
படு தீவிரம் அடைகிறது பாமகவில் தந்தை – மகன் மோதல். தனக்கு எதிரான அன்புமணி ஆதரவாளர்களை கட்சியில் இருந்து ராமதாஸ் நீக்கி வருகிறார். அதே போல் தனக்கு எதிராக நிற்கும் ராமதாஸ் ஆதரவாளர்களை கட்சியில் இருந்து அன்புமணி நீக்கி வருகிறார். இப்படி போட்டா போட்டிக்கொண்டு இருவரும் நீக்கம் செய்து வருவதால், எது உண்மையான நீக்கம்? எது உண்மையான நியமனம்? யாருக்கு அதிகாரம் இருக்குது? ராமதாசுக்கா? அன்புமணிக்கா? என்ற குழப்பம் ஏற்பட்டிருக்கிறது பாமகவினரிடையே.
இந்த போட்டா போட்டி நீக்கம் – நியமனம் பொதுவெளியில் கேலிக்குரியதாகவும் பார்க்கப்படுகிறது.
’’இறுதி மூச்சு இருக்கும் வரையிலும் பாமகவின் தலைவராக நானே இருப்பேன். எனக்கே கட்சியின் அதிகாரம்’’ என்று ராமதாஸ் சொல்லி வருகிறார். அன்புமணியும் இதையே சொல்லி வருகிறார். வாய்ச்சொல்லோடு நின்றுவிடாமல், கட்சியின் தலைவராக தன்னை நிரூபிக்கவும், அதிகாரத்தை நிலைநாட்டவும் தீவிரமாக களமிறங்கி இருக்கிறார் அன்புமணி.

ராமதாசும் அதிகாரத்தை விட்டுக்கொடுக்க தயார் இல்லை என்பதால் பாமக உடையும் நிலை ஏற்படும். அப்படி ஒரு நிலைமை வரும்போது மாம்பழம் யாருக்கு? என்ற கேள்வி எழுகிறது. இதை உறுதி செய்வது தேர்தல் ஆணையம்தான். அதனால்தான் கட்சி விதிகளின் ’பி.பார்ம்’ -இல் கையெழுத்திடும் அதிகாரம் தனக்கு இருப்பதை உறுதிப்படுத்த இந்திய தலைமை தேர்தல் ஆணைய அதிகாரிகளை சந்திக்க முயற்சிகள் எடுத்து வருகிறார் அன்புமணி. இதற்காகத்தான் அவர் டெல்லியில் முகாமிட்டுள்ளார்.
டெல்லி செல்வதற்கு முன்பாக மூத்த அரசியல்வாதி பண்ருட்டி ராமச்சந்திரனை சந்தித்து ஆலோசனை நடத்தி இருக்கிறார் அன்புமணி. முதல் பாமக எம்.எல்.ஏ பண்ருட்டி ராமச்சந்திரன்.

1967இல் திமுக சார்பில் பண்ருட்டி தொகுதியில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினரானவர் பண்ருட்டி ராமச்சந்திரன். பின்னர் 1971இல் மீண்டும் பண்ருட்டி தொகுதியில் வென்று கலைஞர் அமைச்சரவையில் போக்குவரத்து துறை அமைச்சரானார். 1977இல் அதிமுகவில் இணைந்து 1987 வரையிலும் எம்.ஜி.ஆர். அமைச்சரவையில் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தார். எம்.ஜி.ஆர். மறைவுக்கு பின்னர் ஜெயலலிதாவுக்காக தனி அணியை உருவாக்கியதில் முக்கிய பங்கு வகித்தவர் பண்ருட்டி ராமச்சந்திரன். ஜெயலலிதா, அதிமுகவின் பொதுச்செயலாளர் ஆனதும் அவரின் நடவடிக்கைகளில் உடன்பாடு இல்லாமல் அதிமுகவை விட்டு வெளியேறி பாமகவில் இணைந்தார். 1991இல் அதே பண்ருட்டி தொகுதியில் பாமக சார்பில் அப்போதைய பாமகவின் சின்னமான யானை சின்னத்தில் போட்டியிட்டு வென்றார். பாமவின் முதல் எம்.எல்.ஏ. ஆனார் பண்ருட்டி ராமச்சந்திரன். யானை சின்னத்தில் நின்று வென்றதால் தலைமைச்செயலகத்திற்கு யானையில் ஊர்வலமாக வந்தவர் பண்ருட்டி ராமச்சந்திரன்.

பாமகவில் இருந்து விலகி, ‘மக்கள் நல உரிமைக்கழகம்’ என்ற தனிக்கட்சியைத் தொடங்கி 1997 தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிட்டார்.
பாமகவை உடைத்துக்கொண்டு வெளியேறியதும் இல்லாமல் பாமகவுக்கே உரிமை கொண்டாடினார் பண்ருட்டி ராமச்சந்திரன். அப்போது இந்த விவகாரத்தில் பண்ருட்டி ராமச்சந்திரன் சந்தித்த சட்ட சிக்கல்கள், தேர்தல் ஆணையம் அளித்த பதில்கள் எல்லாவற்றையும் தெரிந்துகொண்டால் இப்போது தனக்கு அது உதவிகரமாக இருக்கும் என்றுதான் அவரைச் சந்தித்து ஆலோசனை நடத்தி உள்ளார் அன்புமணி.
பாமகவுக்கு உரிமை கொண்டாடியபோது தான் சந்தித்த பிரச்சனைகள், சட்ட சிக்கல்கள், தேர்தல் ஆணையத்தில் சந்தித்த விசயங்கள் அனைத்தையும் சொல்லி இருக்கிறார் பண்ருட்டி ராமச்சந்திரன். அவரின் அனுபவங்களை கேட்டு தெரிந்துகொண்ட அன்புமணி, அதன் அடிப்படையில் காய் நகர்த்தலாம் என்று முடிவெடுத்துதான் டெல்லி சென்று முகாமிட்டிருக்கிறார்.
சின்னம் யாருக்கு? என்று அதிமுக, சிவசேனாவில் நடக்கும் போராட்டம் போலவே பாமகவிலும் நடப்பது அக்கட்சியினரை கலக்கமடைய வைத்திருக்கிறது.