11 ஆண்டுகளாக நடைபெறும் பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க ஆட்சியில் தமிழ்நாட்டுக்கு சிறப்பான திட்டங்கள் என்னென்ன கொண்டு வரப்பட்டிருக்கின்றன என்று கேட்டால், பா.ஜ.க.வினராலேயே நேர்மையாக பதில் சொல்ல முடியாது. இந்தியா முழுமைக்குமான ரயில்வே திட்டங்கள், விமான நிலையங்கள் போன்றவற்றில்கூட தமிழ்நாட்டுக்கு போதிய அளவில் பங்களிப்பு செய்வதில்லை.
மத்திய அரசு என்றாலே மக்களுக்கு முதலில் நினைவுக்கு வருவது ரயில்வேதான். பாண்டியன் எக்ஸ்பிரஸ், சோழன் எக்ஸ்பிரஸ், சேரன் எக்ஸ்பிரஸ், பல்லவன் எக்ஸ்பிரஸ், வைகை எக்ஸ்பிரஸ். முத்துநகர் எக்ஸ்பிரஸ், மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் எனத் தமிழ்நாட்டுக்குரிய பெயர்களுடன் பல ஆண்டுகளாக ஓடிக்கொண்டிருக்கும் எக்ஸ்பிரஸ் ரயில்களில் முன்பதிவு செய்யாமல் பயணிக்கக்கூடிய பெட்டிகளை பா.ஜ.க. ஆட்சியில் குறைத்துவிட்டார்கள். எளிய மக்கள் இந்தப் பெட்டிகளில்தான் சொந்த ஊருக்கு செல்வார்கள். எளிய மக்களுக்கான வசதியைக் குறைத்துவிட்டு, ரயில்வே நிலைய முகப்புகளை பிரம்மாண்டமாக வடிவமைத்து, அதில் மதரீதியான அடையாளங்கள் முன்னிலைப்படுத்திக் கொண்டிருக்கிறது பா.ஜ.க அரசு.
வந்தேபாரத், தேஜா, சதாப்தி என்று வடமொழிப் பெயர்களுடன் முழுக்க முன்பதிவு பெட்டிகளைக் கொண்ட நவீன வசதிகளுடனான அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரயில்கள் இந்தியா முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டில் அதன் எண்ணிக்கை மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும் போது குறைவாகவே உள்ளது. தமிழ்நாட்டிற்கான நிதி ஒதுக்கீடு உள்பட எல்லாவற்றிலும் பாரபட்சம் காட்டி வஞ்சிக்கிறது பா.ஜ.க. அரசு.
இந்தியைக் கட்டாயமாக்கும் தேசியக் கல்விக்கொள்கையை ஏற்றுக்கொண்டால்தான் மாநிலத்திற்கான கல்வி நிதியை மத்திய அரசு வழங்கும் என்று பிடிவாதம் காட்டுவது, நூறு நாள் வேலைத் திட்டத்தில் தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு வழங்க வேண்டிய பங்களிப்பை குறைத்து தருவது, வரிப் பங்கீட்டில் தமிழ்நாட்டுக்குரிய பங்கை பிற மாநிலங்களுக்கு வழங்குவது எனத் தொடர்ச்சியாக வஞ்சகப் போக்கை மோடி அரசு கடைப்பிடித்து வரும் நிலையில், தமிழ்நாடு அரசு ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் என்ற பொருளாதார இலக்குடன் தன் சொந்த முயற்சியில் பன்னாட்டு அளவிலான மிகப் பெரிய நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போட்டு, முதலீடுகளை ஈர்த்து வேலைவாய்ப்பை பெருக்கி வருகிறது.
இந்தியாவில் அதிக தொழிற்சாலைகளைக் கொண்ட மாநிலமாகவும், அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கும் மாநிலமாகவும், அதிகளவில் பெண் பணியாளர்களைக் கொண்ட மாநிலமாகவும், தொழில் முதலீட்டிற்கு உகந்த மாநிலமாகவும் தமிழ்நாடு இருக்கிறது என்பதையும், பொருளாதராத்தில் இரட்டை இலக்க வளர்ச்சியை அடைந்த மாநிலம் தமிழ்நாடுதான் என்றும் இந்திய அரசுத் துறைகளின் புள்ளிவிவரங்களே உறுதிப்படுத்துகின்றன. நாட்டின் வளர்ச்சிக்குத் துணை நிற்கும் மாநிலமான தமிழ்நாட்டிற்கு மத்திய பா.ஜ.க. அரசு உரிய நிதியையும் வழங்காமல், திட்டங்களையும் வழங்காமல் வஞ்சிக்கும் நிலையில், மாநில அரசே முனைந்து ஈர்க்கும் முதலீடுகளையும், பா.ஜ.க. ஆளும் மாநிலங்களுக்குத் திசை திருப்பும் வேலையையும் மோடி அரசு செய்து வருகிறது. செமிகண்டக்டர் உற்பத்தி நிறுவனங்களைத் தமிழ்நாட்டிற்கு வரவிடாதபடி நெருக்கடி கொடுத்து குஜராத்திற்கு கொண்டு போய் விட்டது பா.ஜ.க. அரசு என்று 2024 நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தில் பகிரங்கமாகவே குற்றம்சாட்டினார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இன்று வரை பிரதமர் தரப்பிலிருந்தோ பா.ஜ.க. அரசிடமிருந்தோ அதற்கான மறுப்போ விளக்கமோ அளிக்கப்படவில்லை.
இந்தியாவல் நகரமயமான மாநிலங்களில் முதலிடம் தமிழ்நாட்டிற்கு உண்டு. 50%க்கு மேல் நகர்ப்புறங்களே இங்கு உள்ளன. இந்த நிலையில் மதுரை மற்றும் கோவை ஆகிய மாநகரங்களில் மெட்ரோ ரயில் திட்டத்திற்கான அனுமதியை மறுத்திக்கிறது மத்திய அரசு. இரண்டு மாநகரங்களிலும் மக்கள் தொகை 20 இலட்சத்திற்கு குறைவாக இருப்பதால் மெட்ரோ ரயில் திட்டம் உகந்ததல்ல என்று காரணம் சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால், உத்தரபிரதேசத்தில் உள்ள ஆக்ரா உள்பட பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் 15 இலட்சத்திற்கும் அதற்கு குறைவாகவும் மக்கள்தொகை கொண்ட நகரங்களுக்கு மெட்ரோ ரயில் திட்டத்திற்கான அனுமதியை வழங்கி, நிதி ஒதுக்கீடும் செய்துள்ளது பா.ஜ.க. அரசு.
கோவைக்கு பிரதமர் மோடி வருகை தருவதற்கு முதல் நாள் இந்த அனுமதி மறுப்பு செய்தி அதிகாரப்பூர்வமாக வெளியாகிறது. திட்டத்தில் சில மாற்றங்களைக் கேட்டிருக்கிறோம் என்று பா.ஜ.க தரப்பில் சால்ஜாப்பு சொல்லப்பட்டாலும், மாற்றங்கள் செய்து தந்தால் அனுமதி என்பதற்கு பதில், அனுமதியில்லை என்பதுதான் பதிலாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதுதான் பா.ஜ.க அரசின் போக்கு.
இன்னும் எத்தனை காலத்திற்கு வணக்கம், திருக்குறள், ஔவையார், பாரதியார் என்று மோடி தனது உருட்டுகளால் தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கப் போகிறார்?
