
கூட்டணி விவகாரத்தில் 1980க்கு பிறகு மீண்டும் அதே நிலைமை தமிழக அரசியலில் திரும்பியிருக்கிறது. அன்றைக்கு திமுக கூட்டணிக்கு வந்த நிலைமை இன்றைக்கு அதிமுக கூட்டணிக்கு வந்திருக்கிறது. ஆனால், அன்றைக்கு கலைஞர் எடுத்த அதிரடி முடிவை இன்றைக்கு பழனிசாமி எடுக்காமல் தயங்கி நிற்பதால் சோர்வில் உள்ளனர் அதிமுக தொண்டர்கள்.
பாஜகவுடன் இனி எக்காலத்திலும் கூட்டணி கிடையாது என்று பேசி வந்த அதிமுகவை, பாஜகவுடன் கூட்டணி அமைத்திருக்கிறோம் என்று பேச வைத்து விட்டது பாஜக தலைமை. இதுவரையிலும் கூட அதிமுகவினர் முழுமனதுடன் பாஜகவை ஏற்றுக்கொண்டதாக தெரியவில்லை. நிலைமை இப்படி இருக்கும் போது, தேசிய ஜனநாயக கூட்டணி வென்றதும் கூட்டணி ஆட்சிதான் என்று அமித்ஷா கொளுத்திப் போட்டுவிட்டார். அதுவும் பழனிசாமியை மேடையிலேயே வைத்துக்கொண்டு இதைச் சொல்லிவிட்டார்.

அமித்ஷாவின் இந்த பேச்சினால் அதிமுகவினர் கொந்தளித்தனர். ஆனால், அதிமுக சீனியர்களோ, அமித்ஷாவின் பேச்சு தவறாக புரிந்து கொள்ளப்பட்டுவிட்டது. கூட்டணி வென்றதும் அதிமுக ஆட்சிதான் என்று சொல்லி சமாளித்து வருகின்றனர்.
இதில் மீண்டும் ஒரு குண்டை தூக்கி போட்டிருக்கிறார் அமித்ஷா. என்.டி.ஏ. கூட்டணி வென்றதும் அதிமுகவைச் சேர்ந்தவர் ஒருவர்தான் முதலமைச்சராக வருவார் என்று சொல்லி இருக்கிறார் அமித்ஷா. அமித்ஷா இப்படிச் சொன்னதால், அப்படி என்றால் முதலமைச்சர் வேட்பாளர் பழனிசாமி இல்லையா? பாஜகவின் தேர்வு செங்கோட்டையனா? என்ற கேள்வி எழுந்திருக்கிறது.
இது ஒரு புறமிருக்க, அதிமுகவை பாஜக கபளீகரம் செய்து கொண்டிருக்கிறது. 2026 சட்டமன்ற தேர்தலோடு அதிமுக காணாமல் போகும் என்று எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றன.

இந்நிலையில், உளுந்தூர்பேட்டையில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய பழனிசாமி, ‘’எந்தக் கொம்பனாலும் அதிமுகவை கபளீகரம் செய்ய முடியாது. தனிப்பெரும்பான்மையுடன் அதிமுக ஆட்சி அமைக்கும்’’ என்று சொல்லி இருக்கிறார். பழனிசாமி இப்படிச் சொல்லி இருப்பது பாஜகவுக்குத்தான் என்கிறார் விசிக திருமாவளவன்.
தனிப்பெரும்பான்மையுடன் அதிமுக ஆட்சி அமைக்கும் என்றால் கூட்டணி ஆட்சியில் பழனிசாமிக்கு விருப்பம் இல்லையா? அப்படி இல்லை என்றால் அமித்ஷாவை அதை அறிவிக்க வைத்து விடலாமே. அப்படி செய்யாது இருப்பதால் அதிமுகவினரிடையே குழப்பம் நீடிக்கிறது. இதே குழப்பத்துடன் தேர்தல் வரை சென்றால் அது சரியாக இருக்காது என்றே கருதுகின்றனர் அதிமுகவினர். இதனால் கூட்டணி – அதிகாரத்தில் குழப்பம் இல்லாமல் தெளிவுபடுத்தி விட்டு அடுத்தக்கட்டவற்றை செய்ய வேண்டும் என்று பழனிசாமிக்கு அறிவுறுத்துகின்றனர் சீனியர் அரசியல் நிபுணர்கள் சிலர்.

1980இல் திமுகவும் காங்கிரசும் இணைந்து தேர்தலை சந்திக்க இருந்த நிலையில், முதலமைச்சர் வேட்பாளர் யார் என்று யாரும் இல்லை. தேர்தலில் வென்றதும் திமுக, காங்கிரசில் எந்த கட்சிக்கு அதிக எம்.எல்.ஏக்கள் கிடைக்கிறார்களோ அதைப்பொறுத்தே எந்த கட்சி சார்பில் முதலமைச்சர் என்று தேர்வு செய்யப்படும் என்று காங்கிரஸ் தலைவர்கள் பலரும் சொல்லி வந்த நிலையில் திமுகவில் சலசலப்பு ஏற்பட்டது. ஆர்.வெங்கட்ராமனும் இதையே சொன்னபோது திமுகவில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது. இதில் அதிருப்தி அடைந்த கலைஞர், காங்கிரசுடனான பேச்சுவார்த்தையை உடனே நிறுத்தினார். இதில் அதிர்ச்சி அடைந்த இந்திராகாந்தி, கலைஞர் மு.கருணாநிதியே முதலமைச்சராக இருப்பார் என்று அறிவித்தார். இதனால் திமுக – காங்கிரஸ் கூட்டணி இணைந்து தெளிவுடன் அந்த தேர்தலை சந்தித்தது.

இன்றைக்கு அதே போன்று தேர்தலில் வென்றால் அதிமுக ஆட்சிதான், பழனிசாமிதான் முதலமைச்சராக இருப்பார் என்று அமித்ஷா சொல்ல வேண்டும். அவரை பழனிசாமி சொல்ல வைக்க வேண்டும். கலைஞருக்கு இருந்த அந்த துணிச்சல் இன்றைக்கு பழனிசாமிக்கு இல்லாமல் போனது ஏன்? என்று அதிமுக முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி உள்ளிட்ட பலரும் கேட்கின்றனர்.

செய்ய வேண்டிய இதை முறையாக செய்யாமல் ‘’எந்தக் கொம்பனாலும் அதிமுகவை கபளீகரம் செய்ய முடியாது. தனிப்பெரும்பான்மையுடன் அதிமுக ஆட்சி அமைக்கும்’’ என்ற வீண் பேச்சு ஏன்? என்றே முணுமுணுக்கின்றனர் அதிமுகவினர்.