வாரிசு படத்தில் விஜய்க்கு அப்பாவாக நடித்தபோது விஜயை ஏகத்துக்கும் புகழ்ந்து தள்ளி வந்தவர் நடிகர் சரத்குமார். அதிலும் சூப்பர் ஸ்டார் பட்டம் விவகாரத்தில் விஜய்தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று சொல்லி ரஜினி ரசிகர்களை வெறுப்பேற்றினார். இதறு பெரிய அளவில் எதிர்ப்புகள் வந்தபோதிலும் கூட விஜய்தான் சூப்பர் ஸ்டார் என்று சொல்லி வந்தார்.
அப்படிப்பட்ட சரத்குமார் விஜய் அரசியலுக்கு வந்ததும் அவர் மீதான ஆதரவை வாபஸ் வாங்கிக்கொண்டார். விஜயை கடுமையாக விமர்சிக்கத் தொடங்கினார்.
இந்த நிலையில், அரசியல்வாதியாக விஜய்க்கு என்ன அறிவுரை சொல்ல விரும்புகிறீர்கள்? என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, ‘’விஜய் வளர்ந்த நடிகர் அவருக்கு நான் அறிவுரை கூறவேண்டியதில்லை. விஜயை இன்னும் நான் அரசியல்வாதியாக ஏற்கவில்லை. அதனால் அவருக்கு அறிவுரை சொல்லப்போவதில்லை.

அரசியலுக்கு வந்துவிட்டார் என்பதற்காக அவரை ஏற்க முடியாது. ஏன் என்றால் அவர் இன்னும் தனது கொள்கைகளை சரியாகச் சொல்லவில்லை. அரசியலில் அவரின் நிலைப்பாட்டை இன்னமும் முழுமையாக சொல்லவில்லை.
ஒரு விசயத்தை சொன்னால் அதை எப்படிச் செய்வேன் என்றும் சொல்ல வேண்டும். எல்லோருக்கும் வீடு இருக்க வேண்டும் என்கிறார். அதற்கான ஏற்பாடுகளை செய்வதாக சொல்கிறார். அதை எப்படிச் செய்வார் என்பதை சொல்லவேண்டும்.
ஏன் என்றால் தமிழ்நாடு அரசு நிறைய கடனில் இருக்கிறது. இதையெல்லாம் சமாளித்து எப்படி கொடுக்க முடியும்? என்பதை சொல்ல வேண்டாமா?

யாராலும் முடியாதபோதும் நான் இந்த உயிரை காப்பாற்றுவேன் என்று சொன்னால் எப்படி காப்பாற்றுவேன் என்று சொல்ல வேண்டாமா?
விஜய் இன்று வந்தவர். அவரை விட பெரிய பெரிய தலைவர்கள் இருக்கிறார்கள். இயக்கங்கள் இருக்கின்றன. அவர்களைப்பற்றி எல்லாம் கேட்டால் நான் பதில் சொல்லக் காத்திருக்கிறேன். கூட்டம் கூடுவதால் அவரை ஒரு பெரிய நபர் என்பது மாதிரி மீடியாக்கள் பிம்பம் அமைக்காதீர்கள்’’ என்று வெடித்து தள்ளிவிட்டார் சரத்குமார்.
