அரைச் சம்பளம் வாங்கினாலும் அரசாங்க சம்பளம் வாங்க வேண்டும் என்று கிராமத்தில் இளைஞர்களுக்குப் பெரியவர்கள் அறிவுறுத்துவார்கள். அரசாங்க வேலை என்பது பணிப் பாதுகாப்பை உறுதி செய்வது, வேலைத்தன்மைக்கேற்ற அதிகார வரம்பைக் கொண்டது, மக்களுக்குப் பணியாற்றும் வாய்ப்பைத் தரக்கூடியது. அடுத்த தலைமுறையின் வளர்ச்சிக்கான உத்தரவாதத்தை அளிக்கக்கூடியது என்பதால், அரசு வேலை ஒன்றைப் பெற்றுவிடவேண்டும் என முயற்சிப்பவர்கள் நாட்டில் அதிகளவில் இருக்கிறார்கள். முயற்சித்தும் வேலை கிடைக்காமல் இருப்பவர்கள் அதைவிட அதிகமாக இருக்கிறார்கள்.
மத்திய அரசுப் பணிகளுக்கான உயர் அதிகாரிகளைத் தேர்வு செய்வதற்கு யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் என்ற அமைப்பு உள்ளது. ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ். உள்ளிட்ட அதிகாரிகள் இதன் தேர்வுகள் மூலமே தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். இந்தப் பணிகளில் அனைத்து சமுதாயத்தினருக்கும் பிரதிநிதித்துவம் வேண்டும் என்ற அடிப்படையில்தான் பட்டியல் இன-பழங்குடி மக்களுக்கு 22.5% இடஒதுக்கீடு அரசியல் சட்டத்தின் மூலமாக உறுதி செய்யப்பட்டது.
அதுபோலவே, இதர பிற்படுத்தப்பட்ட (ஓ.பி.சி.) சமுதாயத்தினருக்கு மண்டல் கமிஷன் பரிந்துரை அடிப்படையில் 27% இடஒதுக்கீட்டு சட்டத்தைக் கொண்டு வந்தார் பிரதமராக இருந்த வி.பி.சிங். அது அவரது ஆட்சியையே கலைத்தாலும், ஓ.பி.சி. இடஒதுக்கீடு என்பது மத்திய அரசின் வேலைவாய்ப்புகளிலும் கல்வி நிலையங்களிலும் நிலைப்பெற்றுள்ளது. அவற்றை சரியான முறையில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று சமூக நீதி இயக்கங்கள், அரசியல் கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.
சமூக நீதிக் கொள்கை என்பது இந்திய அளவில் இன்று தவிர்க்க முடியாததாக இருப்பதால், மத்திய பா.ஜ.க. அரசு அதற்கு ஆதரவளிப்பதுபோல காட்டிக்கொண்டாலும், அதன் அடிப்படைக் கொள்கையான சாதிப் படிநிலைகள் கொண்ட வருணாசிரம தர்மத்தைக் காப்பாற்றுவதையே முதன்மையாகக் கொண்டிருக்கிறது. அதன் ஒரு பகுதியாக, மத்திய அ ரசின் 45 இணைச் செயலாளர்கள், இயக்குநர்கள், துணைச் செயலாளர்களைத் தேர்வு எதுவுமின்றி, நேரடியாகவே நியமனம் (லேட்டரல் என்ட்ரி) செய்யும் அறிவிப்பை ஆகஸ்ட் 17 அன்று யு.பி.எஸ்.சி. வெளியிட்டது.
இது சமூக நீதிக்கு எதிரான நிலைப்பாடு என்பதாலும், ஓ.பி.சி-எஸ்.சி.-எஸ்.டி. பிரிவினருக்கான வாய்ப்புகள் பறிபோகும் என்பதாலும் எதிர்க்கட்சிகள் இதனைக் கண்டித்து உடனடியாக கருத்துகள் தெரிவித்தன. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “லேட்டரல் என்ட்ரி என்பது சமூக நீதியின் மீதான தாக்குதலாகும்” என்று கண்டனம் தெரிவித்திருந்தார்.
நாடாளுமன்ற மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி, மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் நிதீஷ்குமார், மத்திய அமைச்சர் சிராக் பஸ்வான் ஆகியோரது கட்சிகளும் எதிர்ப்பைப் பதிவு செய்தன.
எந்த முடிவு எடுத்தாலும் அதில் புள்ளி, கமா கூட மாற்ற மாட்டோம் என கடந்த காலங்களில் பிடிவாதம் பிடித்த பா.ஜ.க., தற்போது தனக்குப் பெரும்பான்மை இல்லாத காரணத்தால், எதிர்க்கட்சிகளுடன் கூட்டணிக் கட்சிகளும் சேர்ந்து எதிர்த்த நிலையில், மத்திய பணியாளர் துறை இணையமைச்சர் ஜிந்திர சிங்க, யு.பி.எஸ்.சி. தலைவர் பிரீத்தி சுடானுக்கு கடிதம் எழுதி, நேரடி நியமன அறிவிப்பை ரத்து செய்யக் கோரியுள்ளார்.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு, அரசு ஊழியர்கள் ஆர்.எஸ்.எஸ். நிகழ்வுகளில் பங்கேற்கலாம் என மத்திய பா.ஜ.க. அரசு அறிவித்திருந்தது. ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் சேருவதற்கு கடந்த 58 ஆண்டுகளாக இருந்த தடையை நீக்கி இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த நிலையில், மத்திய அரசின் உயர்அதிகாரிகளுக்கானப் பணிகளில் நேரடி நியமனம் என்று யு.பி.எஸ்.சி அறிவித்ததையும் இணைத்தே பார்க்க வேண்டும் என்று கூறியிருக்கிறார் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி தேவசகாயம் தெரிவித்துள்ள கருத்தை முற்றிலுமாகப் புறக்கணித்துவிட முடியாது.
மத்திய அரசின் துறைகளில் ஏற்கனவே ஆர்.எஸ்.எஸ் பின்னணி கொண்டவர்கள் மறைமுகமாகப் பங்கேற்றுள்ள நிலையில், நேரடியாக ஆர்.எஸ்.எஸ். பின்னணி கொண்டவர்களை நியமிப்பதற்கான முயற்சியின் தொடக்கமாக வெளியான இந்த அறிவிப்பு எதிர்க்கட்சிகளின் கண்டனத்தாலும், கூட்டணிக் கட்சிகளின் எதிர்ப்பினாலும் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது. அந்த வகையில் ஆர்.எஸ்.எஸ். நுழைவுக்கு இது ஒரு கடிவாளம். எனினும், சமூக நீதியைக் காப்பதற்கான எச்சரிக்கையும் விழிப்புணர்வும் எப்போதும் தேவை.