தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பின் நிறுவன தலைவர் பசுபதி பாண்டியன் கொலைக்கு பழிக்குப் பழியாக தீபக் ராஜாவுடன் இணைந்து தூத்துக்குடி மாவட்டம் பழைய காயல் அருகே 2 பேரையும், ராஜபாளையத்தில் 2 பேரையும் கொலை செய்த வழக்கில் கைதாகி பரபரப்பை ஏற்படுத்தியவர் கண்ணபிரான்.
திருநெல்வேலி மாவட்டம் தச்சநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணபிரான் என்கிற கண்ணபிரான் பாண்டியன். சரித்திர பதிவேடு குற்றவாளியாக போலீசாரால் அறிவிக்கப்பட்டவர் கண்ணபிரான். தேவேந்திர குல வேளாளர் எழுச்சி இயக்கத்தின் தலைவரான கண்ணபிரான், மீது 15 கொலை வழக்குகள் உள்பட மொத்தம் 71 வழக்குகள் உள்ளன.
பல முறை குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறைக்கு சென்ற கண்ணபிரான், கொலைச் சம்பவங்களில் நேரடியாக களமிறங்காமல், சிறையில் இருந்து கொண்டே ஸ்கெட்ச் போட்டுக் கொடுத்து அதை நிறைவேற்றுவதில் வல்லவராக இருந்தவர். இவர் சொன்னதைச் செய்ய இளைஞர்கள் கூட்டம் ஒன்றை சேர்த்து வைத்திருக்கிறார்.

வழக்கு ஒன்றில் கடலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த கண்ணபிரான் நேற்று 7.11.2025 அன்று ஜாமீனில் விடுதலையானார். சிறை வாசலில் மனைவியும், மகனும், ஆதரவாளர்களும் காத்திருந்தனர். இவர்களுக்கு தெரியாமல் நெல்லை போலீசாரும் கண்ணபிரான் வருகைக்காக காத்திருந்தனர்.
சிறையில் இருந்து வெளியே வந்த கண்ணபிரான், தன் மகனை தூக்கி கொஞ்சிக்கொண்டே வந்தபோது, நெல்லை போலீசார் சுற்றி வளைத்தனர். கண்ணபிரான் கைது செய்யப்பட்டு கடலூர் சிறையில் அடைக்கப்பட்டதால் அவரது ஆதரவாளர்கள் நெல்லை தச்சநல்லூர் காவல்நிலையத்தின் மீது பெட்ரோல் குண்டுகள் வீசினர். கண்ணபிரான் தூண்டுதலின் பேரில்தான் இந்த சம்பவம் நடந்தது என்று போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

போலீஸ் வேனில் ஏற மறுத்தார் கண்ணபிரான். பிடிவாதமாக போலீசார் அவரை ஏற்றியதும், மகனை தூக்கிக்கொண்டு மனைவியும் போலீஸ் வேனில் ஏறிவிட்டார். வேறு வழியின்றி போலீசார் வாகனத்தை எடுத்துக்கொண்டு புறப்பட, கண்ணபிரான் ஆதரவாளர்கள் இன்னொரு வாகனத்தில் போலீஸ் வாகனத்தை விரட்டிச்சென்றனர்.
அசம்பாவீதம் நடப்பதை தவிர்க்கும் பொருட்டு, விருத்தாசலம் காவல் நிலையத்திற்குள் போலீசார் வாகனத்தை விட்டு, அங்கிருந்த பெண் போலீசாரின் உதவியுடன் கண்ணபிரான் மனைவியை இறக்கிவிட்டு விட்டு, கூடுதல் சிறப்பு போலீசார் பாதுகாப்புடன் கண்ணபிரானை நெல்லைக்கு கொண்டு சென்றனர் போலீசார்.
