
“பள்ளிக்கூடத்தில் பாடம் சொல்லிக் கொடுக்கும்போது, ‘சாதிகள் இல்லையடி பாப்பா’ என்று சொல்லிக் கொடுக்கிறார்கள். பள்ளிக்கூடத்தில் சேர்வதற்கு சாதிச் சான்றிதழ் கேட்கிறார்கள். ஏன் இந்த முரண்பாடு? சாதிச் சான்றிதழ்களைக் கிழித்துவிட்டால் சாதி ஒழிந்துவிடும்” என்று சொல்கிறவர்கள் உண்டு. ஒருவருக்கு இன்ன நோய் என்பதைக் காட்டும் லேப் டெஸ்ட் ரிப்போர்ட்டைக் கிழித்துப் போட்டுவிட்டால் நோய் தீர்ந்துவிடுமா? அதுபோலத்தான், சாதிச் சான்றிதழைக் கிழிப்பது என்பதும்.
ஒருவருக்கு என்ன நோய் இருக்கிறது என்று லேப் டெஸ்ட் ரிப்போர்ட் சுட்டிக்காட்டுகிறதோ அதற்குரிய சிகிச்சையை அளித்தால்தான் நோய் தீரும். அதுபோல இந்திய சமூகத்தில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நீடித்திருக்கும் நோயான சாதிக்கு சிகிச்சை அளிக்க வேண்டுமென்றால், ஒருவர் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவரா, பழங்குடியா, இதர பிற்படுத்தப்பட்டவர்களா என்பதைக் கண்டறிந்து, அவர்களுடைய நிலை சமுதாயத்தில் என்னவாக இருக்கிறது என்பதன் அடிப்படையில் கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் இடஒதுக்கீடு வழங்குவதே சமூக நீதி சிகிச்சையாகும்.
யார் யாரெல்லாம் சமூக நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்களோ அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டுமென்றால் டெஸ்ட் ரிப்போர்ட் சரியாக இருக்க வேண்டும். இல்லையென்றால் நோய் தீர்க்கும் மாத்திரைகளை சாப்பிட வேண்டியவர்கள் புறக்கணிக்கப்பட்டு, தெம்புக்கான விட்டமின் மாத்திரைகளை சாப்பிடுபவர்களே தொடர்ந்து பயனமைந்து கொண்டிருப்பார்கள். இதை இந்தியாவிலேயே சரியாகவும் முதன்மையாகவும் உணர்ந்த மாநிலம் தமிழ்நாடு. ஏறத்தாழ 100 ஆண்டுகளுக்கு முன்பே இந்த மண்ணில் வகுப்புவாரி இடஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட்டு, தற்போது 69% இடஒதுக்கீடு மூலம் அனைத்து சமுதாயத்தினருக்குமான கல்வி, வேலைவாய்ப்பு கிடைத்து வருகிறது.
காலந்தோறும் இந்த இடஒதுக்கீடு குறித்த ஆய்வுகள், மறுபரிசீலனைகள் செய்யப்பட்டதால்தான் இந்த அளவுக்கான இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. சமூகத்தால் புறக்கணிக்கப்படுபவர்களைக் கரையேற்ற இடஒதுக்கீடு எனும் சமூக நீதி அவசியம். அதனை சரியாக செயல்படுத்த வேண்டுமென்றால், மக்கள்தொகையில் எந்தெந்த சமூகம் எந்தெந்த அளவுக்கு வாய்ப்பினைப் பெற்றிருக்கிறது, வாய்ப்புகள் பெற வேண்டிய சமூகங்கள் எவை என்பதற்கானத் தரவுகள் தேவை. அந்தத் தரவுகளைப் பெறுவதற்கு சாதி வாரிக் கணக்கெடுப்பு அவசியப்படுகிறது.
இதனை இந்தியாவில் உள்ள பல்வேறு கட்சிகள் வலியுறுத்தின. எதிர்க்கட்சிகள் தரப்பில் இந்தக் கோரிக்கை எழுப்பப்பட்டபோது, இந்தியாவை ஆளும் பா.ஜ.க. அதனை உதாசீனப்படுத்தியது. சாதிரீதியாக மக்களைப் பிளவுபடுத்தப் பார்க்கிறார்கள் என்று விமர்சித்தது. ‘அர்பன் நக்சல்கள்’ என்று சாதிவாரிக் கணக்கெடுப்பை வலியுறுத்திய இந்தியா கூட்டணி மீது குற்றம்சாட்டியது. பா.ஜ.க. கூட்டணியில் உள்ள பா.ம.க.வும் சாதிவாரிக் கணக்கெடுப்பை வலியுறுத்தக்கூடிய கட்சிதான்.
இந்தக் கணக்கெடுப்பை நடத்தவேண்டியது மத்திய அரசா, மாநில அரசா என்ற விவாதமும் நடந்தது. பீகார், தெலங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் மாநில அரசே கணக்கெடுப்பு நடத்தியது. தமிழ்நாட்டிலும் தி.முக. அரசு அதனைச் செய்ய வேண்டும் என பா.ம.க தொடர்ந்து வலியுறுத்தியது. மக்கள் தொகைக் கணக்கெடுப்புடன் சேர்த்து சாதிவாரியான கணக்கெடுப்பை நடத்தும் அதிகாரம் மத்திய அரசுக்குத்தான் இருக்கிறது என்றும், மாநில அரசு சர்வேதான் எடுக்க முடியும் என்றும் மாநிலத்தை ஆளும் தி.மு.க சொன்னது. ஏற்கனவே சில மாநிலங்கள் எடுத்த சர்வேயிலும் பல குளறுபடிகள் நிலவுவதையும் வல்லுநர்கள் சுட்டிக்காட்டினர்.
இந்தநிலையில்தான், மத்திய அரசு சாதிவாரிக கணக்கெடுப்பை நடத்துவதற்கு அமைச்சரவை ஒப்புதல் தந்திருப்பதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார். மத்திய அரசுக்குத்தான் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தும் அதிகாரம் இருப்பதையும் அவர் உறுதி செய்தார். சாதிவாரி கணக்கெடுப்பு கேட்டவர்களை, ‘அர்பன் நக்சல்கள்’ என்று குற்றம்சாட்டிய பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு தற்போது பீகார் மாநில சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், சாதி வாரிக் கணக்கெடுப்பை நடத்துவோம் என அறிவித்திருப்பது குறித்து பல்வேறு கருத்துகள் வெளிப்படுகின்றன.
நியாயமான முறையில் நடைபெறுமா, பெயரளவுக்கான அறிவிப்பா, சாதிவாரிக் கணக்கெடுப்பில் உண்மை விவரங்கள் வெளிப்படுமா, அதற்கேற்ப சாதிகளின் சமூக அந்தஸ்து அறியப்பட்டு, அதற்கேற்ப இடஒதுக்கீடு வழங்கப்படுமா என்பன உள்ளிட்ட பல கேள்விகள் எழுகின்றன. இந்தியாவில் எண்ணிக்கையில் அதிகமுள்ள சாதிகள் எவை, ஆதிக்கம் செலுத்தும் சாதிகள் எவை, அடக்கி ஒடுக்கப்படுபவர்கள் யார் ஆகிய விவரங்கள் முழுமையான சாதிவாரிக் கணக்கெடுப்பில் தெரியவரும்.
சாதிவாரிக் கணக்கெடுப்பு நேர்மையாக நடத்தப்பட்டு, செயல்பாட்டுக்கு வந்தால் சமூக அநீதி நிலைக்கும். இல்லையென்றால், ஆட்சியாளர்களின் அநீதியும், சாதி அரசியல் செய்பவர்களின் அதிகாரமும் ஓங்கும்.