
செங்கோட்டையன் பதவி நீக்கத்தின் போதே ராஜ் சத்யனையும் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று கட்சியின் மூத்த நிர்வாகிகள் பலரும் வலியுறுத்தியும் ராஜ்சத்யன் பதவியை பறிக்காமல் இருந்தார் பழனிசாமி. எதிர்ப்புகள் வலுத்து வருவதால் விழிபிதுங்கி நிற்கிறார் பழனிசாமி.
அதிமுகவிலிருந்து விலகி இருப்பவர்களை இணைக்க வேண்டும் என்று பொதுவெளியில் கோரிக்கை விடுத்ததால், அதற்கு காலக்கெடுவும் விதித்ததால் கட்சியின் மூத்த நிர்வாகி செங்கோட்டையனின் கட்சிப்பதவிகளை பறித்தார் எடப்பாடி பழனிசாமி.
செங்கோட்டையன் கெடு விதித்த மறு நாள் திண்டுக்கல்லில் நத்தம் விஸ்வநாதன், கே.பி.முனுசாமி, காமராஜ், விஜயபாஸ்கர், எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தினார் எடப்பாடி பழனிசாமி. இந்த ஆலோசனைக்கு பின்னர் செங்கோட்டையனின் பதவிகளை பறித்தார் பழனிசாமி. செங்கோட்டையன் பதவியை பறிக்க வேண்டும் என்று ஆலோசனை நடந்த போதே அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவின் மாநில செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜ்சத்யனை நீக்க வேண்டும் என்றும் என்று கட்சியின் சீனியர்கள் அழுத்தம் கொடுத்தும், ராஜ்சத்யனின் பதவியை பறிக்காமல் உள்ளார் எடப்பாடி பழனிசாமி. இதனால் எரிச்சலில் உள்ள சீனியர்கள் ராஜ்சத்யனை வெளியேற்றக்கோரி நெருக்கடி கொடுத்து வருகின்றனர்.

ராஜ்யசபா சீட் கேட்டு காலில் விழுந்தும் கூட தனக்கு கொடுக்காமல் தன் ஆதரவாளர் தர்மருக்கு கொடுத்துவிட்டதால் ஓபிஎஸ்க்கு எதிராக வேலைகள் செய்து கட்சியை விட்டே துரத்தி விட்டார் ராஜ்சத்யன். இதற்கு உடந்தையாக இருந்த கட்சியின் சீனியர்கள் பலரும் ராஜ்சத்யனுக்கு ஆதரவாக இருந்துள்ளனர்.
இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு, தன்னை மீறி எடப்பாடி பழனிசாமியை யாரும் சந்திக்க முடியாது என்ற நிலையை உருவாக்கிவிட்டார் ராஜ்சத்யன். பழனிசாமியை சந்திக்க வேலுமணி, தங்கமணி, சிவி சண்முகம் யார் வந்தாலும் அவர்கள் அருகில் சென்று ராஜ்சத்யன் அமர்ந்து கொள்வதால் சுதந்திரமாக, சில முக்கிய விசயங்களை தனிப்பட்ட முறையில் பேச முடியாமல் நொந்து போயிருக்கிறார்கள் கட்சியின் சீனியர்கள்.

போதைப்பொருள் வழக்கில் அதிமுக ஐடி விங் மாநில நிர்வாகி பிரசாத் கைதானபோது, ராஜ்சத்யன் பெயரும் அதில் அடிபட்டது, அதிமுக விளம்பர விவகாரத்தில் பழனிசாமியே ராஜ்சத்யன் மீது அதிருப்தியில் இருந்து வந்துள்ளார். அப்போதும் ராஜ்சத்யனிடம் இருக்கும் பொறுப்பை பறிக்கக் கோரி இருக்கிறார்கள் வேலுமணி, தங்கமணி, உள்ளிட்ட சீனியர்கள்.
இப்போது முன்னாள் எம்.எல்.ஏக்கள், கழக அமைப்புச் செயலாளர்கள் என்று பலர் இருக்கையில் பூத் கமிட்டி பொறுப்பாளர்களாக ஐடி விங் நிர்வாகிகளை களமிறக்கி இருப்பது தங்களுக்கு எதிரான செயல் என்று கருதி, இதற்கு காரணமான ராஜ்சத்யனை வெளியேற்ற வேண்டும் என்று பழனிசாமிக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றர் கட்சியின் சீனியர்கள்.
ஏன்ன செய்யப்போகிறார் எடப்பாடி பழனிசாமி?