
முதலமைச்சர் காமராஜரை திமுக தோற்கடித்து விட்டது என்பது கதை. திமுகவிடம் காமராஜர் தோற்ற போது அவர் முதலமைச்சராக இல்லை. ஏன்? திமுக முதன்முதலாக 1957ல் தேர்தல் களத்தில் நின்ற போது 15 எம்எல்ஏக்கள் வெற்றி பெற்றனர். அப்போது தமிழ்நாட்டின் முதலமைச்சராகவும் காங்கிரஸ் கட்சித் தலைவராகவும் இருந்தவர் பெருந்தலைவர் காமராஜர் தான். இந்தியாவில் அதற்கு முன்பு ஒரு மாநிலக் கட்சி இவ்வளவு குறுகிய காலத்தில் இந்த அளவுக்கு வெற்றி பெற்றதில்லை. இதுகுறித்து காங்கிரசின் டெல்லி தலைமை, அதாவது பிரதமர் நேரு விசாரித்தார். அப்போது காமராஜர், “மக்களை மயக்கும் மொழியில் திமுகவினர் பேசியதால் அவர்களுக்கு ஓட்டு விழுந்து விட்டது. அடுத்த முறை மக்கள் ஏமாற மாட்டார்கள்” என்று தனது தலைமையிடம் சமாளித்தார். ஆனால் 1962 சட்டமன்றத் தேர்தலில் திமுகவினர் 50 பேர் வெற்றி பெற்றனர்.
திமுகவின் வளர்ச்சியை இனி தடுக்க முடியாது என்பதை மக்களின் மனம் அறிந்த பெருந்தலைவர் காமராஜர் புரிந்து கொண்டார். அதனால் காங்கிரஸ் கட்சியில் உள்ள சீனியர்கள் தங்கள் பதவிப் பொறுப்பை விட்டு விட்டு கட்சிப் பணியை கவனிக்க வேண்டும் என்கின்ற கே பிளான் அதாவது காமராஜ் பிளான் என்பதை நேருவிடம் அவர் அளித்து, அதற்கான முன் உதாரணமாக, அவரே தன்னுடைய முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். 1963ஆம் ஆண்டு முதல் தமிழ்நாட்டை ஆண்டவர் காமராஜர் அல்ல, காங்கிரஸ் கட்சியின் பக்தவத்சலம் ஆவார்.
பக்தவத்சலம் காலத்தில் தான் இந்தி ஆதிக்கத்தை எதிர்த்து தமிழர்கள் தீக்குளித்தனர். துப்பாக்கி சூட்டுக்கு பலியாகினர். அப்போது பெருந்தலைவர் காமராஜர் அமைதி காத்தார். பதவி பொறுப்பு எதுவும் வேண்டாம் என்று 1963ல் முதல்வர் பதவியை ராஜினாமா செய்த காமராஜர் தேவையே இல்லாமல் 1967 தேர்தலில் விருதுநகர் தொகுதியில் போட்டியிட்டார் அவரை எதிர்த்த திமுகவின் வேட்பாளரான கல்லூரி மாணவர் சீனிவாசன் வெற்றி பெற்றார். ஒட்டுமொத்த காங்கிரஸ் கட்சியும் தோற்று போய் ஆட்சியை இழந்த போது காமராஜரும் இந்தத் தேர்தல் களத்தில் மக்களால் தோற்கடிக்கப்பட்டார் என்பதுதான் உண்மை. திமுக அவரைத் திட்டமிட்டு தோற்கடித்தது என்பது கதை.
திமுக ஆட்சியில்,1968 ஆம் ஆண்டு நாகர்கோவில் நாடாளுமன்ற தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் ஸ்தாபன காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்டு திமுக கூட்டணி கட்சியான சுதந்திரக் கட்சி வேட்பாளரை தோற்கடித்து வெற்றி பெற்றவர் காமராஜர். 1971 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தேர்தலின்போது ராஜாஜியுடன் கூட்டணி அமைத்து காமராஜர் தலைமையிலான காங்கிரஸ் போட்டியிட்ட நிலையில் அது படுதோல்வி அடைந்தது. எனினும் நாகர்கோவில் தொகுதியில் போட்டியிட்ட காமராஜர் வெற்றி பெற்று நாடாளுமன்றத்திற்கு சென்றார். திமுக ஆட்சியிலும் காமராஜர் வெற்றி பெற்று இருக்கிறார். விருதுநகரில் காமராஜர் தோல்வியடைந்த போது தமிழ்நாட்டில் நடைபெற்றது காங்கிரஸ் ஆட்சிதான் என்பதே உண்மை.
பெருந்தலைவர் காமராஜர் எளிமையாக வாழ்ந்தவர் என்பது எந்த அளவுக்கு உண்மையோ, அதே அளவுக்கு தனது தனிப்பட்ட விருப்பங்களுக்கான தேவைகளை அவர் முழுமையாக நிறைவேற்றிக் கொண்டார் என்பதும் உண்மை. சிகரெட் பிடிப்பதில் பெரும் ஆர்வம் உள்ளவரான காமராஜர் அன்றைய காலகட்டத்தில் மிகவும் விலை உயர்ந்த சிகரெட்டான 555தான் புகைப்பார். தனக்கு கிடைக்கும் வருமானத்தில் சொந்தக்காரர்களுக்கு அசைவ சாப்பாடு போட முடியாது என்பதால் முட்டை மட்டும் வாங்கிக் கொடுத்தவர் என்ற பெயர் காமராஜருக்கு உண்டு. அதனால் அவர் தனது விருப்பத்திற்கு ஏற்ற சிகரட்டை பிடித்ததை குறை சொல்லக்கூடாது. அது மனித இயல்பு.
சர்க்கரை நோய் உள்ளிட்ட உடல்நல பிரச்சினைகளால் பின்னாளில் பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் பாதிக்கப்பட்ட போது அவருடைய உடல் நலம் கருதி அரசு விடுதிகளில் அவர் தங்குவதற்கு ஏற்ப ஏசி வசதி செய்யப்பட்டது.
மிகவும் எளிமையானவரான காமராஜர் தன் கடைசி காலத்தில் வாழ்ந்த வீட்டை இப்போதும் சென்னை தியாகராய நகர் திருமலை பிள்ளை சாலையில் பார்க்க முடியும். பங்களா போன்ற அந்த வீடு அரசாங்கத்தால் நினைவுச் சின்னமாக பராமரிக்கப்படுகிறது.
அந்த வீட்டிலும் அவருக்கு ஏசி வசதி உண்டு. 1975 ஆம் ஆண்டு பிரதமர் இந்திரா காந்தியால் நாடு முழுவதும் நெருக்கடி நிலை நடைமுறைப்படுத்தப்பட்ட போது தனக்கு எதிரான அத்தனை அரசியல் தலைவர்களையும் இந்திரா காந்தி கைது செய்து சிறையில் அடைத்தார். தனது கட்சிக்கு எதிராக ஸ்தாபன காங்கிரசை வலிமையாக நடத்திய பெருந்தலைவர் காமராஜரை கடைசி வரை இந்திரா காந்தியால் கைது செய்ய முடியாததற்கு காரணம் அன்றைய முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியும் ஆவார்.
எமர்ஜென்சி கொடுமையை எதிர்த்து தனது ஆட்சியை ராஜினாமா செய்து விடுகிறேன் என்று கலைஞர் கருணாநிதி சொன்னபோது, இந்தியாவில் ஜனநாயகம் மிச்சம் இருப்பது தமிழ்நாட்டில் தான் நீங்கள் ராஜினாமா செய்து விட்டால் இங்கும் ஜனநாயகம் இருக்காது என்று அவருக்கு அறிவுறுத்தியவர் பெருந்தலைவர் காமராஜர். அப்போது உடன் இருந்தவர் பின்னாளில் இந்தியாவின் ஜனாதிபதியாக இருந்த நீலம் சஞ்சீவ ரெட்டி.
1975 ஆம் ஆண்டு அக்டோபர் இரண்டாம் நாள் காந்தி ஜெயந்தி நாளில் காமராஜரின் உயிர் பிரிந்தது. அவருக்கு அரசு மரியாதை அளித்து காந்தி மண்டபத்தின் அருகில் அவரது உடலை எரியூட்ட அனுமதித்து நினைவுச் சின்னம் அமைத்து அதில் ராட்டை சின்னத்தையும் பொறித்தவர் அன்றைய முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி.
அவருடைய ஆட்சிக்காலத்தில் காமராஜர் தங்கிய அரசு ஏற்ற வகையில் விடுதிகளில் ஏசி வசதியை உருவாக்கிக் கொடுத்தவர் கலைஞர் கருணாநிதி. அதைத்தான் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா தெரிவித்தார்.
பெருந்தலைவர் காமராஜர் உடன் பழகிய அவரை அறிந்த பழ.நெடுமாறன், தமிழருவி மணியன், கோபண்ணா போன்றவர்களுக்கு இது தெரியும்.
மாணிக்கம் தாக்கூர், ஜோதிமணி போன்ற காங்கிரஸ் எம்பிக்கள் திமுக தயவின்றி ஜெயிக்கவே முடியாது என்ற நிலையிலும் திமுகவை நோக்கி அவர்கள் வசை பாடுகிறார்கள்.
தமிழ்நாட்டின் அரசியலை திசை திருப்பும் நோக்கத்தில் அதிமுகவை தன் கூட்டணியில் சேர்த்துக் கொண்டு தன்னுடைய விருப்பப்படி கூட்டணி வியூகங்களை அமைத்து வரும் பாஜகவின் சதி வலையில் காங்கிரஸ் எம்பிகள் விழுந்து விட்டார்களோ என்ன சந்தேகம் வருகிறது.