உச்சநீதிமன்றத்தில் கேரள மாநில அரசு ஒரு வழக்கு தொடுத்திருக்கிறது. மத்திய அரசு எடுத்துள்ள ஒரு நிலைப்பாட்டிற்கு எதிரான வழக்கு அது. கேரள மாநிலம் தனது தேவைக்காக வாங்க வேண்டிய கடன் தொகையின் அளவைக் கட்டுப்படுத்தும் வகையில் நிகர கடன் உச்சவரம்பை 2023ஆம் ஆண்டு மத்திய அரசு நிர்ணயித்தது. மாநிலத்தின் மொத்த உற்பத்தி அளவில் 3% அளவிற்குத்தான் கடன் வாங்க முடியும் என்பதுதான் மத்திய அரசு விதித்த உச்சவரம்பு. மாநில அரசு சார்ந்த நிறுவனங்களின் மூலமாகக் கடன் பெறுவதிலும் கெடுபிடிகள் நிர்ணயிக்கப்பட்டன.
மத்திய அரசின் இந்த உச்சவரம்பினால் கேரள மாநில அரசின் நிதி நிலைமை கடும் நெருக்கடிக்குள்ளாது. செலவுகளை எதிர்கொள்வதில் கேரள அரசு திணறியது. வளர்ச்சி மற்றும் நலன் சார்ந்த திட்டங்களுக்கான முதலீடுகளுக்கு நிதி ஆதாரம் இல்லாமல் தடுமாறியது. இதையடுத்துதான், உச்சநீதிமன்றம் சென்று வழக்கு தொடுத்தது கேரள மாநில அரசு. இந்திய அரசியல் சட்டத்தின் 293ஆவது பிரிவு, ஒரு மாநிலம் தனது நிதித் தேவைக்கேற்ப கடன் பெறுவதற்காக வழங்கியுள்ள அதிகாரத்தை மத்திய அரசு அபகரித்துக் கொள்கிறது என்ற அடிப்படையில்தான் உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு இந்த வழக்கைத் தொடுத்தது. இதையடுத்து, அரசியல் சட்டப்பிரிவு 293 குறித்த மறுபரிசீலனைப் பார்வை குறித்த தேவை உருவாகியிருக்கிறது.
அரசியல் சட்டம் பகுதி 12- அத்தியாயம் 2ன்படி சட்டப்பிரிவு 292, இந்திய அரசின் கடன் பெறும் உரிமை குறித்து விளக்குகிறது. நாட்டின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பை அடிப்படையாகக் கொண்டு அதன் பேரில் கடன் வாங்குவதற்கு இந்திய அரசிற்கு உரிமை உள்ளது. அதுபோல, சட்டப்பிரிவு 293ன்படி, மாநிலத்தின் மொத்த சொத்து மதிப்பின் அடிப்படையில் அந்தந்த மாநிலமும் இந்திய எல்லைக்குட்பட்ட பகுதிகளிலிருந்து கடன் பெற முடியும். இந்த இரண்டு பிரிவுகளின்படி, நிர்ணயிக்கப்பட்ட குறிப்பிட்ட கால வரையறையில் மத்திய அரசும் மாநில அரசும் முறையே நாடாளுமன்றம், மற்றும் சட்டமன்றங்களில் இதற்கான சட்டங்களை இயற்றிக் கொள்ள முடியும்.
இந்திய அரசியல் சட்டத்தை வகுக்கும்போதே, அரசியல் அமைப்பு சாசன அமர்வில் இது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டிருக்கிறது. பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் உருவாக்கப்பட்ட இந்திய அரசியல் சட்டம் 1935ல் அப்போதைய மாகாணங்களின் கடன் பெறும் உரிமை குறித்த சிக்கல்கள் எழுந்தால் அதன்மீது பிரிட்டிஷ் இந்திய கவர்னர் ஜெனரல் இறுதி முடிவு எடுப்பார் என வரையறுத்திருந்தது. அத்துடன், மாகாணங்களுக்குத் தேவைப்படும் கடன் தொகை குறித்தான முடிவை எடுப்பதில் தாதமப்படுத்தவோ இழுத்தடிக்கவோ கூடாது என்பதிலும் கவனம் செலுத்தப்பட்டது. சுதந்திர இந்தியாவில் மாகாணங்களுக்குப் பதில் மாநிலங்கள் உருவாகி அவற்றுக்கெனத் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகள் அமைந்ததால் இந்திய அரசியல் சட்டப்பிரிவு 293ன்படி மாநிலங்கள் தங்களுக்கானக் கடன்களைப் பெறும் உரிமை குறித்து வரையறுக்கப்பட்டிருந்தது. கூட்டாட்சித் தன்மையின் அடையாளமாக உள்ள இந்த சட்டப்பிரிவுக்கு மாறாக, கேரள அரசின் கடன் பெறும் உரிமையில் மத்திய அரசு நிர்ணயித்த உச்சவரம்பு என்பது மாநிலங்களின் உரிமை மீதான தாக்குதலாக மட்டுமின்றி, கூட்டாட்சித் தன்மையைக் கேள்விக்குறியாக்குவதாகவும் அமைந்துள்ளது.
கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடது முன்னணி ஆட்சி நடைபெற்று வருகிறது. மத்தியில் பா.ஜ.க தலைமையிலான தேசிய முற்போக்கு கூட்டணியின் ஆட்சி நடைபெறுகிறது. அரசியல்ரீதியாக பா.ஜ.க.வுக்கும் அதன் கொள்கைகளுக்கும் நேரெதிரான இயக்கமாக இடதுசாரிகள் இருப்பதால், இடது முன்னணி ஆளும் கேரள மாநிலம் பலவிதங்களிலும் மத்திய அரசால் புறக்கணிக்கப்படுவதை ஒக்கிப் புயல் பாதிப்பு உள்பட பல நேரங்களில் காண முடிந்தது. கேரள மாநில ஆளுநருக்கும் முதலமைச்சருக்குமான மோதல்களும் அடிக்கடி நிகழ்கின்றன.
எந்தெந்த மாநிலங்களில் பா.ஜ.க.வோ அதன் கூட்டணியோ ஆட்சியில் இல்லையோ அந்தந்த மாநிலங்களின் மீது ஜனநாயகத்திற்குப் புறம்பானத் தாக்குதல்கள் தொடர்வதைக் கடந்த 10 ஆண்டுகளாக மத்திய பா.ஜ.க அரசு மேற்கொண்டு வருகிறது. இதில் இலக்காகும் மாநிலங்களில் தமிழ்நாடும் உண்டு. நிதி தன்னாட்சியில் மாநிலங்கள் தள்ளாடினால் அதன் மொத்த உரிமையும் பாதிக்கப்பட்டு, மத்திய அரசை சார்ந்தே இருக்க வேண்டிய சூழலை உருவாக்கிவிடும். இது கூட்டாட்சி முறைக்கு நேர் எதிரானது.
பாரபட்சமற்ற-வெளிப்படைத்தன்மையான- நிதி ஆதாரமிக்க- மாநிலங்களையும் அதன் உரிமைகளையும் மதிக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தும் வகையில் மத்திய பா.ஜ.க. அரசு என்ற பூனைக்கு உச்சநீதிமன்ற வழக்கு என்ற மணியைக் கட்டியுள்ளது கேரள மாநிலம்.