மனிதகுலம் ஒரு வினோதமான புதிய தொற்றுநோயை எதிர்கொள்ள உள்ளதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். ஆர்க்டிக் உறைபனியில் புதைந்திருக்கும் பண்டைக்கால ஜாம்பி வைரஸ்கள் ஒரு நாள் பூமியின் வெப்பமயமாதல் பிரச்சனையால் வெளிப்படும் என்றும், இதனால் புதிய நோய் பரவலை மனிதர்கள் எதிர்கொள்ளலாம் என்றும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
ரஷ்யாவின் உறைபூமி என்று கூறப்படும் சைபீரியாவில் உறைந்து கிடக்கும் வைரஸின் மாதிரிகளை சேகரித்து சில ஆண்டுகளுக்கு முன் விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்திருந்தனர் . Methuselah microbes என்கிற இந்த வைரஸ்களை ஜாம்பி வைரஸ் என்று அழைக்கப்படுகிறது.
சைபீரியாவில் உள்ள ஆர்டிக் பகுதியில் உறைந்து கிடக்கும் பனிமலைகள் அனைத்தும் உலக வெப்பமயமாதல் பிரச்சினையினால் உருகி வரும் நிலையில், விரைவில் ஜாம்பி வைரஸ் வெளியாகும் என விஞ்ஞானிகள் தற்போது எச்சரித்துள்ளனர்.
இந்த சூழலில், இந்த பழங்கால ஜாம்பி நுண்ணுயிரிகளால் ஏற்படும் நோயின் ஆரம்ப நிகழ்வுகளை சிறந்த முறையில் கண்டறியும் வகையில், விஞ்ஞானிகள் புதிய கண்காணிப்பு வலையமைப்பை அமைப்பதில் ஈடுபட்டுள்ளனர்.
தொற்றுநோய் பரவலை கட்டுப்படுத்தும் முயற்சியிலும் மனிதர்களுக்கு நோய் பாதித்தால் தனிமைப்படுத்தல் மற்றும் நிபுணர் மருத்துவ சிகிச்சை எப்படி வழங்கலாம் என்கிற பணியிலும் விஞ்ஞானிகள் இறங்கியுள்ளனர்.
கடந்த 2023-ல் நடத்தப்பட்ட ஆராய்ச்சியில் சைபீரியாவில் உள்ள ஏழு வெவ்வேறு பகுதிகளில் இருந்து பல்வேறு வகையான ஜாம்பி வைரஸ் மாதிரிகள் இருந்ததாகவும், அதில் ஒரு வைரஸ் மாதிரி 48,500 ஆண்டுகள் பழமையானது என்பதும் கண்டறியப்பட்டது.
ஜாம்பி வைரஸ்கள் 10 லட்சம் ஆண்டுகள் பழமையான வைரஸ்களாக இருக்கலாம் என்றும் சுமார் 3 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய மனித இனத்தை விட பழமையானவையாக இருக்கலாம் என்றும் விஞ்ஞானிகள் நம்புகிறார்கள்.
காலநிலை மாற்றத்தால் உறைபனிகளின் நிலை வேகமாக மாறிவருகிறது. ஆர்க்டிக் கடல் பனியின் அழிவு உலகின் மிகப் பெரிய ஆபத்தாக இருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்து வருகின்றனர்.
பூமியின் துருவப் பகுதியில் உள்ள யுஆர்க்டிக் (UArctic) பல்கலைக்கழகத்துடன் இணைந்து பல விஞ்ஞானிகள், ஜாம்பி வைரஸ்கள் வெளிப்பட்டால் எப்படி எதிர்கொள்வது என்கிற ஆராய்ச்சியில் இறங்கியுள்ளனர்.
Published by அசோக் முருகன்