ஆட்சியில் பங்கு என்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியின் உரிமைக் குரல் தி.மு.க. தலைமையிலான கூட்டணிக்குள் சலசலப்புகளையும் சச்சரவுகளையும் உண்டாக்கிய நிலையில், வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவனுக்கு துணை முதலமைச்சர் பதவி என்ற கோரிக்கையை அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர்களில் ஒருவரான ஆதவ் அர்ஜூனா ஊடகத்தில் அளித்த பேட்டி கூட்டணியிலும் சொந்தக் கட்சியிலும் விவாதங்களை உருவாக்கியிருக்கிறது.
எந்த ஒரு அரசியல் கட்சியும் அதிகாரத்தைப் பெறுவதற்காகத்தான் தேர்தல் களத்தை சந்திக்கின்றன. அதன் வலிமையையும் அதற்கேற்ற மக்கள் ஆதரவையும் பொறுத்து சட்டமன்றம்-நாடாளுமன்றத்திற்குள் நுழைவதும், அமைச்சர் பதவியைப் பெறுவதும் நிறைவேறும். விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளை மீட்டெடுக்க அதிகாரத்தை நோக்கிப் பயணிக்கும் இயக்கமாகும்.
தேர்தல் அரசியல் களத்தின் நடைமுறை எதார்த்தங்களை உணர்ந்து, கூட்டணி அரசியலில் பங்கேற்று, தனிச் சின்னத்தில் போட்டியிட்டு, வெற்றிகளைப் பெற்று சட்டமன்றத்திலும் நாடாளுமன்றத்திலும் இடம்பெற்று, தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது. எனவே, அடுத்த கட்டமாக அமைச்சர் பதவி, துணை முதலமைச்சர் பதவி, தலித் முதலமைச்சர் போன்ற குரல்கள் வி.சி.க. தரப்பிலிருந்து வருவது இயல்புதான். வி.சி.க.வின் இயல்பு அது பங்கேற்றிருக்கும் தி.மு.க. தலைமையிலான கூட்டணியின் இயல்புடன் ஒன்றிப்போகிறதா விலகிப் போகிறதா என்பதுதான் தற்போதைய விவாதங்களுக்கு காரணமாக இருக்கிறது.
தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், ம.தி.முக., கம்யூனிஸ்ட்டுகள், முஸ்லிம் அமைப்புகள் உள்ளிட்ட பல கட்சிகள் உள்ளன. வி.சி.க.வும் அதில் முக்கியமான கட்சியாக உள்ளது. வடமாவட்டங்களில் விடுதலை சிறுத்தைகளுக்கு உள்ள வாக்கு வங்கியின் அடிப்படையில் தொல்.திருமாவளவன் அவர்களுக்கு துணை முதலமைச்சர் பதவி என்ற உரிமையைக் கோருகிறார் ஆதவ் அர்ஜூனா. அதற்கு அவர் தி.மு.க. இளைஞரணி செயலாளரும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சருமான உதயநிதியை சீண்டுகிறார். சினிமா பிரபலத்தன்மையால் கட்சியிலும் ஆட்சியிலும் உதயநிதிக்கு உடனடியாகப் பதவி கொடுக்கப்பட்டுள்ளது என்பது விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இலட்சக்கணக்கான தொண்டர்களை மீறி தனது பணபலத்தால் உடனடியாகத் துணைப் பொதுச்செயலாளர் பதவி பெற்ற ஆதவ் அர்ஜூனாவின் விமர்சனம்.
அவருடைய விமர்சனக் கருத்தை ஏற்க முடியாது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர்கள் ரவிக்குமார் எம்.பி., சிந்தனைச் செல்வன் எம்.எல்.ஏ., துணைப் பொதுச்செயலாளர் வன்னிஅரசு ஆகியோர் வெளிப்படையாகத் தெரிவித்திருப்பதுடன், தி.மு.க. கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தொடர்கிறது என்றும் தெரிவித்துள்ளனர். இது குறித்து வி.சி.க. தலைவர் தொல்.திருமாவளவனின் நிலைப்பாடு என்ன என்பது அவர் தனது மௌனத்தைக் கலைக்கும்போதுதான் தெரியும்.
கூட்டணியில் இருக்கும் கட்சிகளுக்கு அதனதன் கொள்கைகளை வலியுறுத்தும் உரிமை உண்டு. சாம்சங் நிறுவனத்தில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கான சங்கம் அமைக்கும் உரிமைக்காக தி.மு.க கூட்டணியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராடிக் கொண்டிருக்கிறது. அதுபோல, மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநாடு நடத்தவிருக்கிறது. என்றாவது ஒரு நாள் காமராஜர் ஆட்சியை அமைப்போம் என்று காங்கிரஸ் கட்சி தீர்மானம் நிறைவேற்றுகிறது. இவை அந்தந்தக் கட்சியின் நோக்கங்கள். அவற்றை தனிப்பட்டவர்கள் மீதான குற்றச்சாட்டுகளாக வைத்து விமர்சனம் செய்யும்போது கூட்டணியின் வலிமை நிச்சயம் பாதிப்படையும்.
தனது தோழமைக் கட்சிகளை கொள்கைக் கூட்டணி என்று குறிப்பிடும் தி.மு.க தலைமை, அந்தக் கட்சிகளுக்கு அதிகாரத்தில் எந்தளவில் பங்கு என்பதை தெளிவுபடுத்த வேண்டிய நெருக்கடிக்குள்ளாகியிருக்கிறது. தேர்தல் களத்தை சந்திக்கும்போதே, எத்தனை தொகுதிகள், எந்தெந்த தொகுதிகள், அங்கே வெற்றிக்கான வாய்ப்புகள், அதற்கேற்ற வியூகங்கள், எப்படிப்பட்ட முடிவுகள் அமைந்தால் எப்படிப்பட்ட நடைமுறைகள் இருக்கும் என்பதை கூட்டணிக்குத் தலைமை தாங்கும் கட்சியும், கூட்டணியில் பங்கேற்றுள்ள கட்சிகளும் பேசி முடிவு செய்தே களத்தை எதிர்கொள்கின்றன.
2019ஆம் ஆண்டு முதல் , இரண்டு நாடாளுமன்றத் தேர்தல், ஒரு சட்டமன்றத் தேர்தல், உள்ளாட்சித் தேர்தல்கள், இடைத்தேர்தல்கள் என தொடர்ச்சியான வெற்றி பெற்றுவருகிற தி.மு.க கூட்டணிக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திடீர் துணைப் பொதுச்செயலாளரால் உருவாக்கப்படும் சிக்கலின் பின்னணியில் மறைமுகத் திட்டங்கள் இருப்பதாக சொந்தக்கட்சியிலும் வெளியிலும் சந்தேகங்கள் வெளிப்படுகின்றன.
கூட்டணிப் பானை உடைந்துவிட்டால் தேர்தல் களத்தில் ஒட்ட வைக்க முடியாது என்பதை தொல்.திருமாவளவன் நன்கறிவார். பானை அவர் கையில்தான் உள்ளது.