“எதிர்த்தா பேசுகிறாய்? இரு புல்டோசர் வரும்”- இது பாஜக ஆளும் மாநிலங்களில் ஆட்சியாளர்களும் அதிகாரிகளும் போராட்டக்காரர்களை நோக்கி விடும் எச்சரிக்கை. எவரேனும் தங்கள் உரிமைக்காக போராட்டத்தை முன்னெடுத்தால் அவர்களை கைது செய்வதுடன் அவர்களுக்கு ஆதரவாக இருப்பவர்களையும் கைது செய்து விசாரணை கைதியாக சிறையில் அடைக்கும் நேரத்தில் அவர்களின் வீடுகளை புல்டோசரைக் கொண்டு தரைமட்டமாக இடிப்பது என்பது பாஜகவின் இரட்டை என்ஜின் ஆட்சி எனப்படும் உத்தரப்பிரதேசத்தில் தொடங்கி வைக்கப்பட்டு பாஜக ஆட்சி நடைபெறும் மற்று மாநிலங்களிலும் தொடர்ந்து நடைபெற்று வந்தது. இந்த புல்டோசர் ராஜ்ஜியத்தை பாஜகவினர் நாடு முழுவதும் மிகவும் பெருமையாகும் பேசிக் கொண்டனர்.
போராட்டங்களில் ஈடுபடக்கூடிய சிறுபான்மையினர், மனித உரிமை ஆர்வலர்கள், இடதுசாரிகள் ஆகியோர் திட்டமிட்டு குறிவைக்கப்பட்டு அவர்களின் குடியிருப்புகள் புல்டோசர்களால் தகர்க்கப்பட்டன. ஆட்சியை எதிர்த்தால் இது தான் விளைவு என்று அச்சுறுத்துகிற வகையில் இந்த நடவடிக்கைகள் தொடர்ந்ததால் எளிய மக்கள் தங்கள் உரிமை குரலை வெளிப்படுத்த தயங்கக்கூடிய நிலை உருவானது.
சட்டத்தை ஆட்சியாளர்கள் கையில் எடுத்துக் கொண்டு நடத்தி இந்த புல்டோசர் ராஜ்ஜியத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கு விசாரித்த நீதிபதிகள் பி ஆர் கவாய் மற்றும் கே வி விஸ்வநாதன் பெஞ்ச் அமர்வு ஏற்கனவே இந்த புல்டோசர் ராஜ்யத்திற்கு மூக்கணாங்கயிறு போட்ட நிலையில், தற்போது அக்டோபர் 1 வரை எந்த ஒரு மாநிலமும் குண்டோசர் நீதி வழங்குவதை தடை செய்து உத்தரவிட்டுள்ளது.
அது மட்டுமின்றி ஒருவர் மீது வழக்கு அல்லது குற்றச்சாட்டு உள்ள நிலையில் அவர்களுக்கான தண்டனையை நீதிமன்றம் தான் வழங்க முடியுமே தவிர, ஆட்சியாளர்கள் இப்படிப்பட்ட புல்டோசர் ராஜ்ய தண்டனையை வழங்க முடியாது இன்று அழுத்தமாக உத்தரவிட்ட நீதிபதிகள், புல்டோசரால் நீதியை நிலைநாட்டி விட்டோம் என்று மகிழ்ச்சி கூத்து ஆடுவதை அதிகார வர்க்கம் நிறுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டிருக்கிறார்கள். நாடு முழுவதும் இந்த உத்தரவை நடைமுறைப் படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.
அப்படி என்றால் ஆக்கிரமிப்பு இடங்களை அப்படியே விட்டு விட வேண்டியது தானா என்ற கேள்வி வரும். நீதிமன்ற உத்தரவு என்பது, ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டவர்களுக்கு அவர்களின் வீடுகளை இடிப்பது என்ற கொடுந்தண்டனைக்கு எதிரானது தானே தவிர ஆக்கிரமிப்பு இடங்களை அகற்றுவதற்கு எதிரானது அல்ல. இதையும் விளக்கியுள்ள நீதிபதிகள் ஆக்கிரமிப்பு நிலங்களில் உள்ள கோயில்கள், மசூதிகள், குருத்வாராக்கள், தேவாலயங்கள் என வழிபாட்டு இடங்களாக இருந்தாலும் அவற்றை அகற்றுவதற்கு தடை இல்லை. அது போல ஆக்கிரமிப்பு இடங்களில் உள்ள வணிக நிறுவனங்களை அகற்றுவதற்கும் தடை இல்லை.
சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டு போராட்டக்காரர்களின் குடியிருப்புகளை தகர்க்கும் புல்டோசர் ராஜ்யத்திற்கு மட்டுமே இந்தத் தடை என்று சொல்லி, பாஜக ஆட்சியினரின் அத்துமீறல்களுக்கு உச்சநீதிமன்றம் கடிவாளம் போட்டிருக்கிறது.
எளிய மக்களின் உரிமைக்கான கடைசி நம்பிக்கையாக திகழ்கின்றன இந்தியாவின் நீதிமன்றங்கள்.