
அதிமுகவில் இருந்து விலகி இருப்பவர்களை மீண்டும் கட்சிக்குள் இணைத்தால்தான் வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுக்கு வெற்றி வாய்ப்பு இருக்கும். அதனால் இணைப்பை செய்ய வேண்டும் என்று பாஜக தரப்பில் இருந்து மறைமுகமாக அழுத்தம் தரப்பட்டு வந்தது. கட்சியின் தொண்டர்களும் இதையே விரும்புவதாக தெரிவித்து வந்த நிலையில், செங்கோட்டையன், சிவி சண்முகம், எஸ்.பி.வேலுமணி, தங்கமணி உள்ளிட்ட 6 சீனியர்கள் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஒருங்கிணைப்பை வலியுறுத்தியும் பழனிசாமி அதற்கு சம்மதம் தெரிவிக்காமல் இருந்த நிலையில், யார்தான் பழனிசாமிக்கு புரிய வைப்பது என்ற சங்கடம் இருந்து வந்தது.

இந்த நிலையில்தான் கட்சியின் சீனியர் செங்கோட்டையன் முன்வந்து பழனிசாமிக்கு புரியவைத்தார். அதுவும் தனிப்பட்ட முறையில் சொல்லிப்பார்த்து அது சரிப்பட்டு வராததால்தான் பொதுவெளியில் இந்த விவகாரத்தை முன்வைத்தார்.
அப்படியும் பழனிசாமி இறங்கி வரவே இல்லை. இந்த விவகாரத்தை முன்னெடுத்த செங்கோட்டையனின் பதவிகளையும் பறித்தார். இதையடுத்து டெல்லி சென்று அமித்ஷா, நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோரை சந்தித்து நிலைமையை விளக்கினார் செங்கோட்டையன். இதனால் பழனிசாமியை டெல்லி அழைத்து பேச இருக்கிறார் அமித்ஷா என்று செய்திகள் வெளியான நிலையில், இன்று டெல்லி சென்று அமித்ஷாவை சந்திக்கிறார் பழனிசாமி.

ஆனால் பழனிசாமியோ, ‘’உட்கட்சி பிரச்சனை குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேச இருக்கிறேன் என்று சொல்கிறார்கள். அதிமுகவை எவராலும் எதுவும் செய்ய முடியாது. எங்களுக்கு ஆட்சி அதிகாரத்தை விட தன்மானம்தான் முக்கியம்’’ என்று சொன்னார்.
அதனால்தான், ‘’ தன்மானம்தான் முக்கியம் என்று சொல்லிவிட்டு பழனிசாமி டெல்லி சென்றது ஏன்?’’ என்று கேள்வி எழுப்பி இருக்கிறார் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்.