
அன்புமணியை கட்சியிலிருந்து நீக்கிவிட்டதாக பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவித்தார். கட்சி அமைப்புமுறைப்படி அன்புமணியை டாக்டர் ராமதாஸால் நீக்க முடியாது என்கிறார் பா.ம.க. வழக்கறிஞர் பாலு. அன்புமணி தன் பெயருக்கு முன் இனிஷியலாக ஆர் என்று பயன்படுத்தலாமே தவிர, அன்புமணி ராமதாஸ் என்று போட்டுக்கொள்ளக்கூடாது என் டாக்டர் ராமதாஸ் தெரிவித்திருப்பது கவனிக்கத்தக்கது.
அன்புமணி மகன். ராமதாஸ் அப்பா. இருவருமே டாக்டர்கள். வடமாவட்டங்களில் செல்வாக்கு மிக்க சாதியின் அடிப்படையில் அரசியலை முன்னெடுத்தவர்கள். தைலாபுரம் தோட்டம் ஒவ்வொரு தேர்தலின்போதும் தமிழ்நாட்டு அரசியலின் முக்கியத்துவம் வாய்ந்த இடமாக மாறுவதைப் பார்த்த்திருக்கிறோம். இப்போது தோட்டத்துக்குள்ளேயே புயல் அடித்து, “நீ எனக்கு அப்பனுமில்லை. நான் உனக்கு மகனுமில்லை” என்று சொல்லாமல் சொல்வது போல உள்கட்சி அரசியல் சிக்கல்கள் உச்சகட்டத்தில் இருக்கின்றன.
இந்தியாவில் குடும்பங்களைப் போலவே அரசியலிலும் அப்பாவுக்குப் பிறகு மகனுக்குப் பொறுப்புகள் வருவது வழக்கமாகிவிட்டது. இந்திய அளவில் பண்டித ஜவகர்லால் நேரு குடும்பத்தையும், தமிழ்நாட்டு அளவில் கலைஞர் கருணாநிதி குடும்பத்தையும் எளிதாக அடையாளம் காட்டுவார்கள். ஆனால், அவர்களையும் தாண்டி பல அரசியல் குடும்பங்கள் இந்தியாவில் உண்டு.
உத்தரபிரதேச மாநில முதலமைச்சராக இருந்தவர் சமாஜ்வாடி கட்சித் தலைவர் முலாயம்சிங். பிறகு, அந்தக் கட்சி அவரால் அரசியலுக்கு கொண்டு வரப்பட்ட அவரது மகன் கைக்குப் போனது. முலாயம்சிங் தனிக்கட்சி நடத்தக்கூடிய அளவுக்கு நிலைமை உருவானது. ஜம்மு-காஷ்மீரின் தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவரான பரூக் அப்துல்லா தன் அப்பா ஷேக் அப்துல்லா போலவே மாநிலத்தின் முதலமைச்சரானார். பின்னர், தன் மகன் ஒமர் அப்துல்லா வளர்ந்தபிறகு, முதலமைச்சர் பொறுப்பை அவரிடம் தந்துவிட்டு, கட்சியைக் கவனித்துக்கொண்டு நாடாளுமன்ற உறுப்பினராக செயல்பட்டார். பீகார் மாநிலத்தில் ராஷ்ட்ரிய ஜனதாதளக் கட்சியின் தலைவர் லாலுபிரசாத் தனக்கு அரசியல் ரீதியாக நெருக்கடி கொடுக்கப்பட்டு, ஊழல் வழக்கு பாய்ந்தபோது தன் மனைவி ராப்ரி தேவியை முதலமைச்சராக்கினார். இப்போது அவரது கட்சியை மகன் தேஜஸ்வி தலைமை தாங்கி நடத்துகிறார். லாலு பிரசாத் மூத்த அரசியல் தலைவராக ஆலோசனைகளை வழங்கி வருகிறார். தெலங்கானாவில் டி.ஆர்.எஸ். என்ற கட்சியைத் தொடங்கி அதை பி.ஆர்.எஸ். என்று மாற்றிய சந்திரசேகரராவ் கட்சியில் மகன் ராமராவ்வுக்கும் மகள் கவிதாவுக்கும் மோதல் ஏற்பட்டு கவிதா வெளியேறக்கூடிய நிலை உள்ளது. ஆந்திராவில் ஒய்
பாட்டாளி மக்கள் கட்சியைப் பொறுத்தவரை அது வன்னியர் சங்கமாக இருந்து, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான சமூக நீதி இயக்கமாக உருவானது. டாக்டர் ராமதாஸூடன் பேராசிரியர் தீரன், பு.தா.அருள்மொழி, ஜி.கே.மணி போன்றவர்கள் இருந்தார்கள். வேல்முருகன் உள்ளிட்ட இளைஞர்கள் முனைப்பாக செயல்பட்டார்கள். தமிழுணர்வையும் தமிழ்த்தேசியத்தையும் முன்னெடுக்கும் சமூக நீதி அமைப்பாக அது கருதப்பட்டது. 2004 நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி அமைந்தபோது, தேர்தலில் வெற்றிபெறாத தன் மகன் அன்புமணியை கேபினட் அமைச்சராக்க வலியுறுத்தி அதை நிறைவேற்றிக்கொண்டவர் ராமதாஸ்தான். அதற்கு முன்பே, தலித் எழில்மலை போன்றவர்கள் தைலாபுரம் குடும்ப அரசியலை குற்றம்சாட்டி பா.ம.க.விலிருந்து வெளியேறிய நிலையில், அன்புமணியின் நேரடி அரசியலுக்குப் பிறகு முக்கிய தலைகள் பல விலகின.
2016 சட்டமன்றத் தேர்தலில் அன்புமணியை முதலமைச்சர் வேட்பாளராக முன்னிறுத்தி பா.ம.க. தேர்தல் களத்தை சந்தித்தது. பின்னர் வந்த தேர்தல்களில் கூட்டணி அமைப்பது தொடர்பாக ராமதாசுக்கும் அன்புமணிக்கும் கருத்து மாறுபாடுகள் இருப்பது அரசல்புரசலாக வெளிப்பட்டு, கடைசியில் வெளிப்படையாகவே வெடித்தது. அன்புமணி மற்றும் அவரது மனைவி உள்ளிட்ட குடும்பத்தினரின் செயல்பாடுகள் பற்றி விமர்சித்து ராமதாஸ் பேட்டி அளித்தார். தங்களைத் தவிர, ராமதாஸின் குடும்பத்தினர் யாரும் பா.ம.க. அரசியலில் செல்வாக்கு பெறக்கூடாது என அன்புமணித் தரப்பு வேலை பார்த்தது. இதுவே தற்போது அன்புமணியை நீக்குவதாக ராமதாஸ் அறிவிப்பதற்கும், அந்த அறிவிப்பு எந்த விதத்திலும் அன்புமணியின் அரசியல் செயல்பாட்டைக் கட்டுப்படுத்தாது என்று தெரிவிப்பதற்கும் காரணமாக அமைந்துள்ளது.
பாட்டாளி சொந்தங்கள் எனத் தொடங்கிய பா.ம.க. அரசியல், குடும்பச் சொத்திலும் கட்சி அரசியலிலும் பங்காளிகளாக வரக்கூடியவர்களுக்கு எதிரானப் போட்டி அரசியலாக மாறியிருக்கிறது.