கிராமப்புற மக்களுக்கு கழிப்பிட வசதி எந்தளவு இருக்கிறது என்பது குறித்த புள்ளிவிவரங்கள் மீது இப்போதும் விவாதங்கள் தொடர்கின்றன. அதே நேரத்தில், கிராமப்புறம் வரை எத்தனை பேரிடம் செல்போன் இருக்கிறது என்பதில் பெரியளவில் சர்ச்சையோ விவாதமோ ஏற்படுவதில்லை. காரணம், இந்த விவாதங்களை கிராமப்புறத்தினரும் தங்கள் செல்போன் வழியே தெரிந்து கொள்கிறார்கள். தகவல் தொடர்புத் துறையில் இந்தியா கடந்த 30 ஆண்டுகளில் பெரும் முன்னேற்றத்தைக் கண்டுள்ளது.
செல்போன் எனும் அலைபேசி, 1990களின் நடுவில் அறிமுகமானபோது அது பணக்காரர்களுக்கான கருவியாகத்தான் பார்க்கப்பட்டது. சில ஆண்டுகளிலேயே அது எளிய மக்களின் கைகளுக்கு வந்துவிட்டது. இதில் வாஜ்பாய் தலைமையிலான தேசிய முற்போக்கு கூட்டணி, மன்மோகன்சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுகளுக்கு குறிப்பிடத்தக்க பங்கு உண்டு. மத்திய தகவல் தொடர்புத் துறை அமைச்சராக தயாநிதிமாறன், ஆ.ராசா ஆகியோர் இருந்தபோது, கிராமப்புறங்கள் வரை செல்போன் வசதி கிடைக்கத் தொடங்கியது. அதே செல்போனில்தான் ஸ்பெக்டரம் எனும் அலைக்கற்றை ஊழல் என்ற குறுஞ்செய்தியும் கிராமப்புறம் வரை பரப்பப்பட்டது.
இரண்டாம் தலைமுறை அலைபேசிகளுக்கான 2ஜி ஸ்பெக்ட்ரம் (அலைக்கற்றை) ஒதுக்கீட்டில் அன்றைய மத்திய அமைச்சர் ஆ.ராசா கடைப்பிடித்த முறையால் இந்திய அரசாங்கத்திற்கு பெரும் இழப்பு ஏற்பட்டுவிட்டது என்று தலைமை தணிக்கை அதிகாரியின் அறிக்கை பெரும் பூகம்பத்தை உண்டாக்கி, ஆ.ராசாவை ஆண்டுக்கணக்கில் சிறையில் வைத்தது. தி.மு.க.வுக்கு தேர்தல் களத்தில் கெட்டபெயரையும் மோசமான தோல்வியையும் உண்டாக்கியது. ஆட்சியிலிருந்த காங்கிரஸ் தனது கூட்டணி அமைச்சரை கைகழுவியது. பா.ஜ.க, அ.தி.மு.க, கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்பட அரசியல் களத்தில் எதிரும் புதிருமானவர்களும் தி.மு.க.வையும் ஆ.ராசாவையும் குற்றம்சாட்டி பழிபோடுவதில் மும்முரமாக இருந்தார்கள்.
2ஜி காலத்திலிருந்து தற்போது 5ஜி காலம் வரை வந்துவிட்டோம். ஆ.ராசா அப்போது ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றைகளை ஏலம் விடாமல், முதலில் வருபவருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் வழங்கினார். ஏலம் விட்டிருந்தால் அதிக தொகை அரசாங்கத்திற்கு கிடைத்திருக்கும் என்றும், அதைச் செய்யாததால் 1 லட்சத்து 76ஆயிரம் கோடி ரூபாய் நட்டம் ஏற்பட்டுவிட்டது என்று தலைமை தணிக்கை அதிகாரி குறிப்பிட்டதை, மொத்த தொகையும் கொள்ளையடிக்கப்பட்டதாக அரசில் களத்தில் சித்தரிக்கப்பட்டு, பழிபோடப்பட்டது.
தற்போது என்ன நிலவரம்? உலகளாவிய பெருநிறுவன அதிபரும், அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப்புக்கு கோடிக்கணக்கான பணத்தை நிதியாக வழங்கியிருப்பவருமான எலன் மாஸ்க்கின் ஸ்டார் லிங்க் நிறுவனம் இந்திய செல்போன் சேவைக்குள் நுழைகிறது. இது இந்திய செல்போன் பெருநிறுவனங்களான ரிலையன்ஸ் ஜியோ, பாரதி ஏர்டெல் நிறுவனங்களுக்கு கடும் போட்டியை உருவாக்கும் என்பதால், அந்த நிறுவனங்கள் ஸ்பெக்ட்ரமை ஏலம் முறையில் ஒதுக்க வேண்டும் என வலியுறுத்துகின்றன. ரிலையைன்ஸ் முகேஷ் அம்பானி இதை வெளிப்படையாகவே தெரிவித்துள்ளார். எனினும் மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சரான குவாலியர் சமஸ்தானத்தின் வழிவந்த இளவரசர் ஜோதி ஆதித்யா சிந்தியா, ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு ஏலம் முறையில் நடக்காது என்றும் நிர்வாக நடைமுறை அடிப்படையில்தான் நடைபெறும் என அறிவித்துள்ளார்.
ஏலம் விட்டால் நாட்டின் கஜானா நிரம்பியிருக்கும் என்று அப்போது சொன்ன பா.ஜ.க. இப்போது, அமெரிக்க நிறுவனத்தின் இலாபத்திற்காக இந்திய அரசின் கஜானாவை காலி செய்கிறதா என்ற கேள்வி இயல்பாக எழத்தானே செய்யும்? 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தின்போது ஆ.ராசா மிகத் தெளிவாக, “ஏலம் விடும் முறையால் பெரிய நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்துகின்றன. தங்களுக்குள் சிண்டிகேட் அமைத்துக்கொண்டு செயல்படுவதால் மக்களுக்குப் பயன் கிடைப்பதில்லை. நிறைய நிறுவனங்களுக்கு வாய்ப்பு தரும்போது எளிய மக்கள் வரை செல்போன் சேவை சென்றடையும்” என்று விளக்கினார். அதுதான் நடந்தது. அதற்காகத்தான் அவர் மீது பழி போட்டார்கள். வழக்கு போட்டார்கள். சிறைக்கு அனுப்பினார்கள். தானே சட்டப் போராட்டம் நடத்தி, உண்மையை நிலைநாட்டி விடுதலையானார் ஆ.ராசா. சுதந்திர இந்திய வரலாற்றில் அரசியல், ஆட்சி நிர்வாகம், சட்டம், நீதி என எல்லா தளங்களிலும் உள்நோக்கமும் காழ்ப்புணர்வும் கருவறுக்கும் செயலும் வெளிப்பட்ட காலம் அது.
அன்று கடைப்பிடிக்கப்பட்ட விதிமுறைதான் இப்போதும் கடைப்பிடிக்கப்படுகிறது. எனினும் ராஜாவுக்கு ஒரு நீதி, இளவரசருக்கு இன்னொரு நீதி.