லிக்கு செல்வதற்கு முன்பாகவே இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் அனுப்பி விட்டார். அதாவது, பாமகவின் சட்ட விதிகளின்படி பாமக தலைவராக தான் பொறுப்பேற்றுக் கொண்டதாகவும் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.
இதையடுத்து கடந்த ஜூலை மாதம் 5ஆம் தேதி அன்று நடந்த பாமக நிர்வாகக்குழு கூட்டத்தில், நிர்வாகக்குழு உறுப்பினர் பதவியில் இருந்து அன்புமணி நீக்கப்பட்டார் என்றும், பாமகவின் லெட்டர் பேடில் இருந்தும் அன்புமணியின் பெயர் நீக்கப்பட்டுள்ளது என்றும், பாமகவில் தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கு ஏ பார்ம், பி பார்ம் விண்ணப்பத்தில் கையெழுத்திடும் அதிகாரத்தை பாமக நிர்வாகக்குழு மற்றும் செயற்குழு தனக்கே அளித்துள்ளது என்றும் இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் அனுப்பி இருந்தார் ராமதாஸ்.

இதன் பின்னர் தந்தை – மகன் மோதல் உச்சத்திற்கு வந்ததை அடுத்து, அன்புமணி மீதான குற்றச்சாட்டுகளுக்கு அவர் எந்த விளக்கமும் அளிக்கவில்லை என்று சொல்லி அவரை செயல் தலைவர் பொறுப்பு மட்டுமல்லாது பாமகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கி அதிரடி காட்டினார் ராமதாஸ்.
பாமக என்றால் இனிமேல் நான் தான் என்று சொன்னார் ராமதாஸ். அன்புமணி தனிக்கட்சி தொடங்கலாம் என்று ஆலோசனை சொன்னார் ராமதாஸ். சர்ச்சை ஓய்ந்தது என்று பார்த்தால், அன்புமணியோ, பாமகவின் தலைவர் தான்தான் என்கிறார்.
அன்புமணியின் ஆதரவாளர் பாலு இன்று செய்தியாளர்களை சந்தித்து, ‘’பாமக தலைவராக அன்புமணியை அங்கீகரித்து தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பி இருக்கிறது. ஆகஸ்ட் மாதம் 2026 வரையிலும் பாமகவின் தலைவராக அன்புமணியை நீட்டித்து அனுமதி வழங்கி இருக்கிறது தேர்தல் ஆணையம். சென்னை தி.நகர் திலக் தெருவில் இருக்கும் முகவரியை பாமக தலைமை அலுவலகமாக அங்கீகரித்துள்ளது தேர்ஹ்டல் ஆணையம். பாமகவின் தலைவர் அன்புமணிதான். மாம்பழம் சின்னமும் அன்புமணிக்குத்தான் வழங்கப்பட்டுள்ளது’’ என்கிறார்.

எதிர்காலத்தில் பாமகவில் அன்புமணிக்கு எந்த உரிமையும் இல்லை என்று ராமதாஸ் அறிவித்திருக்கும் நிலையில், எதிர்காலத்தில் பாமகவை அன்புமணி வழிநடத்துகின்ற வகையில் இந்த அறிவிப்பு அமைந்துள்ளது என்கிறார் பாலு.
ஆனால் ராமதாசின் ஆதரவாளர் எம்.எல்.ஏ. அருள், ‘’ராமர் எங்கிருக்கிறாரோ அதுதான் அயோத்தி. ராமதாஸ் இருக்குமிடம்தான் பாமக. சட்டவிதிப்படி பாமக பொதுக்குழுவை அன்புமணி கூட்டியதே தவறு. அப்படி இருக்கும் போது அந்த பொதுக்குழுவில் அன்புமணியை தலைவராக தேர்வு செய்ததை எப்படி ஏற்க முடியும்?’’ என்று கேட்கிறார்.

இதனால் பாமக இரு அணியாக உள்ளது என்கிற பேச்சு எழுந்திருப்பதால், பாமகவில் இரு அணி என்பதெல்லாம் இல்லை. பாமக என்பது ஒன்றுதான். அதன் தலைவர் அன்புமணி ராமதாஸ்தான். இவரின் தலைமையில்தான் பாமக தேர்தலை சந்திக்கும்’’ என்கிறார் அன்புமணியின் ஆதரவாளர் திலகபாமா.
பாமகவின் தலைவர் ராமதாசா? அன்புமணியா? பாமக தலைமை அலுவலகம் தைலாபுரமா? தி.நகர் திலக் தெருவா? என்று பாமகவினரிடையே மீண்டும் குழப்பம் ஏற்பட்டிருக்கிறது.