சென்னை புரசைவாக்கத்தில் அதிமுக தொண்டர் உரிமை மீட்பு கழகத்தின் மாவட்டச் செயலாளர்கள் மற்றும் கழக நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பேசிய ஓபிஎஸ், பழனிசாமியின் பெயரைச் சொல்வதற்கே வெட்கமாக இருக்கிறது என்று வெடித்தார். அவர், ‘’ அதிமுக எதற்காக தோற்றுவிக்கப்பட்டது? 1972ல் தொண்டர்களுக்காக இந்த இயக்கத்தை எம்.ஜி.ஆர். உருவாக்கினார். மூன்று முறை சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு யாராலும் வெல்ல முடியாத முதலமைச்சராக 10 ஆண்டுகாலம் இருந்தார். அவரின் மறைவுக்கு பின்னர் ஜெயலலிதா கழக பொதுச்செயலாளராக பொறுப்பெற்றுக்கொண்டு 30 ஆண்டுகாலம் கழகத்தின் அத்தனை நிலைகளிலும் நின்று மாபெறும் வெற்றி அடைந்தார்.

அப்படிப்பட்ட இந்த இயக்கம் இன்றைக்கு எப்படி இருக்கிறது.7 இடங்களில் டெபாசிட் இழந்திருக்கிறது. அதாவது 42 சட்டமன்ற தொகுதிகளில் தோல்வி கண்டிருக்கிறது அதிமுக. 14 நாடாளுமன்ற தொகுதிகளில் 3ஆவது இடத்திற்கு போயிருக்கிறது அதிமுக. அப்படி என்றால் எத்தனை தொகுதிகளில் 3ஆவது இடத்திற்கு அதிமுக தள்ளப்பட்டிருக்கிறது என்று நினைத்துப்பாருங்கள். 84 இடங்களில் அதிமுகவுக்கு 3ஆவது இடம். அதனால்தான் பழனிசாமியின் பெயரைச் சொல்வதற்கே வெட்கமாக இருக்கிறது.

அனைவரையும் ஒருங்கிணைக்க வேண்டும் ஒருங்கிணைப்பாளர் – இணை ஒருங்கிணைப்பாளர் என்று இருந்த நிலையில் தன் ஆதரவாளர்களை திரட்டி வைத்துக்கொண்டு போலியான ஒரு பொதுக்குழுவை கூட்டி ஒற்றைத்தலைமைதான் வேண்டும், பழனிசாமி சிறப்பாக கட்சியை நடத்திக்கொண்டிருக்கிறார் , அவர் வந்தால் அனைத்து தேர்தலிலும் வெற்றி பெறுவோம் எனு சொல்லித்தான் மிகப்பெரிய மாயையினை உருவாக்கி னார்கள். ஆனால் பழனிசாமி அதிமுக பொதுச்செயலாளராக பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர், 11 தேர்தல்களில் தோல்வியடைந்தார். அதிமுகவை படு பாதாளத்தில் தள்ளியதால் அனைத்து தொண்டர்களும் வேதனையில் வெம்பி வெதும்பி அடுத்து என்ன செய்வதென்று தெரியாது தவித்துக் கொண்டிருக்கின்றனர். அந்த நிலையை உருவாக்கிய பழனிசாமிக்கு வருகின்ற காலங்களில் நாம் சரியான பாடத்தை புகட்ட வேண்டும்’’என்றார் .
