
எம்.ஜி.ஆரின் தீவிர விசுவாசியாக இருந்த அ.அன்வர் ராஜா, ஒரு காலத்தில் ஜெயலலிதாவுக்கு இணையான இடத்தினை அதிமுகவில் பெற்றிருந்தார். அவர் இன்று அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்துள்ளார்.
திமுக மாணவர் அமைப்பு:
இராமநாதபுரம் மாவட்டம் பனைகுளத்தில் பிறந்த அ.அன்வர் ராஜா, கல்வியாளர், சொற்பொழிவாளர். பேரறிஞர் அண்ணாவின் பேச்சில் ஈர்க்கப்பட்டு திமுகவின் மாணவர் அமைப்பில் இணைந்து இந்தி எதிர்ப்பு போராட்டங்களில் பங்கேற்றார்.
அண்ணாவின் மறைவுக்கு பின்னர் கலைஞர் தலைமையிலான திமுகவில் இருந்தவர், எம்.ஜி.ஆரின் மீது கொண்ட தீவிர பற்றினால் திமுகவில் இருந்து வெளியேறி அதிமுகவை தொடங்கியபோது எம்.ஜி.ஆரின் பக்கம் நின்றார் அன்வர் ராஜா.
அடிப்படை உறுப்பினர் தொடங்கி கிளைச் செயலாளர், மாவட்டச் செயலாளர், சிறுபான்மை பிரிவு நல செயலாளர் என்று கட்சியில் படிப்படியாக உயர்ந்து ராமநாதபுரம் மாவட்டத்தில் அதிமுகவின் சிறுபான்மை சமூகத்தின் முகமாக அறியப்பட்டார்.

அதிமுக தோல்வி – அன்வர் ராஜா வெற்றி:
1986இல் உள்ளாட்சி தேர்தலில் அதிமுக மிகப்பெரிய தோல்வியைச் சந்தித்த போதிலும் கூட மண்டபம் ஊராட்சி ஒன்றிய தலைவர் தேர்தலில் அன்வர் ராஜா வென்றார். இதனால் மதுரை மாநாட்டில் அன்வர் ராஜாவை பேசவைத்து அழகு பார்த்தார் எம்.ஜி.ஆர்.
ஜெ., – அன்வர் ராஜா:
பதினைந்து பேர் கொண்ட அதிமுக ஆட்சிமன்றக் குழுவில் அமைச்சர் பதவியில் இல்லாத ஜெயலலிதாவையும் அன்வர் ராஜாவையும் சேர்த்தார் எம்.ஜி.ஆர். அன்வர் ராஜா 70 வயதில் மூன்றாவது திருமணம் செய்தபோது கட்சியில் சலசலப்பு எழுந்தாலும் ஜெயலலிதாவின் முன் அனுமதியைப் பெற்றிருந்தார்.
ஜானகி அணி:
எம்.ஜி.ஆரின் மறைவுக்கு பிறகு அதிமுக ஜானகி அணி, ஜெ., அணி என்று இரண்டாக உடைந்த போது ஜானகி அணி பக்கம் நின்றார் அன்வர் ராஜா. 1989 தேர்தலில் ஜானகி அணி சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.
பின்னர் ஜெயலலிதா தலைமையில் அதிமுக ஒன்றானபோது ஜெயலலிதா பக்கம் சென்ற அன்வர் ராஜாவுக்கு, 2001 சட்டமன்ற தேர்தலில் வாய்ப்பளித்தார் ஜெயலலிதா. அத்தேர்தலில் வென்ற அன்வர் ராஜாவுக்கு, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பொறுப்பு வழங்கினார் ஜெயலலிதா. அதன் பின்னர் 2014இல் ராமநாதபுரம் மக்களவை தொகுதியில் போட்டிட வைத்து எம்.பி. ஆக்கினார் ஜெயலலிதா.
இபிஎஸ் அணி:
ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் அதிமுக உடைந்து ஓபிஎஸ் அணி – இபிஎஸ் அணி என்று பிரிந்தபோது இபிஎஸ் அணியில் இருந்தார் அன்வர் ராஜா. ஓபிஎஸ் – இபிஎஸ் இருவரும் இணைந்த பின்னர் சசிகலாவை கட்சியில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று தலைமைக்கு எதிராக பேசி வந்தார். இதனால் 2021இல் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார்.

காப்பாற்றுங்கள் தலைவா!
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பின்னர், ’’தலைவா! ஏழை மக்களுக்காக நீங்கள் துவங்கிய கட்சி சிதறிக் கிடக்கிறது. நாங்கள் பதறித் துடிக்கிறோம்; காப்பாற்றுங்கள்’’, ‘’தலைவா! கட்சியில் இருந்து என்னால் விலகியிருக்க முடியவில்லை. ஏனெனில், நான் தினமும் உன்னை நினைக்கின்றேன். அதில், நான் என்னை மறைக்கின்றேன்’’ என்று போஸ்டர்கள் ஒட்டி அதிமுகவில் பரபரப்பை ஏற்படுத்தி வந்தார்.
திமுகவில் இணையப்போவதாக அப்போது செய்திகள் வந்தாலும், வேறு கட்சியில் சேராமல் அதிமுக சார்பாகவே இருந்ததால் அவரை மீண்டும் 2023இல் அதிமுகவில் சேர்த்துக் கொண்டார் எடப்பாடி பழனிசாமி.

பாஜக எதிர்ப்பு:
அரசியலில் அன்வர் ராஜாவுக்கு பிடிக்காத கட்சி பி.ஜே.பி. என்றும், பிடிக்காத வார்த்தை பி.ஜே.பி. என்று சொல்லும் அளவிற்கு பிஜேபி எதிர்ப்பு அரசியலை இன்றளவும் கைவிடாமல் இருக்கிறார்.
பாஜக மத்திய அரசு முத்தலாக் மசோதாவை கொண்டு வந்தபோது அப்போதைய அதிமுக எம்.பி. ரவீந்திரநாத் குமார் அம்மசோதாவை ஆதரித்து பேசி, அது தமிழ்நாட்டில் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்த நிலையில், ’’அது அதிமுகவின் நிலைப்பாடு அல்ல; ரவீந்திரநாத்தின் நிலைப்பாடு’’ என்று தடாலடியாக அறிவித்தார் அன்வர் ராஜா. இதனால் அதிமுக – பாஜக கூட்டணியில் குழப்பம் ஏற்பட்டது.
ஆனாலும், பாஜக கூட்டணிக்கு எதிரான நிலைப்பாட்டில் உறுதியாக இருந்ததால்தான் 2021 , 2024 தேர்தல்களின் அன்வர் ராஜாவுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.

ஆனாலும் அதிருப்தி அடைந்து வேறு கட்சிக்கு செல்லாமல் அதிமுகவிலேயே பயணித்து வந்தார்.
2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு மீண்டும் பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைத்ததால் அதிருப்தி அடைந்த அன்வர் ராஜா, ’’தமிழ்நாட்டில் காலூன்ற துடிப்பது பாஜகவின் எண்ணமாக இருந்தாலும் அது ஒரு போதும் நடக்காது’’ என்று கடுமையாக விமர்சித்து கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தினார்.
இதில், கூட்டணி ஆட்சி, ஆட்சியில் அதிகாரத்தில் பங்கு என்று பாஜக தொடர்ந்து பேசி வருவதால் அதிருப்தி அடைந்து, தனது அதிருப்தியை ஊடகம் மூலமாக வெளிப்படுத்தினார். இதில் கடுப்பான எடப்பாடி பழனிசாமி, அன்வர் ராஜாவை கடுமையாக சாடி இருக்கிறார்.

அதிமுவில் சிறுபான்மை இன சமூகத்தின் முகமாக இருந்து வரும் தனக்கு, ஒரு காலத்தில் ஜெயலலிதாவுக்கு இணையாக அதிமுகவில் இடம் வகித்த தனக்கு தற்போது அதிமுகவில் உரிய இடம் இல்லாததை உணர்ந்தும், அண்ணாவின் கருத்தியலுக்கு எதிராக உள்ளவர்களுடன் கூட்டணி வைத்துள்ளதால், அடிமையாக இருந்து கட்சியை பாஜகவிடம் பலிகொடுக்க துணிந்து விட்டதால் அதிமுகவில் நிலையான தலைவர்கள் இல்லை என்று சொல்லி, கருத்தியல் ரீதியாக ஒன்றாக பயணிக்க விரும்பி அதிமுகவில் இருந்து விலகி முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்துள்ளார்.
அன்வர் ராஜாவின் இந்த முடிவு அதிமுகவுக்கு பின்னடைவைத் தரும் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.