
Image Source: facebook.com/KamalaCinemas
தனுஷ், ரகுவரன், நயன்தாரா, கருணாஸ், கார்த்திக் குமார் உள்ளிட்ட பல திரைப் பிரபலங்களின் நடிப்பில், கடந்த 2008-ஆம் ஆண்டு வெளியான ‘யாரடி நீ மோகினி’ திரைப்படம், தற்போது தியேட்டர்களில் ரீ ரிலீஸ் செய்யப்பட்டு ரசிகர்களால் மீண்டும் கொண்டாடப்பட்டு வருகிறது.
நடிகர் தனுஷ் உடன் இணைந்து மித்ரன் ஜவஹர் இயக்கிய ‘திருச்சிற்றம்பலம்’ திரைப்படம் பாக்ஸ் ஆபீஸ் வெற்றிப் பெற்று 100 கோடி வசூல் செய்திருந்தாலும், இருவரும் பல ஆண்டுகளுக்கு முன்பு இணைந்து பெரிய அளவில் ஹிட் கொடுத்த ‘யாரடி நீ மோகினி’ திரைப்படத்திற்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.
விஜய்க்கு ‘கில்லி’, சிம்புவிற்கு ‘வல்லவன்’ என்ற வரிசையில், தனுஷுக்கு ‘யாரடி நீ மோகினி’ என சொல்லும் அளவுக்கு காதல், நட்பு, பாசம், ஆக்ஷன், காமெடி என அனைத்தும் கலந்த மசாலா படமாக அனைத்து ரசிகர்களையும் ரசிக்க வைத்த படம் தான் யாரடி நீ மோகினி.
இந்த நிலையில், ஹிட் அடித்த பழைய படங்களை திரும்பவும் வெளியிட்டு கலெக்க்ஷனை அள்ளும் சென்னை கமலா தியேட்டரில் ‘யாரடி நீ மோகினி’ திரைப்படமும் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
இந்த படத்தில் வரும் அனைத்து பாடல்களையும் யுவன் சங்கர் ராஜா தாறுமாறாக செதுக்கி இருந்தாலும், “வெண்மேகம் பெண்ணாக உருவானதோ” என்னும் அந்த பாடல் மட்டும் ரசிகர்களை இன்றும் கட்டவிழ்த்து விடாமல் இருக்கிறது.
தியேட்டரில் அந்த பாடல் ஓட, ஒட்டுமொத்த தியேட்டரும் எழுந்து அந்த பாடலை பாட, பின்புறம் படத்தின் இயக்குநர் மித்ரன் ஜவஹரே உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருந்திருகிறார்.
இதை பார்த்த கமலா தியேட்டர் ஓனர், அதோ பாருங்க படத்தின் இயக்குநரே உட்கார்ந்து இருக்கிறார் என கை காட்ட, ஒட்டுமொத்த ரசிகர்களும் எழுந்து நின்று மித்ரன் ஜவஹருக்கு கைதட்டி பாராட்டுக்களை தெரிவித்தனர்.
இதனால் மகிழ்ச்சியில் இயக்குனருக்கு ஆனந்தக் கண்ணீரே வந்து விட்ட காட்சிகள் வெளியாகி பார்போரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.