தூர்தர்ஷன் (டிடி தமிழ்) தொலைக்காட்சியின் பொன்விழா ஆண்டில் நடத்தப்பட்ட இந்தி மாதக் கொண்டாட்டத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கு கொண்ட விழாவில் பாடப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலில், ‘தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்’ என்ற வரிகள் தவிர்க்கப்பட்டதன் காரணமாகத் தமிழ்நாட்டில் அரசியல் களத்திலும், மொழியுணர்வாளர்கள் களத்திலும் கண்டனங்களும் விமர்சனங்களும் எழுந்தன. முதலமைச்சர் கண்டனம் தெரிவிக்க, ஆளுநர் தரப்பில் அதற்கு விளக்கமளிக்கப்பட, அந்த விளக்கத்தின் உள்நோக்கங்களை விமர்சித்து முதல்வர் தன் கருத்துகளைத் தெரிவிக்க இருதரப்பிலுமான எண்ணங்களின் அடிப்படையில் விவாத மேடைகள் பலவற்றில் அனல் பறந்தன.
திராவிட நல் திருநாடு என்பதற்குப் பதில், தமிழக நல் திருநாடு என்று தமிழ்த் தேசியம் பேசுபவர்கள் பாடுகிறார்கள். தற்போதுள்ள தமிழ்த்தாய் வாழ்த்து நீக்கப்படும்-மாற்றப்படும் என்றும் சொல்கிறார்கள். 1970ஆம் ஆண்டு முதல் ஏறத்தாழ 54 ஆண்டுகளாக, ‘நீராருங் கடலுடத்த..’ எனத் தொடங்கும் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் தமிழ்நாடு அரசின் பாடலாக இசைக்கப்படுகிறது. தி.மு.க. ஆட்சியில் கலைஞர் மு.கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது இது தமிழ்த்தாய் வாழ்த்தாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. எனினும், இதை எழுதிய கவிஞர் தி.மு.க.காரரோ, வேறு அரசியல் கட்சியைச் சேர்ந்தவரோ அல்ல. அரசியல் கட்சிகள் எல்லாம் தொடங்கப்படுவதுற்கு முன்பே 19ஆம் நூற்றாண்டின் இறுதியில், மனோன்மணீயம் சுந்தரனார் அவர்களால் எழுதப்பட்டது. தமிழறிஞரும் ஆய்வாளருமான சுந்தரம் பிள்ளை தன்னுடைய மனோன்மணீயம் என்கிற படைப்பின் தொடக்கத்தில் தமிழ்த் தெய்வ வாழ்த்தாக இதனை எழுதியிருந்தார்.
தஞ்சையில் உள்ள கரந்தை தமிழ்ச் சங்கத்தின் சார்பில் முதன்முதலாக இந்தப் பாடல் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலாகப் பாடப்பட்டது. அப்போதிருந்தே தமிழறிஞர்கள் பங்கேற்கும் பல மேடைகளிலும் இது பாடப்பட்டு வந்தது. இந்தியாவுக்கு தேசிய கீதம் இருப்பதுபோல தமிழ்நாட்டுக்கு ஒரு பாடல் வேண்டும் என்ற கருத்தின் அடிப்படையில் அண்ணா ஆட்சியில் இதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு, கலைஞர் கருணாநிதி ஆட்சியில் அது நிறைவேறியது. இந்தப் பாடலில் கன்னடம், தெலுங்கு, மலையாளம், துளு ஆகிய மொழிகள் தமிழின் ரத்தத்திலிருந்து உதித்த மொழிகள் என்றும், ஆரியம் (சமஸ்கிருதம்) போல அழிந்து போகாமல் சீரிளமைத் திறத்துடன் தமிழ் சிறந்து விளங்குகிறது என்றும் குறிப்பிடப்பட்டிருக்கும். தமிழைப் போற்றுகின்ற பாடலில் மற்ற மொழிகளின் தன்மை குறித்தோ, ஒரு மொழி அழிந்துபோனது குறித்தோ இடம்பெறுவது நல்ல மரபாக இருக்காது என்பதாலும், தேசிய கீதம் உள்ளிட்ட எந்த ஒரு பாடலுக்கும் உள்ள கால அளவினைக் கருதியும் அந்த வரிகள் தவிர்க்கப்பட்டு, மற்ற வரிகளுடன் தமிழ்த்தாய் வாழ்த்து ஏற்றுக்கொள்ளப்பட்டது.
இந்தப் பாடலில், திகழ் பரதக் கண்டமதில் என்ற வரி, பரத-பாரத நாடு எனப்படும் இந்தியாவைக் குறிக்கிறது. தெக்கணமும் என்பது பாரத நாடான இந்தியாவின் தென்திசையைக் குறிக்கிறது. அதில் சிறந்து விளங்கும் திராவிட நல் திருநாடு என்பது தென்னிந்தியா மொத்தத்தையும் குறிப்பிடுகிறது. அதில், எத்திசையும் புகழ் மணக்க சிறந்து விளங்குபவளாகத் தமிழணங்கு இருக்கிறாள் என்பதுதான் பாடலின் கருத்தாகும். நாடு, நிலம், இனம், மொழி என அனைத்தையும் வாழ்த்துகிற இலக்கிய செறிவும், அழகியல் உணர்வும் கொண்டது நமது தமிழ்த்தாய் வாழ்த்து.
இதில் திராவிடம் என்பது எது, அது எங்கே இருக்கிறது என்பவர்களுக்கு, இந்திய அரசியல் சட்டத்தை இயற்றிய அண்ணல் அம்பேத்கர் பதிலளித்திருக்கிறார். தென்னிந்தியாவில் தமிழ் மொழி பேசும் மக்கள்தான் திராவிடர்கள் என்பது அம்பேத்கரின் கருத்து. தமிழில் இருந்து உருவான மொழிகள் திராவிட மொழிக்குடும்பமாகக் கருதப்படுகிறது. தேசிய கீதத்தை எழுதிய ரவீந்திரநாத் தாகூர், ‘திராவிட உட்கல வங்கா’ என்ற வரியில், தென்னிந்திய நிலப்பகுதியைத்தான் திராவிட என்று குறிப்பிடுகிறார். மநுதர்ம சாஸ்திரத்தின் 44வது சுலோகத்தில் அன்றைய தேசங்களைக் குறிப்பிடும்போது இன்றைய தமிழ்நாடு உள்ளிட்ட தென்பகுதியை திராவிடம் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. பழமையான காரவேலர் கல்வெட்டிலும் த்ராவிட என்ற சொல் உள்ளது. ஆதிசங்கரர், திராவிட சிசு என்று திருஞானசம்பந்தரை சொல்கிறார். நாலாயிர திவ்ய பிரபந்தம் போன்ற வைணவத் திருமுறைகள் திராவிட வேதம் எனப்படுகின்றன. சைவ சித்தாந்த சபை திராவிட வேத பாடசாலை என்ற அமைப்பை 1903ல் தொடங்கியது.
திராவிடம் என்பது ஆரியத்திலிருந்து தமிழைக் காக்கும் கவசம்.