திரைப்படங்களில் பேசப்படும் அரசியல் மீதான தணிக்கைத் துறையின் தாக்குதல் புதிதல்ல. தியாகபூமி தொடங்கி, அன்றைய வேலைக்காரி, பராசக்தி, காஞ்சித் தலைவன் உள்ளிட்ட பல படங்கள் சென்சாரின் கத்தரிக்குள் தலையை விட்ட நிகழ்வுகள் நிறைய உண்டு. தற்போது வெளியாகியுள்ள பராசக்தி படத்திற்கும் ஏறத்தாழ 25 வெட்டுகள். 1964-65 மொழிப் போர்க்களத்தில் மாணவர்களின் பங்களிப்பை முதன்முறையாகத் திரையில் பதிவு செய்யும் அந்தப் படத்தில் பல முக்கியமான வசனங்களும் காட்சிகளும் கட் செய்யப்பட்டுள்ளன. நடிகர் விஜய் தனது கடைசிப் படம் என அறிவித்திருக்கும் ஜனநாயகன் படத்திற்கு சென்சார் சான்றிதழ் கிடைக்காததால் பட வெளியீடே தள்ளிப் போயிருக்கிறது. முதலமைச்சரில் தொடங்கி, திரையுலகப் பிரமுகர்கள் வரை பலரும் தணிக்கைத் துறையின் இந்தப் போக்கை விமர்சித்துப் பதிவு செய்துள்ளனர்.
பராசக்தி (Parasakthi) படத்தைப் பொறுத்தவரை, தீ பரவட்டும் என்ற அறிஞர் அண்ணாவின் சொற்றொடர் நீக்கப்பட்டு, அதற்குப் பதிலாக, நீதி பரவட்டும் என மாற்றியமைக்க வலியுறுத்தியது சென்சார் போர்டு. இப்படிப் பல படங்களில் காட்சிகளும், எழுத்துகளும், வசனங்களும் மாற்றப்பட்டுள்ளன. மொழித் தொடர்பான படம் என்பதால், பராசக்தியில் இடம்பெற்ற தீ பரவட்டும் என்ற சொற்றொடர் கவனம் பெற்றதுடன், அது மாற்றப்பட்டதால் கூடுதல் விவாதத்திற்குள்ளானது. தீயை நீதி ஆக்கியிருப்பது, வன்முறைக்குப் பதில் நன்முறை எனச் சொல்லப்படுகிறது.
மொழிகள் மீதான ஆதிக்கத்தைத் தடுத்து, அந்தந்த மொழிகளுக்குரிய நீதியை வழங்கியிருந்தால், 1965 காலகட்டத்தில் தீ பரவியிருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது. இன்று வரை இந்தியாவில் மொழிச் சிக்கல்கள் தீரவில்லை. நேரு ஆட்சிக்காலத்தில் மொழிவாரி மாகாணங்கள் உருவாக்கப்பட்டதும், இந்தி பேசாத மாநிலங்கள் விரும்புகிற வரை ஆங்கிலம் இணை ஆட்சிமொழியாக நீடிக்கும் என்ற வாக்குறுதியும் ஓரளவு மாநில மொழிகளின் இருப்பை உறுதிப்படுத்தின. அதன்பிறகு, ஏற்பட்ட மாற்றங்களும், இந்தியைத் திணிப்பதற்கும், மாநில மொழிகளை அங்கீகரிக்க மறுப்பதும் மோடி ஆட்சி வரை தொடர்வதால், தமிழ்நாட்டைப் (Tamil Nadu) போலவே பல மாநிலங்கள் தங்கள் தாய்மொழிக்கானக் குரலை எழுப்பி வருகின்றன.
மத்திய அரசுக்கும் மாநிலங்களுக்கும் இடையில் மட்டுமே இந்த மொழிச் சிக்கல் நீடிப்பதாக நினைக்கக்கூடாது. மாநிலங்களுக்கிடையிலும் இந்த சிக்கல்கள் உள்ளன. கேரளா மாநலித்தில் மலையாள மொழி தொடர்பான 2025ஆம் ஆண்டு சட்ட வரைவு, கேரள அரசின் அனைத்து துறைகளுக்குமான தொடர்பு மொழியாக மலையாளமே பயன்படுத்தப்பட வேண்டும் என்பதையும், அரசுப் பள்ளிகளில் மட்டுமின்றி, அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை மலையாளம் கட்டாயமாகக் கற்றுக்கொடுக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்துகிறது.
கேரள முதல்வர் பினரயி விஜயன் அரசு நிறைவேற்றிய இந்த சட்டத்திற்கு கர்நாடக முதல்வர் சித்தராமையா எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறார். காரணம், கேரள எல்லைக்குட்பட்ட கர்நாடக மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில், அங்குள்ள மக்கள் கன்னடத்தைத்தான் பயின்று வருகின்றனர். அவர்களுக்கு மலையாளம் கட்டாயம் எனத் திணிப்பது எதிர்மறையான விளைவையே உண்டாக்கும் என சித்தராமையா தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் பல ஆண்டுகளுக்கு முன்பே தங்கள் மாநிலத்தில் கன்னடம் கட்டாயம் என்ற சட்டத்தைக் கொண்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
எனினும், கர்நாடக முதல்வரின் கருத்துக்கு கேரள முதல்வர் மறுப்பு தெரிவித்திருப்பதுடன், தங்கள் மாநிலத்தில் இயற்றப்பட்டுள்ள சட்டம், மொழிச் சுதந்திரத்தை வலியுறுத்துவதுடன், மொழித் திணிப்புக்கு எதிராகவே உள்ளது என்றும் விளக்கமளித்துள்ளார். கேரள அரசின் சட்டப்படி, மலையாளத்தைத் தாய்மொழியாகக் கொள்ளாத குழந்தைகள் அவர்களுக்கு வசதியான மொழியைத் தேர்ந்தெடுத்துப் படிப்பதற்கு அனுமதிகக்ப்பட்டுள்ளது என்றும், கேரள எல்லைக்குட்பட்ட கர்நாடக மற்றும் தமிழ்நாட்டு மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் அரசுத் துறை நிறுவனங்களுடனும் உள்ளாட்சி அமைப்புகளுடனும் வழக்கம்போலவே அவரவர் மொழியிலேயே எழுத்துப்பூர்வமாகத் தொடர்பு கொள்ளலாம் என்றும், அவர்களின் மொழியிலேயே அதிகாரிகளும் பதிலளிப்பார்கள் என்றும் தெளிவுபடுத்தியிருக்கிறார் கேரள முதலமைச்சர்.
தமிழ்நாட்டில் அண்ணா ஆட்சியில் இரு மொழிக் கொள்கை (Bilingual policy) நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்திக்கு இங்கே இடமில்லை என்று தமிழ்-ஆங்கிலம் என இரு மொழிகளை முன்னிறுத்தும் அந்த சட்டம் நடைமுறையில் உள்ள நிலையில், மொழிச் சிறுபான்மையினரின் தாய்மொழியும் கவனத்தில் கொண்டே செயல்படுத்தப்படுகிறது. தமிழ்நாட்டு எல்லைக்குட்பட்ட கன்னட, தெலுங்கு மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் அவரவர் தாய்மொழியைக் கற்பிப்பதற்கும், உருது பேசும் மக்களின் பிள்ளைகளுக்காக உருது மொழி கற்பிக்கவும் அனுமதிக்கப்பட்டிருக்கிறது.
மக்களின் உணர்வை மதித்து, அதற்கேற்ற நடைமுறையைப் பின்பற்றும் போது மொழிச் சிக்கல்களும் மோதல்களும் குறையும்.
