விலங்குகள் தனக்கான எதிரிகளைக் கண்டுதான் பயப்படும். சமுதாய விலங்கு என்று அழைக்கப்படும் மனிதர்கள் தன் எதிரிகளைக் கண்டு மட்டுமல்ல, நட்பு-வாழ்க்கை-இயற்கை என எல்லாவற்றையும் கண்டு அஞ்சுகிற தன்மை கொண்டவர்களாக இருக்கிறார்கள். காரணம், பாதுகாப்பு குறித்த அச்சம்தான். பகுத்தறிவால் வாழ்க்கை முறையில் மற்ற விலங்குகளைவிட உயர்ந்து நிற்கும் மனிதர்கள், அந்த வாழ்க்கையைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்கிற பதற்றத்தில் எல்லாவற்றுக்கும் பயப்படும் சூழல் உருவாகியுள்ளது. அதில் அண்மைக்கால பயம், பருவமழை. காலநிலை மாற்றத்தால் உலகம் முழுவதும் மழை-வெள்ளத்தால் பாதிக்கப்படுகிறது. ஆனால், மனிதர்கள் தாங்கள் வாழும் பகுதியையே உலகமாகக் கருதுவதால் பருவமழை குறித்த முன்னெச்சரிக்கை அறிவிப்புகள் வந்ததும் பதற்றமடைந்து விடுகிறார்கள்.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை தென்மேற்கு பருவ மழையும், வடகிழக்கு பருவ மழையும் தண்ணீர்த் தேவையை நிறைவேற்றக்கூடியவையாக இருக்கின்றன. இதில், தெற்மேற்கு பருவமழை என்பது மேற்குதொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் நல்ல மழைப்பொழிவைத் தரும். வடகிழக்கு பருவமழை பெரும்பாலும் புயல் சின்னங்களுடன் உருவாகி, கடற்கரையோர மாவட்டங்கள் அதனை ஒட்டியுள்ள மாவட்டங்களில் கடுமையான மழைப்பொழிவையும் அதன் காரணமாக வெள்ளத்தையும் உண்டாக்கும். தலைநகரமான சென்னை வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்ளக்கூடிய புவியியல் அமைப்பைக் கொண்ட கடற்கரையையொட்டிய நகரமாகும்.
பொருளாதாரக் காரணங்களால் புயல்-வெள்ளம் போன்றவற்றைப் பார்க்காத-கடலையும் கூட பார்த்திராத தமிழ்நாட்டின் உள்புற மாவட்டத்து மக்கள் சென்னையில் வேலை பார்க்கிறார்கள். விரிவாக்கப்பகுதிகளில் வீடுகட்டி வாழ்கிறார்கள். கார் போன்ற தங்களின் பணித் தேவைகளுக்கானவற்றை சம்பளத்திலோ கடனிலோ வாங்கி வைத்திருக்கிறார்கள். பாடுபட்டு சேர்க்கின்ற எதுவும் வீணாகிவிடக்கூடாது என்கிற பதற்றம் அவர்களிடம் வெளிப்படுவது இயல்பு. இயற்கையின் தன்மையைக் கொஞ்சம் உணர்ந்துகொண்டால் பதற்றத்திற்கும் பயத்திற்கும் பதில் விழிப்புணர்வும் முன்னெச்சரிக்கையும் உருவாகும்.
இடி-மழை-மின்னல் இவற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ளத்தான் ஆதிகால மனிதர்கள் குகைகளில் வாழ்ந்தார்கள். பின்னர், குடிசை போன்ற குடில்களை அமைத்தார்கள். கல் வீடுகளைக் கட்டினார்கள். இப்போது அடுக்குமாடிக் குடியிருப்புகள், வில்லாக்கள் என்று வந்துவிட்டார்கள். இப்போதும் இடி-மின்னல்-மழையும் அதன் காரணமாக வெள்ளமும் பருவம் தோறும் வந்து செல்கிறது. புவி வெப்பமயமாதல் உள்ளிட்ட சூழலியல் மாற்றங்களால் பருவமழை தப்பிப் பெய்கிறது. மேக வெடிப்பு எனப்படும் வகையில் ஒரே நாளில் மொத்தமாகக் கொட்டித் தீர்க்கிறது. அன்றாட வாழ்க்கை மொத்தமாக முடங்கும்போது, பதற்றம் அதிகமாகிறது.
ஆதிமனிதர்கள் குகைகளில் தங்களைப் பாதுகாத்துக் கொண்டார்கள் என்றால், தற்கால மனிதர்கள், தங்கள் கார்களை மேம்பாலங்களின் ஓரங்களில் நிறுத்திப் பாதுகாக்க முயற்சிக்கிறார்கள். இது மனித இயல்பு. சமூக வலைத்தளங்களில் சக மனிதர்கள் இதைக் கிண்டலும் கேலியுமாகப் பார்க்கலாம். தனக்குப் பாதிப்பில்லாதவரை எல்லாவற்றையும் ஜஸ்ட் லைக் தட் என்று பார்ப்பதும் மனிதர்களின் மற்றொரு இயல்பே. அதே நேரத்தில், வெள்ளத்தில் சென்னையோ மற்ற நகரங்களோ மிதக்கும்போது நிவாரணப் பொருட்களை அதே சமூக வலைத்தளங்களில் கோரிக்கைகள் வைத்து வெள்ளம் போல அனுப்பி வைப்பதும் மனிதர்களின் இயல்புதான்.
புயல்-பெருமழை-வெள்ளம் போன்றவை இயற்கையானவை. அவற்றைத் தடுக்க முடியாது. அதிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளே மனிதர்களுக்குத் தேவை. இதில் அரசாங்கம் முழுமையான கவனத்தை செலுத்தும்போது மக்களின் பதற்றம் தணியும். முறையான அறிவிப்புகள், சரியான தகவல் தொடர்பு முறைகள், மழைநீர் வடிகால் பணிகள், தண்ணீர் சூழ்ந்த பகுதிகளில் நிவாரண உதவிகள், உடனடி மருத்துவ வசதிகள், மக்கள் பிரதிநிதிகளின் நேரடிப் பார்வையிடுதல், அடுத்த பருவமழையின்போது பாதிப்பு ஏற்படாத வகையிலான உள்கட்டமைப்புகள் உள்ளிட்டவை அரசின் கடமையாகும்.
வெயில் போல மழையும் இயற்கையின் தன்மை என்கிற உணர்வு மனிதர்களிடம் அத்தனை எளிதாக ஏற்படாததாற்கு காரணம், கடும் வெயிலை சகித்துக்கொண்டும்-சபித்துக்கொண்டும் தங்கள் வேலையை அவர்களால் தொடர முடிவதுபோல, கனமழையை எதிர்கொண்டு அன்றாட வேலையை செய்ய முடியாது. மொத்தமாக முடக்கிப் போட்டுவிடுவதாலும், மின்சாரத் தடை-தண்ணீர் தட்டுப்பாடு-உணவுப்பொருள் பற்றாக்குறை-அவசர மருத்துவ நெருக்கடி, தகவல் தொடர்பு துண்டிப்பு போன்றவை அந்தப் பதற்றத்தை அதிகரிக்கச் செய்கின்றன.
மழைக்காலத்தின் தன்மையினால் இத்தகைய இடர்பாடுகளை எதிர்கொள்ள நேரிடும் என்பதைப் புரிந்துகொண்டு முன்னேற்பாடுகளுடன் செயல்படவேண்டிய மனநிலை எல்லாருக்கும் வாய்ப்பதில்லை. இயற்கையை எதிர்த்து வாழ முடியாது. அதன் தன்மைகளைப் புரிந்துகொண்டால் எளிதாக வாழ முடியும்.