
நாடாளுமன்றத் தேர்தலின் போது பாஜக கூட்டணி உறவை அதிமுக முறித்துக் கொண்டபோது அதிமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். அது மட்டுமல்லாது சமூக வலைதளங்களில் #நன்றி_மீண்டும் வராதீர்கள் என்ற ஹேஷ்டேக்கினையும் டிரெண்ட் செய்து வந்தார்கள் அதிமுக தொண்டர்கள்.

தற்போது 2026 சட்டமன்ற தேர்தலுக்காக மீண்டும் பாஜகவுடன் அதிமுக உறவு கொண்டபோது அதிமுக தொண்டர்கள் யாரும் பட்டாசு வெடிக்கவில்லை. இனிப்புகள் வழங்கி கொண்டாடவில்லை. இதன் மூலம் அவர்கள் பாஜக கூட்டணியை விரும்பாது அதிருப்தியில் உள்ளனர் என்ற விமர்சனங்கள் எழுந்தன.
இந்நிலையில் இன்றைக்கு அதிமுகவின் ஓ.பன்னீர்செல்வம் அணி பாஜகவில் விலகுவதாக அறிவித்துள்ளது. இதனால் அந்த அணியினர் இனிப்புகள் வழங்கி கொண்டாடி வருகின்றனர்.

பாஜகவுடன் கூட்டணி அமைக்கும் போது கொண்டாடாத தொண்டர்கள் அக்கட்சியுடன் கூட்டணி உறவை பிரிக்கும் போது மட்டும் கொண்டாடுகிறார்கள் என்றால் பாஜகவை அதிமுக தொண்டர்கள் விரும்பவில்லை என்று தெரிகிறது.
இது தெரிந்தும் ஏன் அதிமுக தலைமை பாஜகவுடன் கூட்டணி அமைக்கிறது? என்ற கேள்விக்கு,

’’பாஜகவோடு கூட்டணிய முறிக்கும் போது மட்டும் பட்டாசு வெடித்துக் கொண்டாடு கிறார்களே.. ஒருவர் கூட அந்த பாஜகவோடு கூட்டணி அமைக்கும் போது அதை செய்வதில்லை. ஏன்னா கூட்டணிய ஏற்பாடு செய்யுறது அமலாக்க பிரிவு வருமானவரித்துறை.. கூட்டணிய முறிக்கிறது தொண்டர்கள்’’ என்கிறார் அதிமுகவின் முன்னாள் நிர்வாகி மருது அழகுராஜ்.