
வெறும் 8 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கி அதை முதலீடு செய்து தொழில் தொடங்கிய ஒரு விவசாயி மகன் கே.பி.ராமசாமியின் இன்றைய சொத்து மதிப்பு 30 ஆயிரம் கோடிக்கு மேல். புதிய யுக்திகளாலும், புதுப்புது முயற்சிகளாலும் தொழில்துறையில் உச்சம் தொட்டு இந்திய பணக்காரர்களின் பட்டியலில் இடம்பிடித்துள்ள இவரின் கேபிஆர் மில் இந்தியாவின் மிகப்பெரிய ஆடை உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றாக உயர்ந்து நிற்கிறது.
கடந்த 2023ஆம் ஆண்டில் அக்டோபர் மாதம் 12ஆம் தேதி அன்று ஃபோர்ப்ஸ் வெளியிட்ட இந்திய பணக்காரர்கள் பட்டியலை பார்த்த இந்தியர்களுக்கு குறிப்பாக தமிழர்களுக்கு ஒரே ஆச்சரியம். அந்த பட்டியலில் 100ஆவது இடத்தில் இடம் பிடித்திருந்தவர் ஈரோடு தமிழர் கே.பி.ராமசாமி என்பதுதான் அந்த ஆச்சரியத்திற்கு காரணம்.

விவசாயி மகன்:
தமிழ்நாட்டில் ஈரோடு மாவட்டத்தில் பெருந்துறை அடுத்த கல்லியம்புதூர் கிராமத்தில் விவசாய குடும்பத்தில் பிறந்தவர் கே.பி.ராமராமி. உயர்நிலை பள்ளியில் படித்து முடிப்பதற்கே பல தடைகளை தாண்டி வரவேண்டி இருந்ததால் அதற்கு மேல் கல்வியைத் தொடர அவரால் முடியவில்லை.
தாய்மாமன் கடன்:
குடும்ப சூழ்நிலையால் அந்த வயதில் சம்பாதிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்ததால் கல்வியை கைவிட்டார் கே.பி.ராமசாமி. பிறரிடம் சென்று வேலை செய்து அந்த கூலியில் வாழ்வதை விடம் சொந்தமாக தொழில் செய்து சம்பாதிக்க வேண்டும் என்று உத்வேகம் இருந்தது ராமசாமிக்கு. ஆனால், முதலீட்டிற்கு கையில் கொஞ்சம் கூட பணம் இல்லை.
விசைத்தறி தொழிலில் அனுபவம் இல்லை என்றாலும் தனக்கு தெரிந்ததைக் கொண்டு பிழைத்துக் கொள்ளலாம் என்ற நினைப்பில் விசைத்தறிகள் வாங்க நினைத்தார். தாய்மாமாவிடம் 8 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கி அந்தப் பணத்தில் 4 விசைத்தறிகளை வாங்கி 1971இல் தனது லட்சியப்பயணத்தை தொடங்கினார் ராமசாமி.

8000 – 30,000 :
1971இல் 8000 ரூபாயில் தொடங்கிய விசைத்தறி கூடம்தான் இன்றைக்கு இந்தியாவின் மிகப்பெரிய பின்னலாடை குழுமமாக வளர்ந்து 30,000 கோடி ரூபாய்க்கு அதிபதியாக உயர்ந்திருக்கிறார் ராமசாமி.
விசைத்தறி கூடத்தை விரிவுபடுத்த எண்ணிய ராமசாமி, 1984இல் சகோதரர்களுடன் இணைந்து கேபிஆர் மில்ஸ் எனும் நிறுவனத்தை தொடங்கினார். அதுவரையிலும் பருத்தியை நூலாக்கி வந்தவர் ஆடைகள் தயாரிக்கவும் ஆரம்பித்தார். ஆண்டுக்கு 1200 கோடி ரூபாய் மதிப்பிலான ஆடைகளை ஏற்றுமதி செய்து வருகிறது கேபிஆர் நிறுவனம்.

ஆடை தயாரிப்பு நிறுவனம் மட்டுமல்லாது சர்க்கரை, காற்றாலைகள், கல்லூரிகள் என்று பல துறைகளிலும் கால் பதித்திருக்கிறார் ராமசாமி. 2013ஆம் ஆண்டில் இருந்து சர்க்கரை உற்பத்தி செய்து வருகிறது கேபிஆர் மில்ஸ். 2019இல் ’பாசோ’ உள்ளாடை தயாரிப்பு மற்றும் விற்பனையை தொடங்கியது கேபிஆர் மில்.
இந்த மில்லின் உற்பத்திகள் உலகளாவிய சில்லறை விற்பனை நிறுவனங்களான வால்மார்ட், மார்க்ஸ் – பென்சர், எச் – எம் போன்ற நிறுவனங்களுக்கு செல்கின்றன. 60 நாடுகளுக்கு மேல் ஏற்றுமதி செய்து வருகிறது கேபிஆர் நிறுவனம்.
இந்திய பணக்காரர்கள் பட்டியல்:
2023 ஆம் ஆண்டில் போர்ப்ஸ் பத்திரிகை இந்திய பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்டது. அதில் 100ஆவது இடம் பிடித்திருந்தார் கே.பி.ராமசாமி. அந்த வருடத்தின் கேபிஆர் மில் சொத்து மதிப்பு 19,133 கோடி ரூபாய். கடந்த 2024ஆம் ஆண்டின் சொத்து மதிப்பு 30,000 கோடி ரூபாய்.

வெற்றி சூத்திரம்:
கேபிஆர் நிறுவனத்தின் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியாளர்களில் 95% பேர் பெண்கள். ராமசாமியின் வெற்றிச்சூத்திரம் இதுதான்.
‘’நீங்கள் ஒரு ஆணுக்கு கல்வி கற்பித்தால் ஒரு நபருக்கு மட்டுமே கல்வி கற்பிக்கிறீர்கள். அதுவே ஒரு பெண்ணுக்கு கல்வி கற்பித்தால் ஒரு குடும்பத்திற்கு கல்வி கற்பிக்கிறீர்கள்’’ எனும் மகாத்மா காந்தியடிகளின் பொன்மொழிகளை கொள்கையாகக் கொண்டார் ராமசாமி.
1996இல் கேபிஆர் ஸ்பின்னிங் மில் தொடங்கப்பட்ட போது அருகில் உள்ள கிராமப்புற பெண்கள் வேலை கேட்டு வந்தனர். அப்படி வேலை கேட்டு பெண்களில் பலரும் படிப்பை தொடர முடியாமல் வேலை கேட்டு வந்தனர் என்பதை தெரிந்துகொண்டு, அவர்கள் வேலை பார்த்துக்கொண்டே படிக்க வசதி செய்தார் ராமசாமி.
பெண் ஊழியர்களுக்கு கல்வி மற்றும் பயிற்றியும் அளித்து வந்தது கேபிஆர் நிறுவனம். தொழில் பயிற்சி, கணினி பயிற்சி, நர்சிங் பயிற்சி உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டதால் இங்கு வேலை பார்த்துக்கொண்டே பயிற்சியும் பெற்று மாநிலத்தின் முன்னணி நிறுவனங்களில் வேலைக்கு சேர்ந்து வாழ்க்கையில் நல்ல நிலையில் பல ஆயிரம் பெண்கள் உள்ளனர்.

கேபிஆர் நிறுவனத்தை பொறுத்தவரையிலும் பெண்களுக்கே அதிக முக்கியத்துவம். இந்த நிறுவனத்தில் 95 சதவிகிதம் பேர் பெண்களே. கேபிஆர் நிறுவனத்தால் 10 லட்சத்திற்கும் அதிகமான பெண்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் கண்டுள்ளனர்.
கேபிஆர் நிறுவனத்தின் உற்பத்தி அதிகரிப்புக்கும், பொருளின் தரம் மேம்பட்டதற்கும் பெண்கள் மேம்பாட்டில் தங்கள் நிறுவனம் செலுத்திய கவனம்தான் காரணம் என்கிறார் கே.பி.ராமசாமி.