தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும், புதுச்சேரி உள்ளிட்ட யூனியன் பிரதேசங்களிலும் எஸ்.ஐ.ஆர். எனப்படும் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் சீராய்வு நடவடிக்கையை நவம்பர் 4ந் தேதி முதல் தொடங்குவதற்கு தேர்தல் ஆணையம் ஆயத்தமாக உள்ளது. ஆறு மாதங்களில் தேர்தலை சந்திக்கவுள்ள தமிழ்நாட்டில் இப்போதைய நிலையில் இத்தகைய சிறப்புத் தீவிர சீராய்வு என்பது வாக்காளர்களின் வாக்குரிமையைப் பறித்துவிடும் என அரசியல் கட்சிகள் பலவும் குற்றம்சாட்டுகின்றன.
இந்தக் குற்றச்சாட்டுக்கு காரணமாக இருப்பது, பீஹாரில் நடந்த இதே போன்ற எஸ்.ஐ.ஆர் நடவடிக்கையால் 65 இலட்சம் வாக்காளர்கள் தங்கள் வாக்குரிமையை இழக்க நேரிட்டதும், பிறகு அவர்கள் தங்கள் வாக்குரிமையை புதுப்பிப்பதற்கானப் படிவங்களைக் கொடுத்து, அதற்குரிய ஆவணங்களையும் இணைத்து வாக்காளர்களாக ஆக வேண்டியிருந்தது. இதன் காரணமாக, முஸ்லிம்கள், தலித் மக்கள், பெண்கள் உள்ளிட்டோரின் எண்ணிக்கை வாக்காளர் பட்டியலில் கணிசமாக குறைந்துவிட்டது. அத்தகைய நிலை தமிழ்நாட்டில் ஏற்படக்கூடாது என்பதே இங்குள்ள பெரும்பாலான கட்சிகளின் நிலைப்பாடு.
தேர்தல் ஆணையத்தின் எஸ்.ஐ.ஆர். நடவடிக்கையை ஆதரிக்கக்கூடியவை பா.ஜ.க.வும், அதன் கூட்டணிக் கட்சியான அ.தி.மு.க.வும்தான். பீஹாரில் பா.ஜ.க. கூட்டணிக்கு சாதகமான கண்ணோட்டத்திலேயே எஸ்.ஐ.ஆர். நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதால், இங்கும் அது தங்கள் கூட்டணிக்கு சாதகமாக இருக்கும் என நம்புகிறார்கள். எஸ்.ஐ.ஆர். ( SIR )என்பது இந்தியக் குடிமக்களின் சட்ட உரிமையான வாக்குரிமையைப் பறித்துவிடும் என தி.முக. உள்ளிட்ட மற்ற கட்சிகள் தெரிவிக்கின்றன.
நவம்பர் 2ஆம் நாள் சென்னையில் தி.முக. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் ஒரு தனியார் ஹோட்டலில் நடைபெற்றது. இது தி.மு.க. என்கிற கட்சி முன்னெடுத்த அரசியல் கூட்டம் என்றாலும், தங்களின் தோழமையாக உள்ள கட்சிகள், எதிர்நிலையில் உள்ள கட்சிகள் ஆகியவற்றுக்கு பாரபட்சமின்றி அழைப்பு விடுக்கப்பட்டது. பா.ஜ.க.வும் அ.தி.மு.க.வும் இதில் பங்கேற்காது என்பது அனைவரும் எதிர்பார்த்ததுதான். புதிய கட்சியும் இதுவரை தேர்தல் களத்தை சந்திக்காத கட்சியான த.வெ.க.வும் தி.மு.க. தலைமையிலான அனைத்துக் கட்சிக் கூட்டத்தைப் புறக்கணிப்பதாக அறிவித்தது. தே.மு.தி.க உள்ளிட்ட தி.மு.க. கூட்டணியில் இடம்பெறாத கட்சிகளும்கூட இந்தக் கூட்டத்தில் பங்கேற்று தங்கள் கருத்துகளை வெளிப்படுத்தியுள்ளன.
எஸ்.ஐ.ஆர் மீது அரசியல் கட்சிகள் பல சந்தேகக் கேள்விகளை எழுப்பின. அதில் முக்கியமான ஒன்று, வாக்காளர் பட்டியலில் திருத்தங்களை ஏற்படுத்துவது வழக்கமான நடைமுறைதான். புதிய வாக்காளர் சேர்ப்பு, முகவரி மாற்றம், இறந்த வாக்காளர்களை நீக்குதல் ஆகியவை தேர்தல் ஆணையத்தின் பணிகள். ஆனால், தேர்தல் நெருங்குகிற நிலையில், தற்போதைய வாக்காளர் பட்டியலை முழுவதுமாக முடக்கிவிட்டு, அனைவரும் மீண்டும் உரிய ஆவணங்களுடன் புதுப்பித்தால்தான் வாக்குரிமையைப் பெற முடியும் என்கிற எஸ்.ஐ.ஆர். நடவடிக்கை என்பது தேர்தல் ஆணையத்தின் அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்டதென்பதையும், அரசியல் சட்டத்திற்கு விரோதமானது என்பதையும் பல கட்சியினரும் எடுத்துக் கூறினர்.
ஒரு மாத காலத்தில் எஸ்.ஐ.ஆர். பணியை நிறைவேற்றவேண்டிய கட்டாயம் எதனால் வந்தது என்பதையும், இந்த அவசரமான நடவடிக்கையால் வாக்காளர்களின் வாக்குரிமை பாதிக்கப்படும் என்பதையும் தெளிவான காரணங்களுடன் முன் வைத்தனர். சி.ஏ.ஏ எனப்படும் குடியுரிமை திருத்தச் சட்டத்துடன் கொண்டு வரப்பட்ட என்.ஆர்.சி. என்ற தேசிய குடிமக்கள் பதிவு திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு வந்ததால், அதனை மறைமுகமாக நிறைவேற்றுவதற்காகத்தான் பா.ஜ.க. அரசு தேர்தல் ஆணையம் மூலம் எஸ்.ஐ.ஆர் நடவடிக்கையை மேற்கொள்கிறது என்ற குற்றச்சாட்டும் வைக்கப்பட்டது.
வடமாநிலங்களிலிருந்து அதிகளவிலான தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் பணியாற்றுவதுடன் அவர்களின் குடும்பத்தாரும் இங்கே தங்கி, குழந்தைகளைப் பள்ளிக்கூடங்களில் சேர்த்திருப்பதால், அவர்களை வாக்காளர்களாகப் பதிவு செய்து, பா.ஜ.க. தனக்கு சாதகமாக்க முயற்சிக்கிறது என்கிற குற்றச்சாட்டும் அழுத்தமாக வைக்கப்பட்டுள்ளது. இது போன்ற பல கருத்துகள் தெரிவிக்கப்பட்ட நிலையில், தேர்தல் ஆணையம் தமிழ்நாட்டில் எஸ்.ஐ.ஆர். நடவடிக்கையைக் கைவிடவேண்டும் என்றும், 2026 சட்டமன்றத் தேர்தல் முடிந்தபிறகு, நியாயமான முறையில்-உரிய கால அவகாசத்துடன் வாக்காளர் பட்டியல் திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் கூட்டத்தில் பங்கேற்ற அனைத்துக் கட்சிகளும் தெரிவித்தன.
இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், எஸ்.ஐ.ஆர் என்கிற சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் சீராய்வுக்கு தடைவிதிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தை நாடுவது என்றும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. தகுதியுள்ள ஒரு வாக்காளர் கூட தங்கள் உரிமையை இழக்கக்கூடாது.
தகுதியில்லாத ஒருவர் கூட வாக்காளர் பட்டியலில் இடம்பெறக்கூடாது. இதுவே ஜனநாயகத்தின் அடிப்படை என்பதை உணர்ந்து தேர்தல் ஆணையம் செயல்பட வேண்டும்.
