ஒருங்கிணைப்புக்கு இன்னமும் ஒத்து வராமல் இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. அந்த ஆத்திரத்தில், அவர் இருக்கும் வரையில் நாம் அதிமுகவில் இணையப்போவதில்லை? என்று ஆத்திரப்பட்டார் ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம். எடப்பாடி இருக்கும் வரையில் அதிமுகவில் ஏன் இணையப்போவதில்லை என்பதற்கு அவர் அழுத்தமான ஒரு காரணத்தை சென்னை புரசைவாக்கத்தில் அதிமுக தொண்டர் உரிமை மீட்பு கழகத்தின் மாவட்டச் செயலாளர்கள் மற்றும் கழக நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டத்தில் முன்வைத்தார்.

அவர், ‘’ நாவலர், ப.உ.சண்முகம், மாதவன் போன்று புரட்சித்தலைவரை ஏசியவர்களையும் திட்டியவர்களையும் கழகத்தின் பொதுச்செயலாளராக்கி, பொருளாளராக்கி கழகத்தை காப்பாற்றினார் எம்.ஜிஅ.அர். எஸ்.டி.சோமசுந்தரத்தை வீட்டிற்கே சென்று அழைத்து வந்து கழகத்தை காப்பாற்றியவர் எம்.ஜி.ஆர்.
அதே போன்று காளிமுத்து, வளர்மதி போன்றோர் கடுமையாக தன்னை விமர்சித்த போதிலும் கூட அவர்களை எல்லாம் அமைச்சராக்கி, சபாநாயகராக்கி, நாடாளுமன்ற உறுப்பினராக்கியவர் ஜெயலலிதா.
ஆனால் இன்றைக்கு அதிமுக குரங்கு கையில் மாட்டிக்கொண்ட பூமாலை போல் ஆகிவிட்டது. ஓபிஎஸ், டிடிவி என்று எல்லோரையும் உதிர்த்துக் கொண்டிருக்கிறது.

எடப்பாடி பழனிசாமி இல்லாத அதிமுக இருந்தால் நாம் ஒன்றிணைவோம். எடப்பாடி இருக்கும் வரை நாம் அதிமுகவில் இணையப்போவதில்லை. எடப்பாடியை வீழ்த்துவதான் நமது குறிக்கோள். அதிமுக இயக்கத்திற்கும் எடப்பாடிக்கும் சம்பந்தமில்லை. அவருக்கு அதிமுகவின் கொள்கை தெரியாது, கோட்பாடு தெரியாது. அதிமுக என்றால் என்னவென்கிற வரலாறு தெரியாத ஒரு தற்குறிதான் எடப்பாடி பழனிசாமி. அதனால் அவர் இருக்கும் வரையில் நாம் அதிமுகவில் இணையப்போவதில்லை’’ என்று வெடித்து தள்ளினார்.
