சிவகார்த்திகேயன் நடித்துள்ள பராசக்தி படத்திற்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் ‘பராசக்தி’. இந்திமொழிக்கு எதிராக தமிழகத்தில் நடந்த மாணவர்கள் போராட்டத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் படம் பராசக்தி. இந்த படம் வரும் ஜனவரி 10 ம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆக இருக்கிறது.

இந்த நேரத்தில் இயக்குநர் ராஜேந்திரன் என்பவர், தனது ‘செம்மொழி’ என்கிற கதையை திருடி பராசக்தி படம் எடுக்கப்பட்டிருக்கிறது. செம்மொழி கதை தயாரிப்பாளர் சேலம் தனசேகரன் மூலம் நடிகர் சூர்யாவுக்கு சென்று பின்னர் அது சூர்யா மூலம் சுதா கொங்கராவுக்கு சென்று பராசக்தியாக மாறி இருக்கிறது. தென்னிந்திய எழுத்தாளர்கள் சங்கத்தில் ஜனவரி மாதத்திலேயே புகாரளித்தும் நடவடிக்கை இல்லை. ஆகவே, இந்த படத்தை வெளியிட இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த வழக்கில் பராசக்தி தயாரிப்பாளரும் இயக்கும் பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது. இன்று தயாரிப்பு நிறுவனம் சார்பில், பெரும் பொருட்செலவில் எடுக்கப்பட்டுள்ள படத்திற்கு தடை விதித்தால் பெரும் நஷ்டம் என்று கேட்டுக்கொண்டதால் பட வெளியீட்டிற்கு தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
அதே நேரம் வழக்கின் மறு விசாரணை வரும் 28ல் நடைபெறும் என்றும், புகார் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தென்னிந்திய திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கும் உத்தரவிட்டுள்ளது நீதிமன்றம்.
