விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாமகவுக்கு மாம்பழ சின்னம் கிடைக்குமா? என்ற கேள்விக்குறி எழுந்திருக்கிறது. இதனால் கட்சியினரிடையே தன் ஆதங்கத்தையும், ஆத்திரத்தையும் வெளிப்படுத்தி வருகிறார் ராமதாஸ்.
மாநில கட்சி அந்தஸ்துக்காக பல ஆண்டுகளாக போராடிய விசிகவும், நாதகவும் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் மாநில கட்சி அந்தஸ்து பெற்றுவிட்டன. ஆனால், மாநில கட்சி அந்தஸ்தை இந்த மக்களவை தேர்தலில் இழந்து நிற்கிறது பாமக.
தேசிய ஜனநாயக கூட்டணியில் மக்களவை தேர்தலில் 10 தொகுதிகளில் போட்டியிட்ட பாமகவுக்கு வெறும் 4.23 சதவிகித வாக்குகளே கிடைத்தன. இதன் மூலம் அக்கட்சி மாநில கட்சி அந்தஸ்தை இழந்தது.
இந்த நேரத்தில் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வந்ததால், கட்சியின் செல்வாக்கை மீட்டெடுக்க வேண்டிய நெருக்கடி இருப்பதால், 13 ஆண்டுகளாக இடைத்தேர்தல்களை புறக்கணித்து வந்த பாமக, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடுகிறது. ஆனால், இந்த தேர்தலில் தங்கள் கட்சி சின்னமான மாம்பழ சின்னம் கிடைக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளதால், கடந்த 13ம் தேதி அன்று நடந்த பாமக உயர்மட்டக்குழுவில் பொங்கி வெடித்திருக்கிறார் ராமதாஸ்.
‘’நான் சொல்வதை யாரும் கேட்பது கிடையாது. நான் ஒரு முடிவு எடுத்தால் நீங்கள் ஒரு முடிவு எடுக்கிறீர்கள்’’ என்று ஆவேசப்பட்டு பேசியது, அன்புமணி ராமதாசைத்தானா? என்ற முணுமுணுப்புகள் எழுந்தன.
மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்தால் அடுத்து வரும் தேர்தல்களை சந்திப்பதில் சிக்கலாகிவிடும். அதனால் பாஜகவுடன் கூட்டணி கூடாது என்று ராமதாஸ் உறுதி இருந்த நிலையில், தன் மீதான வழக்குகள் காரணமாக பாஜகவுடன் கூட்டணி அமைத்தார் அன்புமணி ராமதாஸ் என்று அப்போது செய்திகள் பரவின. ராமதாஸ் சொன்னபடியே பாஜகவுடன் கூட்டணி அமைத்து மக்களவை தேர்தலில் வாக்கு சதவிகிதம் குறைந்து இப்போது சின்னம் கிடைக்குமா என்ற சிக்கல் எழுந்திருக்கிறது. இதனால்தான் அந்த முணுமுணுப்புகள் எழுந்திருக்கின்றன.
எப்படியும் மாம்பழ சின்னம் பெற்றுவிட வேண்டும் என்று, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாமகவுக்கு மாம்பழ சின்னம் ஒதுக்க வேண்டும் என்று தலைமை தேர்தல் ஆணையத்திற்கு இன்று கடிதம் அனுப்பி இருக்கிறது பாமக.
மாநில கட்சி அந்தஸ்து இல்லாததால் கரும்பு விவசாயி சின்னம் பந்தாடப்பட்டு, மைக் சின்னம் கிடைத்தது போன்று, பாமகவுக்கும் வேறு சின்னம் ஒதுக்கப்படுமோ? என்ற சந்தேகமும் எழுந்திருக்கிறது.