இலங்கையின் புதிய ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் அனுரா குமாரா திசநாயகா. சின்னஞ்சிறு தீவுதான் என்றாலும் தெற்காசியாவில் இலங்கையின் இருப்பு என்பது இந்தியா, சீனா, பாகிஸ்தான், ரஷ்யா உள்ளிட்ட பல நாடுகளுக்கும் அவசியமானதாக இருக்கிறது. இந்தியப் பெருங்கடலில் பெரிய நாடுகள் தங்களின் நிலையை வலிமைப்படுத்த இலங்கைத் தீவின் மீது கவனம் குவிப்பது வழக்கம்.
இலங்கையில் 2009ல் விடுதலைப் புலிகள் மீதான தாக்குதல் என்ற பெயரில் நடைபெற்ற ஈழத் தமிழர் இனஅழிப்பை மனித உரிமைப் பார்வையில்கூட பெரிய நாடுகள் அணுகவில்லை. மாறாக, சின்னஞ்சிறு தீவான இலங்கைக்கு மேலே குறிப்பிட்ட நாடுகள் அனைத்தும் ஏதோ ஒரு வகையில் ராணுவ உதவியைத் தொடர்ந்து வழங்கின. வழங்கியும் வருகின்றன. சர்வதேச அமைப்புகளான ஐ.நா உள்ளிட்டவற்றால் இலங்கையில் நடந்த இன அழிப்பு தொடர்பாக வலுவான விசாரணைக்கு உத்தரவிடவோ, போர்க்குற்றவாளிகளான ஆட்சியாளர்களைத் தண்டிக்கவோ முடியவில்லை. அவற்றை செய்ய வேண்டிய கடமையைக் கொண்ட ஈழத்திலும் தமிழ்நாட்டிலும் உள்ள தமிழர் அமைப்புகள் தங்களுக்குள் போட்டி போட்டுக் கொண்டும், இவர் தியாகி- அவர் துரோகி என்று முத்திரை குத்தும் உள்குத்து அரசியலிலேயே காலத்தைக் கழித்துவிட்டனர்.
தற்போது இலங்கை மிகப் பெரிய பொருளாதார நெருக்கடிக்குள்ளாகியுள்ள நிலையில், அங்குள்ள தமிழர்கள் மட்டுமின்றி, சிங்களர்களும் நாட்டை விட்டு வெளியேறும் மனநிலையுடன் ஐரோப்பிய நாடுகளுக்கும், ஆஸ்திரேலியா, கனடா போன்ற நாடுகளுக்கும் பயணித்துக் கொண்டிருக்கிறார்கள். இலங்கை அரசு தன் குடிமக்களுக்கு பாஸ்போர்ட் வழங்குவதை நிறுத்தி வைக்கக்கூடிய அளவுக்கு, இலங்கையிலிருந்து சிங்கள மக்களின் வெளிநாட்டுக் குடியேற்றம் நடந்து கொண்டிருக்கிறது.
தமிழர்களின் ஆயுதப் போராட்டத்தை முறியடித்ததால் மிகப் பெரிய நாயகனாகப் பார்க்கப்பட்ட ராஜபக்சேவின் செல்வாக்கு தகர்ந்து, அவரது குடும்பத்தைச் சேர்ந்த அரசியல்வாதிகள் இலங்கையை விட்டே தப்பித்து ஓடக்கூடிய நிலைக்குத் தள்ளியது காலம். குழப்ப அரசியலைத் தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட ரணில் விக்ரமசிங்கேயால் பதவியைப் பெற முடிந்ததே தவிர, இலங்கையின் சூழலைத் துளி அளவும் மாற்ற முடியவில்லை. இந்த நிலையில்தான், இலங்கையின் அதிபர் தேர்தல் செப்டம்பர் 21ஆம் நாள் நடைபெற்று, அந்நாட்டு வழக்கப்படி அன்று மாலை முதலே எண்ணிக்கை தொடங்கின.
இலங்கை மக்கள் அளித்த வாக்குகளின் அடிப்படையில் மகிந்த ராஜபக்சேவின் மகன் நமல் ராஜபக்சே வெறும் இரண்டரை சதவீதம் வாக்குகள் மட்டுமே பெற்று அடையாளம் இழந்துவிட்டார். தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கே மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டார். இலங்கையின் முன்னாள் பிரதமர் பிரேமதாசாவின் மகன் சஜித் பிரேமதாசா இரண்டாம் இடத்தைப் பிடிக்க, ஜனதா விமுக்தி பெருமுனா (ஜே.வி.பி) வேட்பாளர் அனுரா குமார திசநாயகா இலங்கை அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றிருக்கிறார்.
ஜே.வி.பி என்பது இடதுசாரிக் கொள்கையைக் கொண்ட இயக்கமாகும். அது ஆயுதப் போராட்டங்களை நடத்தியபோது, ஒடுக்கப்பட்டு, அந்த அமைப்பைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானவர்கள் அரசப் படைகளால் கொலை செய்யப்பட்டுள்ளனர். தமிழ் அமைப்புகளின் ஆயுதப் போராட்டத்தை ஜே.வி.பி ஆதரிக்காவிட்டாலும், இலங்கையில் அமைதி நிலவவேண்டும் என்பதிலும் பொருளாதாரக் கட்டமைப்பு மேம்பட வேண்டும் என்பதிலும் கவனம் செலுத்தும் என்ற பொதுவான நம்பிக்கை உள்ளது.
இலங்கைத் தேர்தலைப் பொறுத்தவரை அதிபர் தேர்தலில் முழு வெற்றி பெற 50%க்கு மேல் வாக்கு சதவீதம் இருக்க வேண்டும். ஜே.வி.பி வேட்பாளர் அனுரா திசநாயகா அந்தளவு வாக்குகளைப் பெறாததால், இலங்கை அதிபர் தேர்தலில் முதன்முறையாக விருப்ப வாக்குப்பதிவு கணக்கில் எடுக்கப்படுகிறது. அதாவது, மக்கள் ஒருவருக்கு முதல் வாக்கை அளித்துவிட்டு, தங்களிள் அடுத்தடுத்த விருப்பமாக இரண்டாவது, மூன்றாவது வாக்குகளை மற்ற வேட்பாளர்களுக்கு அளிக்க முடியும். அதனடிப்படையில் முதலிரண்டு இடத்தில் உள்ள திசநாயகா, சஜித் பிரேமதாசா இருவருக்குமான விருப்ப வாக்குகள் அடிப்படையில் அனுரா புதிய ஜனாதிபதியாக பதவி ஏற்கிறார்.
இலங்கையில் இடதுசாரியின் வெற்றி அந்நாட்டில் பல முதலீடுகளை செய்து அதிகாரம் செலுத்தும் சீனாவுக்கு சாதகமாக அமையும் என்று பார்க்கப்படுகிறது.
இலங்கை முடிவுகளை இந்தியா உற்று நோக்குகிறது. அது எப்படி காய் நகர்த்தப்போகிறது என்பதைப் பொறுத்தே தமிழர்களின் நலன் மீதான நம்பிக்கை உருவாகும்.