நடிகை விஜயலட்சுமி விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். உச்சநீதிமன்றத்தில் அவர் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியுள்ளார்.
தனக்கு எதிராக விஜயலட்சுமி தொடர்ந்த வழக்கை ரத்து செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் சீமான் கொடுத்த மனுவின் மீதான விசாரணையில் சீமான், விஜயலட்சுமி இருவருமே தங்களின் செயலுக்கு மன்னிப்பு கோர வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது.
அதன்படி இன்று, தனது சொல் மற்றும் செயல்களால் விஜயலட்சுமிக்கு வலி, காயம் ஏற்பட்டிருந்தால் நிபந்தனையின்றி மன்னிப்பு கோருகிறேன் என்று கூறியிருக்கிறார் சீமான். மேலும், விஜயலட்சுமிக்குக் எதிரான அறிக்கைகள், குற்றச்சாட்டுகளை திரும்பப் பெறுவதாகவும் கூறியிருக்கிறார் சீமான்.

இனி விஜயலட்சுமி குறித்து எந்த கருத்தையும் தெரிவிக்க மாட்டேன். இனி எக்காரணம் கொண்டும் விஜயலட்சுமியை தொடர்பு கொள்ள மாட்டேன்.
தனது மன்னிப்பை ஏற்றுக்கொண்டு வழக்கை முடித்து வைக்க வேண்டும் என்று பிரமாணப்பத்திரத்தில் கோரிக்கை விடுத்துள்ளார் சீமான்.
இதையடுத்து சீமான் மீதான வழக்கை வாபஸ் பெறுகிறேன் என்று சொல்லி இருக்கிறார் விஜயலட்சுமி. ஆனால், மன்னிப்பு கேட்க முடியாது என்று கூறியிருக்கிறார்.
சீமான் தரப்பு இதை ஏற்க மறுத்திருக்கிறது. உச்சநீதிமன்றமும், சீமான் மட்டும் ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும்? என்று கேள்வி எழுப்பி இருக்கிறது. சீமான் மீது நீங்களும் அவதூறு பரப்பி இருக்கிறீர்கள். அப்படி இருக்கும் போது மன்னிப்பு கேட்க என்ன தயக்கம்? என்று கேள்வி எழுப்பி இருக்கிறது.
இதற்கு, சீமான் மற்றும் அவரது ஏஜெண்டுகளால் தான் கடுமையாக பாதிக்கப்பட்டதாகவும், தனது குடும்பம் பொருளாதாரத்தில் நலிவடைந்துள்ளது என்பதையும் பிரமாணப்பத்திரத்தில் குறிப்பிட்டுள்ள விஜயலட்சுமி, தனது வாழ்வாதாரத்திற்காக உரிய இழப்பீட்டை சீமான் தர வேண்டும் என்று கோரியிருக்கிறார்.
சீமான் தரப்பு இதை ஏற்க மறுத்துள்ளது. வழக்கை இதற்கு மேலும் இழுத்தடிக்க வேண்டாம். முடித்து வைக்க வேண்டும் என்று நாங்களும் விரும்புகிறோம் என்று நீதிபதிகளும் தெரிவித்துள்ளனர்.
விஜயலட்சுமி மன்னிப்பு கேட்காததாலும், இழப்பீடு கேட்பதாலும் வழக்கு முடியாமல் சீமான், விஜயலட்சுமி தரப்பின் வாதங்கள் தொடர்ந்து வருகிறது.
