மக்களவை மற்றும் மாநில சட்டசபைகளில் 33 சதவிகித இடங்களை மகளிருக்கு ஒதுக்கும் சட்டத்தை உடனடியாக அமல்படுத்தக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், அரசியலைப்பை திருத்துவதற்கான நாடாளுமன்ற அதிகாரத்தின் மீது நீதித் துறை சோதனை செய்யும் வகையில் வழக்கு உள்ளதாகக் கூறி மத்திய அரசு எதிர்த்துள்ளது.
மக்கள் தொகை கணக்கெடுப்பு உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பைச் செய்யாமல் இட ஒதுக்கீட்டை நிறைவேற்ற இயலாது என மத்திய அரசு கூறியுள்ளது.
33% பெண்கள் இடஒதுக்கீடு சட்டத்தை நடைமுறைப்படுத்த மக்கள் தொகை கணக்கெடுப்பு செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்று மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.
நிறைவேற்றப்பட்ட சட்டத்தை காலவரையின்றி நிறுத்தி வைக்க முடியாது என்றும் வாதிடப்பட்டது.
மத்திய அரசு முறையான பதில் மனுவை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கை 3 வாரங்களுக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.