விற்பனைக்கு வந்ததால் அதிமுக இணையதளத்தை தான் வாங்கியதாகவும், இதற்காக எடப்பாடி பழனிசாமி தன்னை 20 நாட்கள் சிறையில் தள்ளினார் என்றும் மனம் திறந்திருக்கிறார் அதிமுக முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி.
சசிகலா, டிடிவி தினகரன், ஓ.பன்னீர்செல்வம் மூன்று பேரும் ஏன் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டனர் என்பது குறித்து செங்கோட்டையன் நீக்கத்திற்கு விளக்கம் அளித்த போது தெரிவித்தார் எடப்பாடி பழனிசாமி. இவர்களுடைய நீக்கத்திற்கு விளக்கமளித்திருக்கும் பழனிசாமி ஏன் தன்னுடைய நீக்கத்திற்கு விளக்கமளிக்கவில்லை? என்னுடைய நீக்கத்திற்கு என்ன பதில் சொல்லப் போகிறீர்கள்?என்ற கேள்வியை எழுப்பி இருக்கிறார் கே.சி.பழனிசாமி.

இது குறித்து கே.சி.பழனிசாமி வெளியிட்டிருக்கும் நீண்ட விளக்கத்தில், ’’ஒரு தொலைக்காட்சியில் காவிரி மேலாண்மை வாரியம் குறித்து திமுக பிரதிநிதியும் நெறியாளரும் கேட்ட கேள்விக்கு “அதிமுக ஒரு திராவிட கட்சி கொள்கை மற்றும் சித்தாந்த ரீதியில் தேவைப்பட்டால் பாஜகவை எதிர்த்து எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா வழியில் செயல்படுவோம்” என்று கூறியதற்கு என்னிடத்தில் எந்த விளக்கமும் கேட்காமல் தன்னிச்சையாக பேசிய சில மணி நேரத்தில் என்னை கட்சியிலிருந்து நீக்கிவிட்டீர்கள்.
என்னிடத்தில் விளக்கம் கேட்டிருந்தால் அது என் தனிப்பட்ட கருத்து என்று கூட நான் தெரிவித்து இருப்பேன். ஆனால் அதே பாஜக கூட்டணியால் தான் நாங்கள் தோல்வி அடைந்தோம் என்று பாஜகவை விமர்சித்த ஜெயக்குமார், கே.பி.முனுசாமி, சி.வி.சண்முகம் மற்றும் பல முன்னாள் அமைச்சர்கள் மீது நீங்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையே ஏன்? நீங்களே கூட 2024 தேர்தலுக்கு “பாஜக ஒரு மதவாத கட்சி, தமிழகத்திற்கு எந்த நன்மையும் செய்யவில்லை” என்றெல்லாம் பாஜக எதிர்ப்பு நிலையை மேற்கொண்டீர்கள். அப்படி என்றால் என்னுடைய நீக்கம் சரிதானா?
கட்சியிலிருந்து நீக்கப்பட்டு 8 ஆண்டுகள் ஆகியும் இன்றுவரை அதே உறுதியுடன் பயணித்துக் கொண்டிருக்கிறேனே. இருந்தும் இன்று வரை என்னுடைய நீக்கத்தை நீங்கள் ரத்து செய்ய தயங்குவது ஏன்? ’’ என்று கேட்கிறார்.

மேலும், ’’சி.வி.சண்முகம் மூலம் டெல்லியில் வைத்து என்னிடம் பேச்சு வார்த்தை நடத்தி நாம் சந்திப்பதற்கும் ஒரு தேதி குறிக்கப்பட்டது, ஆனால் திடீரென சந்திப்பதற்கு ஒரு நாள் முன் அதை ரத்து செய்தீர்களே அது ஏன் எடப்பாடி பழனிசாமி அவர்களே?
இன்றைக்கு நீங்கள் தொண்டர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவன் என்று மார்தட்டிக் கொள்கிறீர்களே, எம்ஜிஆரின் விதிப்படி தொண்டர்கள்தான் இந்த இயக்கத்தின் தலைமையை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று நீதியரசர் சிஸ்தாணி முன்பு என்னுடைய வழக்கறிஞர்கள் வாதாடி நான் பெற்றுக் கொடுத்த தீர்ப்பு தானே இன்றுவரை இந்த இயக்கத்திற்கும், தொண்டர்களுக்கு அரணாக உள்ளது. அதில் போட்டியிடுகிற தகுதியில் உங்கள் சுயநலத்தை காட்டினாலும் குறைந்தபட்சம் தேர்ந்தெடுக்கிற உரிமையாவது தொண்டர்களுக்கு உள்ளது என்று பெற்றுக் கொடுத்திருக்கிறேனே அதை ஏன் நீங்கள் உணர மறுக்கிறீர்கள்? என்று எடப்பாடி பழனிசாமிக்கு பல கேள்விகளை எழுப்பி இருக்கிறார் கே.சி.பழனிசாமி.

தனது நீக்கத்தை ரத்து செய்ய வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமிக்கு பல கேள்விகளை முன்வைத்திருக்கும் கே.சி.பி., சசிகலா அதிமுக பொதுச்செயலாளராக இருந்த போது அதிமுக இணையதளத்தை வாங்கியது குறித்தும், அதற்கான எடப்பாடி பழனிசாமி தன்னை 20 நாட்கள் சிறையில் அடைத்தது குறித்தும் குமுறியிருக்கிறார்.
’’ஜெயலலிதா மறைந்த பின் http:// aiadmk.org.in என்ற டொமைன் Godaddy என்ற தளத்தில் விற்பனைக்கு உள்ளதாக விளம்பரம் வந்தது. அன்றைய தேதிக்கு சசிகலா பொதுச் செயலாளர் ஆக இருந்தார். மற்றவர்கள் அதை விலைக்கு வாங்கி கட்சிக்கு எதிராக பயன்படுத்திவிட கூடாது என்ற நல்ல நோக்கத்தோடு அதை நான் வாங்கி எம்ஜிஆர் விதிப்படி கட்சியின் பொதுச்செயலாளர் தேர்ந்தெடுக்ககப்பட வேண்டும் என்றும் அதை ஆதரிப்பவர்களின் விவரங்களை பதிவு செய்ய சொன்னேன். நீங்கள் தலைமை பதவிக்கு வந்த பிறகு எந்த ஒரு சூழ்நிலையிலும் அது குறித்து கேட்கவில்லை. கேட்டிருந்தால் அதை கட்சிக்கே கொடுத்திருப்பேன்.

ஆனால் நீங்கள் எதுவும் கேட்காமல் முதலமைச்சர் என்கிற அதிகாரத்தில் என் மீது பொய் வழக்கு போட்டு கைது செய்து 20 நாட்கள் சிறையில் அடைத்து உங்கள் காழ்ப்புணர்ச்சியை வெளிக்காட்டினீர்கள். நான் நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்று வெளியே வந்த பொழுது மீண்டும் அந்த ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என்று உங்கள் ஆட்கள் மூலமாக மனு செய்து உங்கள் வன்மத்தை தீர்க்க முயற்சி செய்தீர்கள். அது ஏன் எடப்பாடி அவர்களே?’’என்று அடுக்கடுக்காக பல கேள்விகளை முன்வைத்திருக்கிறார் கே.சி.பழனிசாமி.
அன்று வாங்கிய அதிமுக இணையளத்தை கேசிபி நடத்தி வருகிறார். ‘ஒன்றுபட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம்’ என்ற பெயரில் உறுப்பினர் சேர்க்கை செய்து வருகிறார்.
