கரூரில் த.வெ.க. தலைவர் நடிகர் விஜய் மேற்கொண்ட பரப்புரையின்போது நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிர்ப்பலியான விவகாரத்தை சி.பி.ஐ. விசாரிக்கும் என்றும், உச்சநீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான குழு கண்காணிக்கும் என்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் மகேஸ்வரி, அஞ்சரியா அடங்கிய அமர்வு உத்தரவிட்டுள்ளது. இது இடைக்கால உத்தரவு என்றும் தெரிவித்துள்ளது. கரூர் உயிர்ப்பலிகள் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி உத்தரவிட்ட சிறப்பு புலனாய்வு குழு விசாரணை இதன்காரணமாக இனி நடைபெறாது. சிறப்பு புலனாய்வுக் குழு இதுவரை விசாரித்த விவரங்களையும், ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்தின் விசாரணை விவரங்களையும் சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீதிமன்றங்கள் பல தீர்ப்புகளை வழங்குகின்றன. அவற்றை சட்டவல்லுநர்கள் ஆராய்ந்து கருத்துகளைத் தெரிவிக்கிறார்கள். சென்னை உயர்நீதிமன்றத்தின் எல்லைக்குட்பட்டதாக கரூர் வழக்கு இல்லையென்றும், சிவில் வழக்கை கிரிமினல் வழக்காக பதிவு செய்து விசாரித்தது குறித்தும் உயர்நீதிமன்ற பதிவாளரை பதிலளிக்க உத்தரவிட்டுள்ள உச்சநீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியின் உத்தரவில் இருந்த பல கருத்துகள் குறித்து கண்டனக் கருத்துகளையும் தெரிவித்திருக்கிறது. அதே நேரத்தில், உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 5 மனுக்களில் இரண்டு பேர், அதுவும் கரூர் நெரிசலில் உயிர்ப்பலியானவர்களின் குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு பேர், தாங்கள் இந்த மனுவைத் தாக்கல் செய்யவில்லையென்றும், தங்களிடம் நிவாரணம் வழங்குவதாகக்கூறியும், வேலை வாங்கித் தருவதாகக் கூறியும் கையெழுத்து வாங்கிவிட்டார்கள் என்று தெரிவித்திருப்பது அதிர்ச்சிக்குரியதாக இருக்கிறது. இது குறித்து, தேவைப்பட்டால் சி.பி.ஐ. விசாரிக்கும் என்று உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பளித்த நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

மிக முக்கியமான வழக்கு குறித்து அரசு அதிகாரிகள் விளக்கம் அளித்தது குறித்தும் உச்சநீதிமன்றம் தன் கருத்துகளைப் பதிவு செய்துள்ளது. இது குறித்து விளக்கும் சட்ட வல்லுநர்கள், “இதுவரை எந்த ஒரு அரசியல் கட்சிக் கூட்டத்திலும் இப்படியொரு நெரிசல் ஏற்பட்டு உயிர்ப்பலிகளானதில்லை. இது மிகவும் கொடூரமான நிலவரம். கூட்டம் நடத்திய தலைவர் உள்பட அவரது கட்சியை சார்ந்த யாரும், இந்த நெரிசலுக்கும் உயிர்ப்பலிகளுக்கும் பொறுப்பேற்காமல் பொறுப்பற்றத்தனமாக இன்று வரை உள்ளதுடன், காவல்துறை மீதும், அரசு மீதும், மருத்துவர்கள்-ஆம்புலன்ஸ் செயல்பாடுகளுக்கு உள்நோக்கம் கற்பித்தும் திட்டமிட்டுப் பரப்பிய சதிக்கோட்பாடுகள் அதிவேகத்தில் பரவிய நிலையில், மக்களிடம் தெளிவான விளக்கத்தை அளிக்க வேண்டியது அதிகாரிகள் கடமையாகும். அதனால்தான் வீடியோ ஆதாரங்களுடனும், மற்ற புள்ளிவிவரங்களுடனும் தங்கள் விளக்கங்களை அளித்தனர். அதனை செய்யாமல் விட்டிருந்தால், தமிழ்நாட்டில் பதற்றம் அதிகமாகி, நிலைமை மேலும் மோசமாகியிருக்கும். அந்த வகையில் அரசு அதிகாரிகள், காவல்துறையினர் தங்கள் கடமையை செய்திருக்கின்றனர் என்ற கோணத்தில் இதனை அணுகவேண்டும்” என்கின்றனர்.
உச்சநீதிமன்ற உத்தரவில், சி.பி.ஐ.க்கு எல்லா வசதிகளையும் அதற்குரிய செலவுகளையும் தமிழ்நாடு அரசு ஏற்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், சி.பி.ஐ.க்கு ஒத்துழைப்பாக இரண்டு ஐ.பி.எஸ். அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என்றும், அவர்கள் தமிழ்நாட்டு கேடரை சேர்ந்தவர்களாக இருக்கலாம். ஆனால், தமிழ்நாட்டை சொந்த மாநிலமாகக் கொண்டவர்களாக இருக்கக்கூடாது என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் பணியாற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகளில் கேடர் அதிகாரிகள், தமிழ்நாட்டு அதிகாரிகள் என்று பிரித்திருப்பது புதுவகை அணுகுமுறையாக இருப்பது குறித்து வழக்கறிஞர் அருள்மொழி தன் கருத்துகளைப் பதிவிட்டுள்ளார். “இடஒதுக்கீடு தொடர்பான வழக்கில், இது இந்த சமூகம் சார்நத வழக்கு. அதனால் இந்த இந்த சமூகத்தைச் சேர்ந்த நீதிபதிகள்தான் இருக்கவேண்டும். இந்த இந்த சமூகத்து நீதிபதிகள் இருக்கக்கூடாது என்று உத்தரவிடும் நிலைகூட வருமா?” என்கிற கோணத்தில் அவருடைய கருத்து அமைந்துள்ளது.

மூத்த வழக்கறிஞர் கே.எஸ்.விஜயன், “கரூர் நெரிசல் சம்பவத்தை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றியது சிறப்பான உத்தரவல்ல. உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி குழு கண்காணிக்கம் என்பதெல்லாம் சற்று மிகையாக உள்ளது” என கருத்து தெரிவித்துள்ளார். ஒரு தீர்ப்பு அல்ல உத்தரவு குறித்து சட்டரீதியான பார்வையுடன் பல கருத்துகள் வெளிப்படுவது இயல்பு. உச்சநீதிமன்ற அமர்வின் உத்தரவு என்பதால், அந்த உத்தரவின்படிதான் இனி விசாரணை நடைபெறும்.
இந்திய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய 2ஜி வழக்கில் இதைவிட பல கட்டுப்பாடுகள் இருந்தன. சி.பி.ஐ கோர்ட் விசாரணையை உச்சநீதிமன்றமே நேரடியாக கண்காணிக்கும் என்று உத்தரவிடப்பட்டது. அந்த வழக்கின் தீர்ப்பை நாடறியும். கரூர் நெரிசல் உயிர்ப்பலி வழக்கிலும், இறுதி உத்தரவில் தீர்ப்புகள் திருத்தப்படலாம்.
