
ஓரணியில் தமிழ்நாடு என்ற பெயரில் 2026ஆம் ஆண்டுக்கானத் தேர்தல் பரப்புரையைத் தொடங்கி வைத்திருக்கிறார் தி.மு.க. தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின். 234 தொகுதிகளிலும் உள்ள ஏறத்தாழ 68ஆயிரம் வாக்குச்சாவடிகளுக்கும் ஏற்கனவே முகவர்களை நியமித்து, வாக்குசாவடிக்கான குழுவையும் அமைத்து, தற்போது அந்தக் குழுவின் மூலமாக வாக்காளர்களை வீடு வீடாக சந்தித்து, செல்போன் செயலி மூலம் அவர்களின் ஆதரவைப் பதிவு செய்து, அதை கட்சியின் தலைமை உறுதி செய்யும் வகையிலான செயல்திட்டம்தான் ஓரணியில் தமிழ்நாடு.
கடந்த நான்காண்டு கால ஆட்சியில் தி.மு.க.வின் திராவிட மாடல் அரசு நிறைவேற்றிய திட்டங்களின் மீதான நம்பிக்கையில்தான் ஒவ்வொரு வீடாகச் சென்று வாக்காளர்களை சந்திக்கிறது ஆளுங்கட்சி. தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்ட கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டம் எனும் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை கேலி செய்த பா.ஜ.க, அதே திட்டம் குறித்து பல மாநிலங்களில் வாக்குறுதிகளைக் கொடுத்து, 4 மாநிலங்களில் ஆட்சியையும் பிடித்திருக்கிறது. எதிர்க்கட்சிகளும் தவிர்க்க முடியாத விடியல் பயணம் திட்டம், காலை உணவுத் திட்டம், நான் முதல்வன், புதுமைப் பெண், நான் முதல்வன், மக்களைத் தேடி மருத்துவம், இல்லம் தேடிக் கல்வி, இன்னுயிர் காப்போம், வெளிநாட்டு முதலீடுகளுடனான பன்னாட்டு நிறுவனங்கள் மூலமான வேலைவாய்ப்புகள், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கான கடன் ரத்து, விவசாயிகளுக்கு புதிதாக இரண்டரை இலட்சம் இலவச மின் இணைப்புகள், பட்டியல் இன இளைஞர்களுக்கான தொழில் வாய்ப்புகள், மலைவாழ் மாணாக்கரும் ஐ.ஏ.எஸ்.-ஐ.ஐ.டி. போன்ற உயர்கல்விக்கானத் தகுதியைப் பெற்றது உள்ளிட்டவற்றை தனது ஆட்சிக்கால சாதனையாகவும் அதன் மூலம் மக்களின் ஆதரவை மீண்டும் பெற்று, ஏழாவது முறையாகத் தி.மு.க.வும், இரண்டாவது முறையாக மு.க.ஸ்டாலினும் ஆட்சி அமைக்கும் வாய்ப்பு நிச்சயம் அமையும் என்பதுதான் தி.மு.க. தரப்பின் நம்பிக்கை.
எதிர்க்கட்சியான அ.தி.மு.க. மீண்டும் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்துள்ள நிலையில், தமிழகத்தைக் காப்போம் என்ற தொகுதிவாரியான தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கவிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. ஆளுங்கட்சி மீது தொடர்ச்சியான குற்றச்சாட்டை அ.தி.மு.க சுமத்தி வருகிறது. யார் அந்த சார்? யார் அந்த தம்பி? என்று ஒவ்வொரு விவகாரத்தையும் பெரிதாக்கும் வகையில் அ.தி.மு.க முன்னெடுத்த முயற்சிகளுக்கு பா.ஜ.க. மட்டுமின்றி, அ.தி.மு.க.வுடன் இன்னும் அதிகாரப்பூர்வமாகக் கூட்டணியில் இணையாத த.வெ.க., நா.த.க., போன்ற கட்சிகளும், தி.மு.க.வை நிரந்தரமாக எதிர்ப்பவர்களும், நடுநிலை என்று தங்களைக் காட்டிக் கொள்பவர்களும், ஊடகத்தினர் பலரும் ஆதரவளித்து வருகிறார்கள்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவலர்களால் அஜீத்குமார் என்ற காவலாளி அடித்துக் கொல்லப்பட்ட மனித உரிமை மீறல் விவகாரத்திலும் அ.தி.மு.க, பா.ஜ.க, த.வெ.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், ஊடகங்கள், நீதிமன்றம், சமூக வலைத்தளங்கள் எனப் பல நிலைகளிலும் தி.மு.க. மீதான கடும் விமர்சனம் முன்வைக்கப்பட்டது. நடந்த தவறை ஏற்றுக்கொண்டார் காவல்துறைக்குப் பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர். சி.பி.ஐ. விசாரணை, கொல்லப்பட்ட இளைஞரின் குடும்பத்திற்கு நிவாரணம், வேலைவாய்ப்பு, நிலம் உள்ளிட்ட உதவிகளையும் வழங்கினார். இது எதிர்க்கட்சிகளின் கடும் விமர்சனங்களை மட்டுப்படுத்திய நிலையில், போலீசாரின் தாக்குதலுக்குப் பின்னணியில் உள்ள அதிகார வர்க்கம் உள்ளிட்டவை குறித்த விமர்சனங்கள் தொடர்கின்றன.
எம்.ஜி.ஆர், ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க.வின் பெரும்பலமாக இருந்தது பெண்கள் ஆதரவு. அதை எடப்பாடி பழனிசாமியால் தக்கவைக்க முடியாத நிலையில், தமிழ்நாட்டுப் பெண்களிடம் கட்சித் தலைவர் என்ற நிலையைக் கடந்து பெரும் ஆதரவைப் பெற்றிருக்கிறார் முதலமைச்சர். பெண்கள் ஆதரவு என்பது அரசியல் களத்தில் மிக முக்கியமானது. தமிழ்நாட்டில் ஆண்களைவிட பெண் வாக்காளர்களே அதிகம். அது, தி.மு.க தலைவருக்கு சாதகமாக உள்ளது. எதிர்க்கட்சிகள் தரப்பில், தமிழ்நாட்டில் பெண்களுக்குப் பாதுகாப்பில்லை என்ற விமர்சனங்கள் வைக்கப்பட்டு, போராட்டங்கள் நடத்தப்பட்டாலும் தி.மு.க. தலைவருக்குள்ள பெண்களின் ஆதரவு இப்போதும் வலிமையாகவே இருக்கிறது.
திரைப்படம் மூலம் பெண்களை ஈர்த்த நடிகர் விஜய் தலைமையில் த.வெ.க. ஒன்றுதான் இப்போதைய நிலையில், தி.மு.க எதிர்ப்பாளர்களின் ஒரே நம்பிக்கை. புதிய வாக்காளர்களும், நடுத்தர வயது வரை உள்ள பெண்களும் விஜய்க்கு ஆதரவளிப்பார்கள் என்ற அரசியல் ஆரூடம் கணிக்கப்படுகிறது. பொதுமக்களிடம் தி.மு.க ஆட்சி மீது கொந்தளிப்பான உணர்வு ஏதுமில்லை. அதே நேரத்தில் பொதுமக்களிடமிருந்து குறைகள் வெளிப்படுகின்றன. சொந்தக் கட்சிக்காரர்களிடமிருந்து குமுறல்கள் வெடிக்கின்றன.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடுத்த 8 மாதங்களுக்கு மேற்கொள்ளக்கூடிய அணுகுமுறையும், எதிர்க்கட்சிகள் வகுக்கப் போகும் வியூகமும்தான் தமிழ்நாடு யார் அணி பக்கம் இருக்கிறது என்பதைத் தீர்மானிக்கும்.