பிரிட்டனின் பழமைவாத கட்சி எனப்படும் கன்சர்வேடிவ் கட்சியின் புதிய தலைவரை தேர்ந்தெடுக்கும் தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நடு-வலது பார்வை உடைய இந்தக் கட்சி கடந்த 2010 முதல் ஆட்சியில் இருந்து வந்த நிலையில், சமீபத்தில் நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் வரலாற்றில் சந்தித்திறாத படுதோல்வியை சந்தித்தது.
கடந்த 2024 ஜூலை மாதம் நடைபெற்ற பிரிட்டன் பொதுத் தேர்தலில், ரிஷி சுனக் தலைமையிலான கன்சர்வேடிவ் கட்சி வெறும் 121 இடங்களை மட்டுமே வென்று, கீர் ஸ்டார்மர் தலைமையிலான தொழிலாளர் கட்சியிடம் தோல்வியை தழுவியது.
மொத்தமுள்ள 650 இடங்களில், 411 இடங்களை கைப்பற்றி தொழிலாளர் கட்சி ஆட்சியை பிடித்ததை அடுத்து, தோல்விக்கு முழு பொறுப்பேற்று கன்சர்வேடிவ் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக ரிஷி சுனக் அறிவித்தார்.
ஜூலை மாதம் கன்சர்வேடிவ் கட்சியின் புதிய தலைவர் பதவிக்கான தேர்தல் அறிவிப்பக்கட்ட நிலையில், தற்போது வேட்பாளர்கள் இடையே காரசாரமான விவாதங்களால் சூடு பிடித்துள்ளது.
தேர்தலில் போட்டியிட பலர் வேட்புமனு தாக்கல் செய்த நிலையில், கடந்த செப்டெம்பர் 4-10 இடையே நடைபெற்ற முதல் சுற்று தேர்தலில் முதல் 4 வேட்பாளர்கள் மட்டும் தேர்வு செய்யப்பட்டனர்.
தற்போது கெமி படேனோச், ஜேம்ஸ் க்லெவர்லி, ராபர்ட் ஜென்ரிக் மற்றும் டாம் துகென்தாட் ஆகியோர் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
இந்நிலையில், நேற்று (செப்டம்பர் 29) முதல் பர்மிங்காம் நகரில் கன்சர்வேடிவ் கட்சியின் மாநாடு நடைபெற்று வருகிறது.
மாநாட்டில் இறுதி உரையாற்றிய இடைக்கால தலைவர் ரிஷி சுனக், தலைவர் தேர்தலுக்குப் பிறகு கட்சி ஒன்றுபட வேண்டும் என்றும், தேர்தல் பேரழிவிலிருந்து நமது கட்சி ‘பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்’ எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.
புலம்பெயர் இந்தியர்கள்
கன்சர்வேடிவ் கட்சியின் தலைவராகவும் பிரிட்டனின் எதிர்க்கட்சித் தலைவராகவும் இடத்தைப் பிடிப்பதற்கான பந்தயத்தில் முன்னணியில் இருக்கும் இருவர், பிரிட்டனுக்கு புலம்பெயருவோரையும் இந்தியர்களுக்கான விசாக்களை குறைப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என கூறி பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
தலைவர் பதவிக்கு போட்டியிடும் முன்னாள் குடிவரவு அமைச்சர் ராபர்ட் ஜென்ரிக், பிரிட்டனுக்குள் சட்டவிரோதமாக நுழையும் நாட்டினரை திரும்பப் அனுப்ப வேண்டும் எனவும், இந்தியா உள்ளிட்ட நாடுகளை கடுமையான விசாக் கட்டுப்பாடுகளுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என கூறியுள்ளார்.
மற்றொரு போட்டியாளரான முன்னாள் வர்த்தகத் துறை அமைச்சர் கெமி படேனோச், இதே கருத்தை வெளிப்படுத்தி உள்ளார். பிற நாடுகளில் இருந்து நமது நாட்டிற்கு வரும் பலர் தங்கள் சண்டைகளையும் பிரிட்டன் நாட்டின் தெருக்களுக்குக் கொண்டுவந்து அமைதியின்மையை ஏற்படுத்துகிறார்கள் என்ற கருத்தை முன்வைத்துள்ளார்.
“இந்தியாவில் இருந்து வருபவர்கள் சிலர் பிரிட்டன் தெருக்களுக்கு தங்கள் கலாச்சார தகராறுகளை கொண்டு வருவதை நான் பார்த்திருக்கிறேன்” என்றும் கெமி படேனோச் கூறியுள்ளார்.
நடந்துகொண்டிருக்கும் கன்சர்வேடிவ் கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தலில் வெற்றி வாய்ப்புள்ள போட்டியாளராக நைஜீரிய-பாரம்பரியம் கொண்ட கெமி படேனோச் பார்க்கப்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
வரும் அக்டோபர் 9, 10 தேதிகளில் 2-ம் சுற்று முடிவில் இரு போட்டியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு, இறுதி சுற்று அக்டோபர் 31-க்குள் நடத்தப்பட உள்ளது. நவம்பர் 2-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு கன்சர்வேடிவ் கட்சியின் புதிய தலைவர் அறிவிக்கப்பட உள்ளார்.