தமிழ் சினிமாவில் பல நல்ல படங்கள் வந்த போதிலும் அப்படங்களுக்கு ஏன் தேசிய விருது கிடைக்கவில்லை? நடிகர் திலகம் சிவாஜிக்கும், மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விக்கும், நாகேஷுக்கும் தேசிய விருது கிடைக்காமல் போனது ஏன்? திரையுலகில் 50 ஆண்டுகளை கடந்தும் ரஜினிக்கு ஏன் தேசிய விருது கிடைக்கவில்லை?
-இந்தக் கேள்வியை திரைப்பட விருது விழாவொன்றில் பங்கேற்ற , தேசிய விருது தேர்வுக்குழுவில் ஜூரியாக இருந்த இயக்குநர் ஆர்.வி.உதயகுமாரிடம் செய்தியாளர்கள் எழுப்பினர்.

அதற்கு ஆர்.வி.உதயகுமார், ‘’நாம் ரசித்து கொண்டாடும் பல திரைப்படங்கள் தேசிய விருது தேர்வுக்கு அனுப்பப்படுவதே இல்லை. இது ஒருத்தரின் தவறு இல்லை.
தேசிய விருது கமிட்டி அறிவிக்கும் தேதியில் நாம் படங்களை அனுப்ப வேண்டும். அந்த நேரத்தில் நடிகருக்கும் தயாரிப்பாளருக்கும் பிரச்சனை இருக்கலாம். இயக்குநருக்கும் தயாரிப்பாளருக்கும் பிரச்சனை இருக்கலாம். அதனால் படம் ரிலீஸ் ஆச்சு, கலெக்ஷன் ஆச்சு அத்தோட போகட்டும் என்று அப்ளிகேஷன்ஸ் போடாமல் புரடியூசர்ஸ் விட்டுவிடுகிறார்கள். நிறைய நல்ல படங்கள் இப்படித்தான் மிஸ் ஆகுது. நான் தேசிய விருது கமிட்டியில் இருந்தபோது நான் பார்த்து ரசித்த பல படங்கள் தேர்வுக்கே வரல. வந்தாதானே தேர்வு செய்ய முடியும்.

அந்தக் காலத்தில் எல்லாம் விருதுக்காக யாரும் படம் அனுப்பல. ஒரு சாரார் மட்டுமே விருதுக்காகவே படம் எடுத்து அதை அனுப்பிக்கிட்டு இருந்தாங்க. இப்பத்தான் கமர்சியல் சினிமாவுக்கும் விருது தர்றாங்க. ரிஷப் ஷெட்டி, அல்லு அர்ஜூன், தனுஷ் போன்றோர் விருது வாங்குறாங்க.
மற்றபடி தேசிய விருதையும் தாண்டிய தாதா சாகேப் பால்கே போன்ற விருதுகளை எல்லாம் வாங்கியிருக்கிறார் சிவாஜி கணேசன் சார். அது மாதிரிதான் மற்றவர்களும்.’’என்று விளக்கமளித்துள்ளார்.
