பத்திரிகை நிறுவன உரிமையாளர் என்றால் முறைப்படி அரசாங்கத்தின் RNI பதிவு பெற்று அந்தப் பத்திரிகையை நடத்துபவர் ஆவார். தொலைக்காட்சி நிறுவன உரிமையாளர் என்றால் TRAI உரிமம் பெற்று ஒன்றிய தகவல் ஒளிபரப்புத் துறை விதிகளின் கீழ் தொலைக்காட்சி சேனலை நடத்துபவர் ஆவார். ஆனால், YouTuberகள் என்று சொல்லப்படுபவர்கள் YouTube நிறுவனத்தின் உரிமையாளர்கள் அல்ல. YouTube என்ற தளத்தில் தங்கள் சொந்தக் காணொளிகளைத் தாங்களாகவே வைத்துக் கொண்ட பெயரின் அடிப்படையில் பதிவேற்றுபவர்கள் YouTuberகள் ஆகிவிடுகின்றனர். (ஆட்டோ ஓட்டுற நீ தொழிலதிபர்னா, ஆட்டோவைத் தயாரிச்ச கம்பெனிக்காரனை என்ன சொல்வது என்ற கவுண்டமணியின் வார்த்தைகள் நினைவுக்கு வந்தால் நம்ம கம்பெனி பொறுப்பல்ல)
YouTube தளத்தில் நேர்காணல்கள் உள்ளிட்ட பலவித காணொளிகளைப் பதிவேற்றுபவர்கள் அந்தத் தளத்தின் விதிகளுக்குட்பட்டவர்களே தவிர, ஒரு பத்திரிகை நிறுவனம் போலவோ, தொலைக்காட்சி நிறுவனம் போலவோ அரசாங்கத்தின் பதிவு பெற்ற-அங்கீகாரம் பெற்ற ஊடகவியலாளர்கள் கிடையாது. இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியில் எல்லாருக்கும் சென்று சேரக்கூடிய சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்திக் கொள்பவர்கள். இவர்கள் தங்களை செய்தியாளர்கள்-ஊடகர்கள் என்று நினைத்துக்கொள்வார்களேயானால், முறையாகப் பதிவு பெற்ற பத்திரிகை-தொலைக்காட்சி நிறுவனங்களைப் போலப் பொறுப்புடையவர்களாக நடந்து கொள்ள வேண்டும். காரணம், ஒரு செய்தி நிறுவனத்தின் சார்பில் வெளியிடப்படும் கருத்துகளுக்கு அந்த செய்தி நிறுவனம்தான் முழுப் பொறுப்பாகும்.
ஒரு பத்திரிகையில் வெளியான செய்தி, அவதூறானதாகக் கருதினால், அதில் குறிப்பிடப்படிருக்கும் நபர்-கட்சி-அமைப்பு உள்ளிட்டோர் செய்தியை வெளியிட்ட பத்திரிகை நிறுவனம் மீது வழக்குத் தொடர முடியும். தொலைக்காட்சி நிறுவனங்களும் அப்படிப்பட்டவைதான். தாங்கள் வெளியிட்ட செய்திக்கு அந்த நிறுவனம் பொறுப்பேற்றாக வேண்டும். வழக்கை சந்திக்க வேண்டும். வெளியான செய்தி அவதூறா, உண்மையா என்பதை சட்டத்தின் முன் நிரூபிக்க வேண்டும். செய்தி அவதூறானதாகவோ, பொய்யானதாகவோ இருந்தால் அந்த நிறுவனத்தார் நிபந்தனையற்ற மன்னிப்பு அல்லது வருத்தம் தெரிவித்து வெளியிடவேண்டும்.
எங்கள் செய்தி நிறுவனத்தின் சார்பில் கேள்விதான் கேட்டோம். பதில் சொன்னவர்தான் அவதூறான வார்த்தைகளைப் பயன்படுத்திவிட்டார் என்று கூறித் தப்பிக்க முடியாது. பத்திரிகை நிறுவனமாக இருந்தால், அந்த அவதூறு வார்த்தைகளை முற்றிலுமாக நீக்கிய பிறகே அச்சிட்டு, வெளியிட்டிருக்க வேண்டும். தொலைக்காட்சி சேனல் என்றாலும் இதே விதிதான். நேரலை ஒளிபரப்பில் ஒருவர் அவதூறான-தவறான-வதந்தியானக் கருத்துகளைத் தெரிவித்தாரென்றால் நேர்காணல் செய்பவரோ, நிகழ்ச்சியின் தொகுப்பாளரோ அத்தகைய கருத்துகளை மறுத்து, இதில் தனக்கும் தங்கள் நிறுவனத்திற்கும் உடன்பாடு இல்லை என்பதைப் பதிவு செய்ய வேண்டும். அதன்பின், வீடியோ பதிவுகளில் அவை நீக்கப்பட்டிருக்க வேண்டும். இவையெல்லாம் பத்திரிகை-தொலைக்காட்சி செய்தி நிறுவனங்களின் பொறுப்பு.
தங்களையும் செய்தியாளர்கள், ஊடகர்கள் என்று சொல்லிக் கொள்கிற YouTube நபர்கள் இத்தகைய பொறுப்பினை ஒரு போதும் உணர்வதில்லை. ஏனெனில், இவர்கள் முறையாகப் பதிவு பெற்ற நிறுவனத்தின் செய்தியாளர்களோ ஊடகர்களோ அல்ல. YouTube பார்வையாளர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தி, அதன் மூலம் கிடைக்கும் ‘டாலர்’களை மட்டுமே அறிந்தவர்கள். அந்த வருமானத்திற்காகவும், பிரபலத்தன்மைக்காகவும் காணொளிகளைப் பதிவிடுபவர்கள்.
நேர்காணலில் பதிலளித்தவர் மிக மோசமான-அவதூறான-பொய்யானத் தகவல்களைத் தெரிவிக்கும்போது, கேள்வி கேட்பவர் அதனை மறுத்து உண்மைத் தகவல்களை சொல்லக்கூடிய திராணி உள்ளவராக இல்லாமல், ‘ஆஹா.. ஓஹோ.. பேஷ்.. பேஷ்’ என்று அவதூறு பேசுபவருக்கு ஜால்ரா தட்டக்கூடாது. முகத்திற்கு நேராக மறுக்க முடியாத அளவுக்கு நெருக்கமும் நெருக்கடிகளும் இருக்குமானால், பதிவு செய்யப்பட்ட செய்தியை காணொளியாக YouTubeல் பதிவேற்றுவதற்கு முன்பாக அத்தகைய அவதூறுகளையும் பொய்களையும் எடிட் செய்தே வெளியிட வேண்டும். இல்லையென்றால், தன்னுடைய YouTube சேனலில் உள்ள பதிவுகளுக்கு அவரே பொறுப்பாளர் ஆகிறார். அவதூறுகளைப் பரப்புவதில் அவரும் துணை போனவர் என்றே சட்டத்தின் பார்வையில் பார்க்கப்படுவார்.
ஒரு பத்திரிகையில் வெளியாகும் அவதூறு செய்திக்காக அதன் ஆசிரியர், பதிப்பாளர், அச்சிட்டவர் ஆகியோருக்குப் பிறகே அதன் செய்தியாளர் பொறுப்பாவார். வெளியிட்ட உரிமையாளர்களே முதன்மைப் பொறுப்பாளர்கள். அந்த வகையில் YouTubeசேனல் நடத்துபவர்கள் யாரோ அவர்களே அவதூறு நேர்காணலுக்கு முதன்மைப் பொறுப்பாளர்.
கைது நடவடிக்கை என்பது, திட்டமிட்டே அவதூறை பரப்பும் நோக்கத்துடன், பொறுப்பற்ற முறையில் செயல்பட்டதற்குத்தானே தவிர, பேட்டி (நேர்காணல்) எடுத்ததற்காக அல்ல. பேட்டி எடுப்பவர்கள் எந்தக் கேள்வியும் கேட்கும் கருத்து சுதந்திரம் உண்டு. அந்தக் கேள்விகளுக்கு எத்தகைய பதில்கள் அளிக்கவும் நேர்காணலில் பங்கேற்பவருக்கு உரிமை உண்டு. அந்த பதில்கள் உண்மைத்தன்மையுடனும் அவதூறு பரப்பாமலும் இருக்க வேண்டும். கேள்வியைக் கேட்டு-அதற்குரிய பதிலுடன் வெளியிட்ட செய்தி நிறுவனத்திற்கு அத்தகைய சமூகப் பொறுப்பு இருக்கவேண்டும். இதுதான் சட்டம்.