ஜனநாயகன் படம் விஜய்க்கு கடைசி படம் என்பதால் இப்படம் ரிலீசில் செய்யும் வசூலை விஜயின் சாதனையாக காட்டலாம் என்று அந்த தரப்பு நினைத்திருந்த நேரத்தில் பராசக்தி படம் பொங்களுக்கு வருகிறது. இதனால் விஜய் ரசிகர்கள் சிவகார்த்திகேயனை வசைபாடி வருகின்றனர்.
விஜயின் வசூலை முறியடிக்க சிவகார்த்திகேயன் செய்த சதித்திட்டம்தான் என்று விஜய் ரசிகர்கள் சொல்லி வரும் நிலையில், நேற்று நடந்த பராசக்தி ஆடியோ வெளியிட்டு விழாவில் இந்த விவகாரம் குறித்து மனம் திறந்தார் சிவகார்த்திகேயன்.

”டிசம்பரில் படம் ஆரம்பிக்கிறோம். தீபாவளி அல்லது அக்டோபருக்கு படத்தை கொண்டு வந்துவிடலாமென்று சொன்னார் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன். அக்டோபரில் ஜனநாயகன் படம் வருகிறது. அதனால் அந்த தேதியில் வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். பொங்கலுக்கு பராசக்தியை கொண்டு வரலாம் என்று முடிவெடுத்து அறிவித்தோம்.
திடீரென்று பார்த்தால் ஜனநாயகனும் பொங்கலுக்கு வருவதாக அறிவித்ததால், ஆகாஷ் பாஸ்கரனிடம் கேட்டேன். தேதியை மாற்றலாமா? என்று கேட்டேன். அப்படி மாற்றினால் ஏப்ரல் அல்லது மே மாதம்தான் படம் வர முடியும். ஜனவரி மாதம் ரிலீஸ் என்று ஏற்பாடுகள் செய்துவிட்டதால் பாதிப்புகள் ஏற்படும் என்று அவர் சொன்னதால் தயாரிப்பாளரின் பிரச்சனையை புரிந்துகொண்டேன். அது மட்டுமல்லாமல் 10 நாள் பொங்கல் தொடர்பான லீவு இருப்பதால் ரெண்டு படத்திற்குமே நல்லதுதான் என்று சொன்னார்.

உடனே, விஜய் மேஜேனர் ஜெகதீஸ்க்கு போன் செய்து, பராசக்தி படம் பொங்கலுக்கு வருவதாக அறிவித்திருந்தோம். இப்ப ஜனநாயகனும் வருதே? என்று கேட்க, அதனால் என்ன ரெண்டு படமும் வரட்டும் என்று சொன்னார் அவர். இல்ல, விஜய் சாரோட கடைசி படம் இது. அதனால தயக்கமாக இருக்குது. இடையில சில பேர் புகுந்து காமெடி பண்ணிடுவாங்க என்று சொல்லவும், 15 நிமிசம் டைம் கொடுங்க. சார்கிட்ட பேசிட்டு வந்துடுறேன்னு சொன்னார். 10 நிமிசத்துல லைன்ல வந்து, சார்ட்ட சொல்லிட்டேன். அதெல்லாம் ஒண்ணும் பிரச்சனை இல்ல. உங்களுக்கு வாழ்த்து சொல்லச்சொன்னார் என்றார் ஜெகதீஸ்.

விஜய் சார் ப்ரோ என்றுதான் கூப்பிடுவார். கோட் பட ரிலீசின்போது விஜய் சாருக்கு போன் செய்து படம் பற்றி சிலாகித்து சொன்ன போது, கோட் படத்தில் நான் நடித்ததற்காக நன்றி சொன்னார் விஜய். எங்களுக்குள் அந்த உறவு அப்படியேதான் இருக்கிறது.
33 வருசமா நம்மை எல்லாம் மகிழ்வித்த விஜய் சார், கடைசி படம்னு சொல்லி இருக்கார். ஜனவரி9ல் ஜனநாயகனை கொண்டாடுவோம். ஜனவரி 10ல் பராசக்தியை கொண்டாடுவோம். எவன் என்ன வேணும்னாலும் சொல்லட்டும். இந்தப் பொங்கல் அண்ணன் – தம்பி பொங்கல்’’ என்றார்.

இதையடுத்து, இவ்வளவு பெரிய ஹீரோ ஏன் விஜயிடம் நேரடியாக பேசவில்லை? எதற்கு ஜெகதீஷிடம் பேசவேண்டும். கோட் படத்தில் இருந்து நல்ல உறவு இருக்கிறது என்று சொன்னால் நேரடியாக பேசியிருக்கலாமே? எதற்குஇடையில் ஒரு ஆள்? இதிலிருந்து இருவருக்குள்ளும் மனவருத்தம் இருப்பது தெரிகிறது என்கிற பேச்சும் எழுந்திருக்கிறது.
