இதுவரை நடந்த 5 கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்திருக்கும் நிலையில் இன்று நடந்த 6ஆவது கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்திருப்பதால் அக்டோபர் 17ம் தேதி அன்று நடைபெறவிருக்கும் 7ஆவது கட்ட பேச்சு வார்த்தையிலாவது ஒரு தீர்வு கிடைக்காதா என்று தவிப்பில் இருக்கின்றனர் சாம்சங் மற்றும் அதன் சார்பு நிறுவனங்களில் பணிபுரியும் 57 ஆயிரம் தொழிலாளர்கள்.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் இயங்கி வரும் சாம்சங் உற்பத்தி நிறுவனத்தில் நிரந்தர தொழிலாளர்கள், ஒப்பந்த ஊழியர்கள் என்று 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். சாம்சங் சார்பு நிறுவனங்களில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர்.
கடந்த 2007ஆம் ஆண்டில் தொடங்கி 16 ஆண்டுகளுக்கு மேலாக சாம்சங் நிறுவனம் ஸ்ரீபெரும்புதூரில் இயங்கி வரும் நிலையில், ஊதிய உயர்வு , போனஸ் உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சாம்சங் ஊழியர்கள் போராடினர். அவர்களின் கோரிக்கைகள் பரிசீலனையில் உள்ளது என்று நிர்வாகம் தெரிவித்திருக்கிறது.
இதையடுத்து சிஐடியு உடன் இணைந்த புதிதாக தொடங்கப்பட்ட ‘சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கம்-ஐ ஆலை நிர்வாகம் அங்கீகரிக்க மறுத்ததால் தொழிற்சங்கம் உதவியுடன் இச்சங்கத்தில் இருப்போர் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் போராடத் தொடங்கினர். 26 நாட்களுக்கு மேலாகியும் தொடர்ந்து போராடி வருகின்றனர். போராட்டத்தின் அடுத்த வடிவமான குடும்பத்தினருடன் வந்து சாம்சங் தொழிலாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
நிலைமையை உணர்ந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில் சாம்சங் நிர்வாகத்தினரை நேற்று அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா. இந்த ஆலோசனையின்படி போராடும் தொழிலாளர்களுடன் பேசி ஒரு நல்ல முடிவை எடுப்பதாக ஆலை நிர்வாகம் சொன்னது.
இதையடுத்து இருங்காட்டுக்கோட்டை தொழிலாளர் துணை ஆணையர் அலுவலகத்தில் தொழிற்சங்க நிர்வாகிகள், சாம்சங் ஆலை நிர்வாகத்தினர் இன்று 6ஆவது கட்ட பேச்சுவார்த்தை நடத்தினர். அடுத்து அக்டோபர்17ம் தேதி அன்று 7ஆவது கட்ட பேச்சுவார்த்தை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர் வேலை நிறுத்த போராட்டத்தினால் ஆலை இயங்க முடியாத சூழல் ஏற்பட்டால் சாம்சங் நிறுவனம் தனது ஆலையை வேறு மாநிலத்திற்கு கொண்டு விடும் அபாயம் இருக்கிறது. அப்படி ஒரு நிலைமை வந்தால் வெளியே போராடும் தொழிலாளர்கள் மட்டுமல்லாது , சாம்சங் மற்றும் இந்நிறுவனம் சார்ந்த ஆலைகளில் பணிபுரியும் 57 ஆயிரம் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகிவிடும். அதனால் 7ஆம் கட்ட பேச்சு வார்த்தையில் ஒரு நல்ல தீர்வு எட்டப்படவேண்டும் என்று தவிப்பில் இருக்கின்றனர் போராட்டத்தில் ஈடுபடாமல் ஆலையில் பணியாற்றும் தொழிலாளர்கள்.