“நீதி பரிபாலனத்தில் நிர்வாகத் தகுதியின்மை, சோம்பல் கலந்த அகந்தை மற்றும் கள உண்மைகளைப் புரிந்து கொள்ளாத சூழல் இருப்பின், தீர்ப்பு என்னவாக இருக்க முடியும்?” எனக் கேட்டவர் உச்சநீதிமன்ற முன்னாள் நீதியரசரான மறைந்த வி.ஆர்.கிருஷ்ணய்யர் அவர்கள். ஜனநாயக நாட்டில் மக்களின் கடைசி நம்பிக்கை, நீதிமன்றம்தான். நீதிதேவதையின் கையில் உள்ள தராசின் முள் நடுநிலையாக இருக்கவேண்டும் என்பதே அந்த நம்பிக்கையின் அடிப்படை.
நம்பிக்கைக்கு மாறான தீர்ப்புகள் சில நேரங்களில் வெளியாகும். நம்பிக்கையின் அடிப்படையிலான தீர்ப்புகளும் சில நேரங்களில் வெளிப்படும். திருப்பரங்குன்றம் (Thirupparankundram) மலையில் வழக்கமாக தீபம் ஏற்றப்படும் உச்சிப்பிள்ளையார் கோயிலில் இந்த ஆண்டும் கார்த்திகைத் திருநாளில் தீபம் ஏற்றப்பட்டது. ஆனால், இந்து அமைப்பைச் சேர்ந்த ஒருவர், மலையில் உள்ள சிக்கந்தர் தர்காவை (Sikandar Dargah)கடந்து சென்றால், மேலே இருக்கக்கூடிய தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என வழக்கு தொடுத்தார். சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் தனி நீதிபதி, அங்கே தீபம் ஏற்ற அனுமதியளித்தார். அனுமதி கேட்டு மனு செய்தவர் தன்னுடைய ஆட்களுடன் சென்று தீபம் ஏற்ற முயன்றார். அதை கோவில் நிர்வாகம் ஏற்கவில்லை. தமிழ்நாடு அரசின் காவல்துறை அனுமதிக்கவில்லை.
இது தொடர்பாக தனி நீதிபதி, நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முன்னெடுத்தார். அரசு சார்பில் இரு நீதிபதிகள் அமர்வில் மேல்முறையீடு செய்யப்பட்டது. முந்தைய ஆட்சிகளிலும் காலம் காலமாகவும் உச்சிப் பிள்ளையார் கோயில் அருகேதான் தீபம் ஏற்றப்படுகிறது என்பதாலும், மலை உச்சியில் தர்காவுக்கு மேலே உள்ள கல் தூண் விளக்குத் தூண் அல்ல என்று அரசு தரப்பிலும், தர்கா தரப்பிலும் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. மதுரையின் வரலாறு அறிந்த வழக்கறிஞர்களும் அது தீபத்தூண் அல்ல என்றும் மதுரையில் பல குன்றுகளில் இதுபோன்ற தூண்கள் உள்ளன என்றும் தெரிவித்தனர். தீபத்தூண் என வாதாடியவர்கள் அதற்கான ஆதாரத்தை முறையாக வழங்கவில்லை. அவர்களின் நோக்கம், தர்கா வழியாக தங்கள் அமைப்பினரை மேலே ஏற்றிச் செல்ல வேண்டும் என்பதுதான்.
தமிழ்நாடு அரசு மற்றும் தர்கா தரப்பின் வழக்குகளை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் இரு நீதிபதிகள் அமர்வு அளித்த தீர்ப்பில், தீபத்தூண் என்ற வாதத்தை ஏற்றுக்கொண்டு, அந்த இடம் கோயிலுக்கு சொந்தமானது என்றும், அங்கே ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதத்தில் கோவில் நிர்வாகம் சார்பில் தீபம் ஏற்ற வேண்டும் என்றும், தீபம் ஏற்றும் நடவடிக்கையை கோவில் நிர்வாகம் மட்டுமே மேற்கொள்ள வேண்டும் என்றும், அந்தப் பகுதிக்கு மக்கள் செல்லக் கூடாது என்றும் தெரிவித்துள்ளது. மேலும், தீபத்தூணில் விளக்கு ஏற்ற அனுமதிப்பதால் பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படும் என்கிற அரசின் வாதமும் அச்சமும் அபத்தமானது என்றும், தங்களின் அரசியல் நோக்கம் நிறைவேறுவதற்காக எந்த ஒரு அரசும் இந்த அளவுக்கு தரம் தாழ்ந்து செயல்படக்கூடாது” என்றும் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தீர்ப்பை பா.ஜ.க. டெல்லியிலிருந்து வரவேற்றது. தமிழ்நாடு பா.ஜ.க.வின் தேர்தல் பொறுப்பாளரான மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் (Piyush Goyal), தமிழ்நாடு அரசு சனாதனத்திற்கு எதிராக செயல்படுவதாகவும், அதற்கு எதிராக இந்த தீர்ப்பு அமைந்துள்ளதாகவும் பேட்டி அளித்தார். பா.ஜ.க. இணையமைச்சர் எல்.முருகன் உள்பட பலரும் இதே ரீதியில் கருத்து தெரிவித்தனர். தீபத்தூண் விவகாரம் தொடர்பாக பல தொல்லியல் ஆய்வுகளையும் அதற்கான ஆதாரங்களையும் முன்வைக்கும் வழக்கறிஞர் வாஞ்சிநாதன், இந்தத் தீர்ப்பில் உள்ள முரண்பாடுகளை சுட்டிக்காட்டி பேட்டி அளித்தார்.
தமிழ்நாடு அரசின் சார்பில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்து, உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்வோம் எனத் தெரிவித்தார். தற்போது மதுரையில் வசிக்கும் யாரும், அந்த தீபத்தூண் எனப்படும் இடத்தில் கார்த்திகை தீபம் ஏற்றியதைப் பார்த்ததில்லை. உச்சிப்பிள்ளையார் கோவில் அருகேதான் தீபம் ஏற்றப்படுகிறது. தமிழ்நாட்டில் பல ஆட்சி மாற்றங்கள் ஏற்பட்ட நிலையிலும் தீபம் ஏற்றும் இடம் மாறவில்லை.
தீபத்தூண் எனப்படுவது ஆங்கிலேயர் காலத்தில் நடப்பட்ட சர்வே கல்லா, சமணர்கள் காலத்தில் தீபம் ஏற்றப்பட்ட இடமா, சமணர்கள் இரவில் ஆலோசனை நடத்தும்வோது விளக்கு ஏற்றும் இடமா எனப் பல்வேறு கருத்துகள் வெளிப்படுகின்றன. இவற்றில் உறுதியான ஆதாரம் எது என்பது குறித்து இன்னும் முடிவாகவில்லை. எனினும், இந்தத் தீர்ப்பும் இதற்கான மேல்முறையீடும் எதிர்பார்ப்பிற்குரியனவாக உள்ளன.
ஆதாரங்களின் அடிப்படையில் நீதி நிலைக்கட்டும். நீதியின் தீர்ப்பினால், வன்முறைக் கூட்டத்தின் கொட்டம் அடங்கி, நல்லிணக்கம் நிலைக்கட்டும்.
