நடந்து முடிந்த குறுகிய கால சட்டமன்றக் கூட்டத் தொடரில் தமிழ்நாடு தனியார் பல்கலைக்கழகங்கள் (திருத்தச்) சட்டமுன்வடிவை உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் தாக்கல் செய்தார். இதன் மீதான விவாதத்தின் போது எதிர்ப்புக் கருத்துகள் தெரிவிக்கப்பட்டன. எதிர்ப்பு தெரிவித்தவர்கள் பெரும்பாலும் தி.மு.க.வின் தோழமைக் கட்சியினர்தான். தோழமைக் கட்சியினர் எதிர்த்த நிலையில், தி.மு.க.வுக்கு சட்டமன்றத்தில் உள்ள பெரும்பான்மை பலம் காரணமாக இந்த சட்டமுன்வடிவு நிறைவேறியது.
தனியார் பல்கலைக்கழகங்கள் (திருத்தச்) சட்டமுன்வடிவு நிறைவேற்றப்பட்டது குறித்து சட்டமன்றத்திற்கு வெளியிலும் விவாதங்கள் நடைபெற்றன. அதில் கவனிக்கத்தக்க அம்சங்கள் இருந்தன. இந்தியாவில் உயர்கல்வி பயிலும் மாணவர்கள் அதிகமாக உள்ள மாநிலம் தமிழ்நாடு. இந்த எண்ணிக்கை எதிர்காலத்தில் மேலும் உயரும்போது பல்கலைக்கழகங்களின் தேவை ஏற்படுகிறது. இதுதொடர்பாக அரசுத் தரப்பில் சட்டமுன்வடிவுக்கு முன்வைக்கப்பட்ட காரணங்களில் ஒன்று, தனியார் பல்கலைக்கழகங்களுக்கான நில அளவு குறித்ததாகும்.

100 ஏக்கர் அளவுக்குத் தொடர்ச்சியான நிலம் இருந்தால்தான் தற்போது தனியார் பல்கலைக்கழகங்கள் அல்லது பல்கலைக்கழகங்களாகத் தரம் உயர்த்த விரும்பும் தனியார் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. நகரமயமாகும் மாநிலங்களில் முதன்மையாக உள்ள தமிழ்நாட்டில் 100 ஏக்கர் தொடர்ச்சியாக கிடைப்பது அரிது என்பதால், மாநகராட்சி பகுதியில் 25 ஏக்கர், நகராட்சி அல்லது பேரூராட்சி பகுதிகளில் 35 ஏக்கர், பிற பகுதிகளில் 50 ஏக்கர் என்ற அளவில் தொடர்ச்சியான நிலம் இருந்தால் போதும் என்பது இந்தத் திருத்தத்தில் முக்கியமானதாகும். அண்டை மாநிலங்களின் தனியார் பல்கலைக்கழகங்களின் சட்டங்களுக்கு இணங்க இந்தத் திருத்தம் என்றும் உயர்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்தார்.
நிலத்திற்கானத் திருத்தம் என்பது கல்விச்சூழலையே மாற்றிவிடும் என கல்வியாளர்களும் தி.மு.க.வின் தோழமைக் கட்சியினரும் தெரிவித்தனர். தற்போது 100 ஏக்கருக்கு குறைவான நிலத்தில் இயங்கும் கல்லூரிகள் தங்களைத் தனியார் பல்கலைக்கழகமாக மாற்றிக்கொள்ள அனுமதி பெற்றபின், பாடத்திட்டங்கள் அவற்றின் வசதிக்கேற்ப மாற்றியமைக்கப்படும என்றும், ஆசிரியர்கள்-விரிவுரையாளர்கள் நியமனம்-ஊதியம் உள்ளிட்டவற்றில் பாரபட்சமான அணுகுமுறை இருக்கும் என்றும், கல்விக்கட்டணம் உயர்வதால் மாணவர்களின் பெற்றோருக்கு கடும் சிரமம் ஏற்படுமென்றும், எல்லாவற்றுக்கும் மேலாக தனியார் பல்கலைக்கழகங்களில் இடஒதுக்கீடு முறை பின்பற்றப்படாமல் தங்கள் விருப்பத்திற்கு மாணவர் சேர்க்கை நடைபெறும் என்பதால் தமிழ்நாட்டில் திராவிட இயக்கங்கள் கட்டிக் காத்து வரும் சமூக நீதிக் கொள்கைக்கு தி.மு.க. ஆட்சியிலேயே ஆபத்து ஏற்படக்கூடும் என்ற எச்சரிக்கையையும் விடுத்தனர்.
தமிழ்நாட்டில் உயர்கல்வி பெறும் மாணவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு உயர்ந்து வரும் நிலையில், உதவிப் பேராசிரியர்கள் நியமனம் கடந்த 15 ஆண்டுகளாக நடைபெறவில்லை. தி.மு.க ஆட்சி அமைந்ததும் இதற்கானத் தேர்வு நடைபெறும் என தகுதிவாய்ந்தவர்கள் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், பல்வேறு வழக்குகள்-இடர்பாடுகள் தாண்டி தற்போதுதான் தேர்வுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதுபோலவே அரசு உதவிபெறும் கல்லூரிகளின் உதவிப் பேராசிரியர்கள் உள்ளிட்டோரின் ஊதிய நிலுவை-ஊதிய உயர்வு ஆகியவையும் கிடப்பில் போடப்பட்டுவிட்டன. இத்தகைய நிலையில், தனியார் பல்கலைக்கழக அனுமதியை எளிமைப்படுத்தும் வகையிலான சட்டமுன்வடிவு என்பது கல்லூரி ஆசிரியர்களின் பணிப் பாதுகாப்பையும் கேள்விக்குள்ளாக்கிவிடும் என்று கல்வியாளர்கள் கண்டனம் தெரிவித்து வந்தனர்.
தோழமைக் கட்சியினர், கல்வியாளர் அமைப்புகள், சமூக வலைத்தள செயல்பாட்டாளர்கள் உள்ளிட்டோர் தொடர்ந்து இது குறித்து தங்கள் கருத்துகளைப் பதிவிட்டு வந்த நிலையில், கடந்த 25ந் தேதியன்று உயர்கல்வித்துறை அமைச்சர் வெளியிட்ட அறிக்கையில், “முதலமைச்சர் அவர்களின் அறிவுரையின்படி இந்த சட்டமுன்வடிவு திரும்பப் பெறப்பட்டு, உரிய மறு ஆய்வு செய்யப்படும்” எனத் தெரிவித்துள்ளார். அவரது இந்த முடிவை கல்வியாளர்களும் அரசியல் அமைப்பினரும் வரவேற்றுள்ளனர்.
இடஒதுக்கீடு பாதிக்கப்படாத வகையிலும், மாணவர்களுக்கு கட்டணச் சுமை இல்லாத வகையிலும், ஆர்.எஸ்.எஸ். காவி சித்தாந்த கல்விக்கொள்கை உள்ளே நுழைந்துவிடாதபடியும் சிந்தித்து திருத்தங்கள் செய்கக் கட்டமைப்பு இருக்க வேண்டும் என்பதுதான் அனைவரின் எதிர்பார்ப்பும். அதற்கு மாறாக, ஒரு சில அதிகாரிகளின் அலட்சியமான மற்றும் உள்நோக்கம் கொண்ட செயல்பாடுகள் தனியார் கல்லூரி முதலாளிகளுக்கு லாபம் தரும் வகையில் அமைவதும், அது அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்துவதும் முற்றிலுமாகத் தவிர்க்கப்படவேண்டும். தொழிலாளர்களின் உழைப்பு நேரம் குறித்த சட்டமும் இதுபோல அனைத்துத் தரப்பின் கடும் கண்டனத்திற்குப் பிறகுத் திரும்பப் பெறப்பட்டது.
காலத்திற்கேற்ற சீர்திருத்தங்கள் தேவை. அவற்றை சிந்தித்து நிறைவேற்ற வேண்டியது மிகவும் அவசியம்.
