
கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதையாக அஜித்குமார் கொலை வழக்கில் யார் இந்த நிகிதா? என்று தேடத்தேட பல அதிர்ச்சி தரும் தகவல்கள் வந்து கொண்டே இருக்கின்றன.
எந்த வழக்குமே இல்லாத ஒரு இளைஞர் அஜித்தின் உயிர் திருமண மோசடி, பண மோசடி உள்ளிட்ட ஏராளமான வழக்குகளில் சிக்கி இருக்கும் சீட்டிங் ராணி, கல்யாண ராணி நிகிதாவினால் பரிதாபமாக போயிருக்கிறது. இந்த கல்யாண ராணியால் ஒரு கட்சியின் நிறுவனரே மோசம் போயிருக்கிறார். இந்த மோசடிராணிக்கும் தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் அண்ணாமலைக்கும் என்ன தொடர்பு? என்கிற பரபரப்பும் தமிழக அரசியலில் சுழன்றடிக்கிறது.
சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பத்ரகாளி அம்மன் கோவில் காவலாளி அஜித்குமார் தனது நகைகளை திருவிட்டார் என்று நிகிதா வாய்மொழி மூலமாக கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் அந்த இளைஞரை வெறித்தனமாக அடித்து கொலை செய்துள்ளனர். இது தொடர்பான வழக்கு மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் நடந்து வருகிறது.
நகை திருட்டுப் புகார் விசாரணையில் போலீசார் அஜித்குமாரை அடித்துக்கொன்ற சம்பவம் மாநிலமெங்கிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், நிகிதா பற்றிய பல்வேறு மோசடிகள் ஒவ்வொன்றாக வெளியே வந்து அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.

யார் இந்த நிகிதா?
மதுரை மாவட்டத்தில் திருமங்கலம் அருகே ஆலம்பட்டியைச் சேர்ந்தவர் நிகிதா. இவர் திண்டுக்கல்லில் தாடிக்கொம்பு சாலையில் உள்ள எம்.வி.எம். அரசு பெண்கள் கலை -அறிவியல் கல்லூரியில் தாவரவியல் துறை தலைவராக பணிபுரிந்து வருகிறார்.
நிகிதாவின் தந்தை கோவையில் சப்-கலெக்டராக இருந்தவர் என்றும், அவரது தாயர் அரசு வேலையில் பணியாற்றியவர் என்றும் சொல்கிறார் நிகிதாவின் திருமண மோசடியால் ஏமாந்து போன திருமாறன்.
கல்லூரிக்கு ஆப்செண்ட் – வீட்டுக்கு பூட்டு
அஜித்குமார் மரணத்திற்கு பிறகு நிகிதா கல்லூரிக்கு வேலைக்கு செல்லவில்லை. திருமங்கலத்தில் உள்ள இவரது வீடும் பூட்டிக்கிடக்கிறது. எங்கேயோ தலைமறைவாகி இருக்கிறார்.
அம்பலம்:
அஜித்குமார் கொலை வழக்கில் நிகிதாவின் பெயர் வந்ததும் முதலில் இவர் யார் என தெரியாமல் இருந்தது. பின்னர்தான் இவர் ஒரு மோசடி ராணி என்று இவரால் பாதிக்கப்பட்டவர்கள் பலரும் நிகிதாவின் மோசடிகளை அம்பலப்படுத்தி வருகின்றனர்.

கல்யாண ராணி:
மூன்றுக்கும் மேற்பட்டோரை திருணம் செய்து திருமண மோசடி செய்துள்ளார் நிகிதா. ஒருவருடன் மட்டும் 20 நாட்கள் வாழ்ந்துள்ளார். மற்றவர்களுடன் ஒருநாள் கூட வாழாமல் மோசடி செய்துள்ளார் என்று நிகிதா மீது புகார்கள் குவிகின்றன.
இவரின் கல்யாண மோசடியில் தென்னிந்திய பார்வர்டு கட்சியின் நிறுவனர் திருமாறனே சிக்கி இருக்கிறார். அது குறித்து திருமாறன், ‘’நிகிதாவை எனக்கு 21 ஆண்டுகளுக்கு முன்பே தெரியும். நிகிதாவின் குடும்பமே ஒரு சீட்டிங் குடும்பம். திருமணம் முடிச்சு யாருடனும் ஒரு நாள் கூட வாழமாட்டார் நிகிதா. திருமணத்தன்று இரவே ஓடிவிடுவார். அப்புறம் ஆண்கள் மீது வரதட்சணை புகார் கொடுத்து, பணம் கேட்டு மிரட்டி அந்த குடும்பத்தையே நாசப்படுத்தி விடுவார் நிகிதா. பலரும் இந்த சித்திரவதையை அனுபவிச்சாங்க. அதுல நானும் ஒருத்தன். முதலிரவில் பால், பழம் சாப்பிடுவதற்கு முன்பே ஓடிவிட்டார். வரதட்சனை புகார் கொடுத்தார். 10 லட்சம் ரூபாய் கறந்துவிட்டுத்தான் விவாகரத்து கொடுத்தார். எனக்கு முன்னாள் 3 பேரை திருமணம் செய்திருக்கிறார் நிகிதா.
கல்யாணம் என்று மாப்பிள்ளை வீட்டில் கோடிக்கணக்கில் செலவு செய்வார்கள். ஆனால், நிகிதா குடும்பத்தினர் 10 பேர்தான் வருவார்கள். நிகிதா கொடுத்த பொய்யான வரதட்சனை புகாரால் காவல்துறையின் அழுத்தத்தால் ஓராண்டு காலம் தலைமறைவு வாழ்க்கையை வாழ்ந்தோம்.

நிகிதாவின் தந்தை சப் கலெக்டர், தாய் அரசு வேலையில் இருந்தார். அன்றைக்கு திருமங்கலம் டி.எஸ்.பி. ஆக இருந்தவர் ராஜராஜன். அவரும் பல போலீஸ் அதிகாரிகளும் நிகிதாவுக்கு உடந்தையாக இருந்தார்கள். 2003,2004,2005 கால கட்டங்களில் நிறைய திருமண மோசடிகளை செய்துள்ளார் நிகிதா’’என்கிறார்.
பாஜகவுடன் இணக்கம் காட்டும் திருமாறனிடம், தான் ஒரு ஐ.ஏ.எஸ். என்றும் தற்போது பயிற்சி காலத்தில் இருப்பதாகவும் சொல்லி திருமணம் செய்திருக்கிறார் நிகிதா. திருமணமான பின்னர் நிகிதா ஒரு ஐ.ஏ.எஸ்.அதிகாரி அல்ல என்றும், அவர் ஒரு டுபாக்கூர் என்றும் தெரியவந்ததால், தன் மனைவி ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி என்ற கனவில் இருந்தவருக்கு ஒரே அதிர்ச்சி. இதனால் நிகிதாவை கேட்க, அவர் எஸ்கேப் ஆகி இருக்கிறார் என்கிற தகவலும் அதிரவைக்கிறது.

சீட்டிங் ராணி:
நிகிதா மேல் 17 சீட்டிங் புகார்கள் உள்ளன. கடந்த 2011இல் அப்போதைய துணை முதல்வரின் பி.ஏ. தனது உறவுக்காரர் என்று சொல்லி அவர் மூலமாக அரசு வேலை வாங்கித்தருவதாகச் சொல்லி ஒரே குடும்பத்தில் 16 லட்சம் ரூபாய் மோசடி செய்திருக்கிறார். வேலை வாங்கித்தராததால் பணத்தை திரும்பி கேட்டபோது, வழக்கறிஞரை வைத்து கொலை மிரட்டல் விடுத்துள்ளார் நிகிதா. இந்த கொலை மிரட்டலை வைத்து புகார் கொடுத்தபோது கைதான நிகிதா, காவல்துறையில் தனது செல்வாக்கால் உடனே ரிலீசாகி வந்துவிட்டார்.

செக்கானூரணி தேங்கல்பட்டி கிராமத்தைச் சேர்ந்த செல்வத்திடம் அரசு வேலை வாங்கித்தருவாக 25 லட்சம் ரூபாயினை ஆட்டைய போட்டிருக்கிறார். இதே போன்று அரசு வேலை வாங்கித்தருவதாகச் சொல்லி பலரிடம் மோசடி செய்திருக்கிறார் நிகிதா.
நிலமோசடியிலும் ஈடுபட்டு வந்துள்ளார் நிகிதா. ஆலம்பட்டியில் உள்ள வீட்டை பேராசிரியர் பாசிலுக்கு 70 லட்சம் ரூபாய்க்கு விற்பதாக பேசி 25 லட்சம் ரூபாய் அட்வான்ஸ் கறந்திருக்கிறார். பின்னர் மார்க்கெட் விலை கூடிவிட்டது என்று சொல்லி 70 லட்சம் ரூபாயை 90 லட்சம் ரூபாயாக மாற்றி பேசி இருக்கிறார் நிகிதா. இதில் அதிர்ச்சியான பாசில், கொடுத்த அட்வான்ஸை திருப்பி கேட்க, வீடும் கிடையாது அட்வான்ஸ் 25 லட்ச ரூபாயும் கிடையாது என்று சொல்லி மிரட்டல் விடுத்திருக்கிறார் நிகிதா.

ஈகோவால் கொலையா?:
‘’மடப்புரத்தில் நகை திருடு போவதற்கு வாய்ப்பே இல்லை. அஜித்குமாருடன் வண்டி தள்ளுவதில் ஏற்ட்ட வாக்குவாதத்தில் ஈகோ வந்து, வரட்டு பிடிவாதக்காரி நிகிதா, தன்னோட ஆளுமையை காட்டுவதற்காக அஜித்குமார் மீது பொய் குற்றச்சாட்டு கூறி அவரை கொன்றுவிட்டார். நிகிதாவையும் அவரது குடும்பத்தினரையும் அஜித்குமார் கொலை வழக்கில் முதல் அக்யூஸ்ட்டாக பதிவு செய்ய வேண்டும்’’ என்கிறார் திருமாறன்.
முரண்கள்:
அஜித் தனது காரை பார்க் செய்ய எடுத்துச்சென்றார். கோவிலுக்குள் சென்று சாமி கும்பிடும்போதுதான் லேட்டாக வந்து கார் சாவியை கொடுத்தார். சாமி கும்பிட்டுவிட்டு வெளியே சாப்பிடப்போகும் போது அம்மா கழுத்து வெறுமனே இருந்ததால் நகை போட்டுக்கோ என்று சொல்லிவிட்டு காருக்குள் சென்று பார்த்தபோது நகை காணாமல் போயிருப்பதை பார்த்தோம் என்று ஒரு வீடியோவில் கூறி இருந்தார் நிகிதா. ஆனால், கோயிலிலேயே கொடுத்த புளியோதரையை காருக்கு அருகிலேயே அமர்ந்து சாப்பிட்டோம் என்று இன்னொரு வீடியோவில் சொல்கிறார் நிகிதா.
கார் சாவி அஜித்குமாரிடம் மட்டும்தான் இருந்தது என்று ஒரு வீடியோவில் சொல்கிறார். இன்னொரு வீடியோவில் கார் பார்க் செய்ய இன்னொரு கோயில் காவலாளியும் வந்தார் என்று சொல்கிறார்.
தன் அம்மாவை வீல்சேரில் வைத்து தள்ளிச்செல்ல அஜித்குமார் 500 ரூபாய் கேட்டதாகவும், தான் 100 ரூபாய் மட்டுமே தருவேன் என்று சொன்னதாகவும் இதனால் வாக்குவாதம் வந்ததாகவும் ஒரு வீடியோவில் சொல்கிறார். இன்னொரு வீடியோவில் இதைப்பற்றியே அவர் சொல்லவில்லை. இதன் மூலம் அவர் எதையோ மறைக்க முயல்கிறார் என்று மட்டும் தெரிகிறது என்கிற சந்தேகம் எழுகிறது.

திருமாறன் சொன்னதில் உள்ள உண்மை:
நகை திருட்டு என்று அஜித்குமார் மீது வாய்மொழியாக புகார் சொல்லி சிவகங்கை மாவட்ட எஸ்.பி, மானாமதுரை டி.எஸ்.பி. மற்றும் கைதான தனிப்படை காவலர்களுடன் நிகிதா பேசியா ஆடியோ ஆதாரங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. ஒரு சின்ன விசயத்திற்காக இத்தனை அதிகாரிகளுடன் பேசி அழுத்தம் கொடுத்திருக்கிறார் என்றால், ‘வரட்டு பிடிவாதக்காரி’ என்று திருமாறன் சொல்வது உண்மை என்றே தோன்றுகிறது.
சீட்டிங் ஸ்டைல்:
ஒருவர் மீது நகைதிருட்டு பழி சுமத்தி அடித்தால் வலி தாங்காமல் தன்னிடம் உள்ள நகைகளை கொடுத்துவிடுவார் என்கிற நினைப்பில்தான் அஜித்குமார் மீது புகாரளித்திருக்கலாம் நிகிதா. ஏனென்றால், அவரின் சீட்டிங் ஸ்டைலே இதுதான் என்று அதிரவைத்துள்ளார் மதுரை மாவட்ட குற்றப்பிரிவு அதிகாரி ஒருவர்.
மாணவிகளிடம் கொடூர முகம்:
தாவரவியல் பேராசிரியராக இருக்கும் நிகிதா, மாணவிகளிடம் கொடூர முகத்தை காட்டி வந்துள்ளார். தாவரவியல் துணை தலைவராக இருந்தபோது மாணவிகளை மன ரீதியாக துன்புறுத்தி வார்த்தைகளால் கடுமையாக பேசி வந்துள்ளார். இதனால் கொதித்தெழுந்த மாணவிகள் கடந்த 2024 ஆம் ஆண்டில் திண்டுக்கல் ஆட்சியரிடம் புகாரளித்துள்ளனர்.

அண்ணாமலையுடன் என்ன தொடர்பு?
பாஜக ஆதரவு நிலையில் இருந்து வந்துள்ளார் நிகிதா என்பது அவரது சமூக வலைத்தள பக்கத்தின் மூலம் அறிய முடிகிறது. பாஜகவுக்கு ஆதரவாகவும், எதிர்க்கட்சிகளை கடுமையாக விமர்சித்தும் அவர் பல பதிவுகளை போட்டுள்ளார். பாஜக தலைவர்களில் அண்ணாமலை படத்தை மட்டும் தொடர்ந்து தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்து வந்துள்ளார் நிகிதா. ’ஒரே ஒரு ஹீரோ, மாஸ் போர்வீரன்’ என்று அண்ணாமலையை புகழ்ந்து தள்ளி உள்ளார் நிகிதா. இதனால் நிகிதாவுக்கு அண்ணாமலையுடன் என்ன தொடர்பு? என்ற கேள்வி எழுந்திருக்கிறது. ஒருவேளை, அண்ணாலை இருக்கும் தைரியத்தில்தான் ஓவரா ஆட்டம் போட்டாரா நிகிதா? என்ற கேள்வியை பலரும் எழுப்பி வருகின்றனர்.
இதற்கிடையில் அண்ணாமலையுடன் கைகோர்த்துக் கொண்டு நிகிதா நிற்பது போன்ற படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ஆனால் அந்தப்படம் பொய்யானது என்று பாஜக தரப்பினர் மறுத்து வருகின்றனர். அண்ணாமலையுடன் இருப்பது நிகிதா அல்ல; அவர் திருவள்ளூர் கிழக்கு மாவட்டச் செயலாளர் ரஜினி என்று விளக்கம் அளித்து வருகின்றனர்.

நியாயம்:
இதை எல்லாம் வைத்துப் பார்க்கும் போது, சொகுசாக வாழ யாரையும் ஏமாற்றலாம் என்றும், ஆதிக்க மனோபாவத்துடன் நிகிதா வாழ்ந்ததும் உறுதியாகிறது.
’’பெண் என்கிற ஒரு காரணத்தினாலேயே பொய் பொய்யா சொல்லி தப்பித்துக்கொள்கிறார் நிகிதா. ஒரு புகார் வந்தால் புகார் கொடுத்தவரின் பின்னணியையும், புகாருக்குள்ளாவனரின் பின்னணியையும் விசாரித்து அதன் பின்னர் புகார் பற்றிய விசாரணையில் இறங்கவேண்டும். இதைச்செய்யாமல் நிகிதா கொடுத்த பொய்யான புகாரில் ஒரு அப்பாவி இளைஞரின் உயிர் அநியாயமாக போயிருக்கிறது’’ என்று நிகிதாவால் பாதிக்கப்பட்ட திருமாறன் சொல்வதில் நியாயம் இருக்கிறது.
Sultanbeyli su kaçağı tespiti Test pompası ile kaçağın kesin yerini bulmaları çok iyiydi. https://social.instinxtreme.com/read-blog/47603