பட்டியல் இன சமூகத்தினர் இடஒதுக்கீட்டின் பயன்களை முழுமையாகப் பெறுவதற்காக அவர்களின் உட்பிரிவுகளை வரையறை செய்ய மாநில அரசுகளுக்கு அதிகாரம் உண்டு என உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அடங்கிய 7 நீதிபதிகளின் அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்துள்ளது. இந்த ஏழு நீதிபதிகளில் ஒருவர் மட்டுமே இதற்கு மாறான உத்தரவை வழங்கிருக்கிறார். மாநில அரசுகளுக்கு அதிகாரம் உண்டு என்பதை ஆறு நீதிபதிகள் ஏற்றுத் தீர்ப்பளித்திருப்பதால் பெரும்பான்மையின் அடிப்படையில் இது நடைமுறைக்குரியதாகிறது.
இந்திய குடியரசுத் தலைவரால் ஒப்புதலளிக்கப்பட்டுள்ள பட்டியல் இன சமூகத்தினரில் உட்பிரிவுகளை வரையறை செய்து இடஒதுக்கீடு வழங்க மாநிலங்களுக்கு அதிகாரமில்லை என ஆந்திரா, பஞ்சாப் உள்ளிட்ட மாநில அரசுகளின் நடவடிக்கைகளுக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கில்தான், மாநில அரசுகளுக்கு வரையறை செய்யும் அதிகாரம் உண்டு எனத் தீர்ப்பளித்துள்ளது உச்சநீதிமன்றம்.
பட்டியல் இன சமூகமாக அங்கீகரிக்கும் அதிகாரம் குடியரசு தலைவருக்கே உரியது. அந்த வகையில், பட்டியல் இன சமூகத்தில் உள்ள அருந்ததியர் இன மக்களுக்கு கடந்த 2009ஆம் ஆண்டு கலைஞர் கருணாநிதி தலைமையிலான தி.மு.க. ஆட்சியில் வழங்கப்பட்ட 3% உள் ஒதுக்கீட்டின் நியாயமும் நிலைநாட்டப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, பட்டியல் இன-பழங்குடி சமூகத்தினருக்கு 15% என்றிருந்த இடஒதுக்கீட்டினை 18%ஆக உயர்த்தியவர் கலைஞர் கருணாநிதி. 1970களில் இந்த உயர்வை மேற்கொண்ட நிலையில், 1989ஆம் ஆண்டில் 18% இடஒதுக்கீட்டை பட்டியல் இன மக்களுக்கு முழுமையாக வழங்கி, பழங்குடி சமுதாயத்தினருக்கு தனியாக 1% இடஒதுக்கீட்டை அளித்து இரண்டு சமுதாயத்தினரும் பயன் பெறச் செய்தார்.
பட்டியல் இன சமூகத்தில் பல பிரிவினர் உள்ள நிலையில், அவர்களில் இடஒதுக்கீட்டில் பலனை அதிகளவில் பெற முடியாமல் இருந்த அருந்ததியர் சமூகத்தினரின் நலன் கருதி, அது குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட ஜனார்த்தனன் குழு அளித்த தரவுகளின் அடிப்படையில், பட்டியல் இன மக்களுக்கான 18% இடஒதுக்கீட்டில் 3% உள்ஒதுக்கீட்டை அருந்ததியர்களுக்கு வழங்கியது தி.மு.க. அரசு.
இதுபோலவே பிற்படுத்தப்பட்டோருக்கான 50% இடஒதுக்கீட்டின் பலன் பல சமுதாயத்தினருக்கும் கிடைக்க வேண்டும் என்பதால், இந்தியாவிலேயே முதன்முறையாக, பிற்படுத்தப்பட்டோரில் மிக பிற்படுத்தப்பட்டோர் என்ற பிரிவினை 1989ல் உருவாக்கி அவர்களுக்கு 20% ஒதுக்கீட்டை வழங்கியவரும் கலைஞர் கருணாநிதியின் தலைமையிலான தி.மு.க அரசுதான்.
2009ல் அருந்ததியர் உள்ஒதுக்கீட்டிற்கானத் தீர்மானத்தை சட்டமன்றத்தில் முன்மொழிந்தவர் அன்று துணை முதல்வராக இருந்த இன்றைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அப்போது, எதிர்க்கட்சித் தலைவராக இருந்த அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளர் செல்வி.ஜெயலலிதா, “இப்படிப்பட்ட உள்ஒதுக்கீட்டை வழங்க மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை. தேர்தலுக்காக ஆளுங்கட்சி நாடகம் நடத்துகிறது” என விமர்சனம் செய்தார். ஜெயலலிதாவைப் போலவே வேறு சில மாநிலங்களிலும் கருத்துடையவர்கள் உள்ளனர்.
அவர்கள் அந்தந்த மாநில அரசுகளின் உள்ஒதுக்கீட்டுக்கான வரையறையை எதிர்த்து கருத்து தெரிவித்து வந்த நிலையில்தான், அது தொடர்பான ஒரு வழக்கில் ஏழு நீதிபதிகள் அடங்கிய உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு, பட்டியல் இன சமுதாயத்தின் உட்பிரிவுகளை வரையறை செய்ய மாநில அரசுகளுக்கு அதிகாரம் உண்டு என்று ஆகஸ்ட் ஒன்றாம் தேதி தீர்ப்பினை வழங்கியிருக்கிறது. இதன் மூலம் கடந்த 15 ஆண்டுகளாகத் தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள அருந்தியர் சமூகத்தினருக்கான 3% உள்ஒதுக்கீடு தொடர்ந்து பயனளிக்கும் நிலைமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இடஒதுக்கீட்டில் பொருளாதார அளவுகோல், பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு போன்றவை குறித்து பேசுவதும், செயல்படுத்துவதும் இந்திய அளவில் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில், தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இடஒதுக்கீட்டில் பொருளாதார அளவுகோலை கருத்தில் கொள்ளாமல் சமுதாய நிலையைக் கருத்தில் கொண்டு, எந்தெந்த சமூகம் இடஒதுக்கீட்டினால் உரிய பலன்கள் கிடைக்காமல் இருக்கின்றனவோ அவற்றிற்கு அந்தப் பலன்கள் கிடைப்பதற்கான சட்டவழிகள் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இடஒதுக்கீட்டின் வாயிலாக சமூகநீதி சிகிச்சை வழங்கும் மாநிலமாகத் தமிழ்நாடு திகழ்கிறது.
பிரிட்டிஷ் இந்தியாவில் சென்னை மாகாணத்தில் நீதிக் கட்சியின் அரசு கொண்டு வந்த வகுப்புவாரி இடஒதுக்கீடு சுதந்திர இந்தியாவில் நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டபோது அதனை எதிர்த்துப் பெரும் போராட்டம் நடைபெற்றது. பெரியாரின் திராவிடர் கழகமும், அறிஞர் அண்ணா தொடங்கியிருந்த திராவிட முன்னேற்றக் கழகமும், சமூக நீதி சக்திகளும் நடத்திய போராட்டத்தின் விளைவாகத்தான் இந்திய அரசியல் சட்டத்தில் 1951ஆம் ஆண்டில் முதல் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.
அதன்படி, இடஒதுக்கீட்டினை வழங்க மாநில (மாகாண) அரசுகள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்குத் தடையில்லை என்ற நிலை உருவானது. 73 ஆண்டுகள் கழித்தும், உள்ஒதுக்கீட்டிற்காக உள்பிரிவுகளை வரையறை செய்யும் அதிகாரம் மாநிலங்களுக்கு உண்டு என்பது நிலைநாட்டப்பட்டிருக்கிறது.